ஒரு அழகான காடு. அதில் ஒரு கிராமம். பசுமையான புல்தரை. அதில் நம் முழங்கால் அளவிலான வீடுகள். பெரிய கட்டுமானமெல்லாம் இல்லாமல் மரங்களால் ஆனவை. அதன் கூரைகள் காளான் போன்ற அமைப்பில் அழகாக இருக்கும். அதுபோல பல வீடுகள். அந்த கிராமத்தைச்சுற்றி சிறிய ஓடை அதும் நம் கையளவே. அது தவிர நம் விரல் நடந்துபோகும் அளவுக்கு ஒரு பாலம். தவிர ஒரு அணையும் உண்டு. அதும் சிறியது. பொம்மை உலகம். அதில் நாம் சிறியதாக மாறி வசித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்?
பெல்ஜியத்தை சேர்ந்த சித்திரக்கதை படைப்பாளர் பியோ(peyo) என்பவருக்கு 1958 ல்இந்த சிந்தனை தோன்ற, உருவாகியது ஒரு அழகான கதை. இந்த கிராமத்தில் வசிக்கும் நபர்கள் ஒரேபோல உருவம் உள்ள ஆனால் நீலநிறமான குள்ளர்கள். வெளி நபர்களின் தொடர்பே இல்லாத அந்த உலகில் ஒரு முன்னூறு அளவிலான குள்ள மனிதர்கள் வாழ்ந்து வருவார்கள். அவர்களுக்கு ஒரு முதியவர் வழிகாட்டி.. ஒன்றாக இணைந்து பயிரிட்டு… ஒன்றாக அணைகட்டி… சகோதரர்களான வாழ்க்கை. பசியென்றால் பேக்கர் ஸ்மர்ஃப் கேக் தருவான். வீடுகட்ட இஞ்சினியர் ஸ்மர்ஃப். ஜீனியஸ் அறிவுரையாளன். சோம்பேறி ஸ்மர்ஃப், சிடுமூஞ்சி ஸ்மர்ஃப் ம் உண்டு. தனிப்பட்ட பெயரில்லாமல் அவரவரின் வேலை, குணம் கொண்டு அழைப்பார்கள். வேலை முடிந்து இரவானால் ஜூஸ் , கேக், இனிப்புகள் சகிதம் பார்ட்டி, அத்துடன் இன்னிசை ஸ்மர்ஃப்களின் கச்சேரி.
முக்கியமாக பணம், ஏற்றதாழ்வு, சண்டை ஏதும் இல்லாதா சமத்துவ வாழக்கை.
இதில் புதிதாக வெளி உலக பணம் நுழைந்தால், அது என்னவென்றே தெரியாத ஸ்மர்ஃப் உலகில் என்ன நடக்கும்? போட்டி இல்லாத இந்த அழகு உலகில் பதவி ஆசை வந்தால் என்ன ஆகும்? வெளி கிரகம் போக ராக்கெட் தயாரித்த ஸ்மர்ஃப் ன் ஆசையை நிறைவேற்ற ஒரு பொம்மை கிரகத்தையே நிர்மாணிக்கும் ஸ்மர்ஃப் மனிதர்களின் ஆற்றல் என்ன..? இதுபோல வெளி ஊடுருவல் , இந்த உலகில் ஏற்படுத்தும் விளைவுகளை யோசித்து கற்பனை செய்ய, நமக்குகிடைத்தது…. வயிறு வலிக்க சிரிக்கச்செய்யும் கதைகள்.
இது மட்டும் போதுமா… இந்த அழகிய குள்ளர்களை அடிமைப்படுத்த, இவர்களை தேடித்திரியும், சிரிப்பு சூனியக்கார வில்லன் கர்காமெல்… அவனது தோல்வியடையும் முயற்சிகள் என கலைகட்டுகிறது இந்த கதைகள்.
குறிப்பிட்டு சொல்லவேண்டியது, நமது குழந்தைகளின் கற்பனை ஆற்றலை சிறகடிக்கச்செய்யும் கதைகளம். அதனாலேயே இன்றுவரை ஸ்மர்ஃப் திரைப்படங்கள், சீரியல்கள் , சித்திரக்கதைகள் என வந்த அனைத்தும் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கின்றன.
தமிழில் லயன் / முத்து காமிக்ஸ் குழுமம் இந்த ஸ்மர்ஃப் வரிசையில் இதுவரை எட்டு கதைகளை வெளியிட்டுள்ளார்கள். குழந்தைகளை படிக்கச்செய்யுங்கள். பெறுக யாம் பெற்ற இன்பம்.
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.