கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் இடத்தில் அதை ஒட்டி ஒரு காடு இருந்தது. அங்கு பல்வேறு மரங்கள் மிருகங்கள் பறவைகள் என அனைத்தும் வாழ்ந்து வந்தன..
அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் இருந்தன. அவை இரண்டும் படு சுட்டி. ஒரு இடத்தில் அவை இரண்டும் ஒன்றாக இருந்தால் அவ்விடமே மகிழ்ச்சியுடனும் குதூகலமாகவும் இருக்கும். சிட்டுக்குருவி கீச் கீச் என சப்தமிட, குரங்கு கையை அசைத்தும் காலால் குதித்தும் ஆடிக்காட்டும். இருப்பினும் அவை இரண்டிற்கும் நடுவில், தான் தான் பெரியவன்; தன்னைத்தான் அனைவருக்கும் பிடிக்கும் என்ற எண்ணம். இதனால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டனர்.
எப்படி என்றால் சிட்டுக்குருவி பறந்து செல்கையில் இந்த சுட்டிக் குரங்கு அதை தடுக்க இங்கும் அங்கும் தாவுவது, அதை பறக்கவிடாமல் சிறு பழங்களை எறிவது என செய்து வந்தது.
இதனால் அந்தக் குருவி பறப்பதற்கு சிரமமாக இருந்தது. இதை மனதில் வைத்துக் கொண்ட குருவி, இரு இரு எனக்கான தருணம் வரும்; அப்பொழுது உனக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறேன் என நினைத்துக்கொண்டது.
அதைப்போல ஒரு நாளும் வந்தது. குரங்கு மரக்கிளைகளில் தாவி தாவி விளையாடிய பொழுது அம்மரத்தின் மேல் இருந்த பாம்பை கவனிக்காது, அதற்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்து பழங்களை ருசித்துச் கொண்டு இருந்தது. அதைக் கவனித்த சிட்டுக்குருவி வேகமாக பறந்து வந்து அந்த பாம்பைச் சீண்டி விட்டது. என்னவென்று அறிவதற்கு முன்பே அந்த பாம்பு முன்னால் இருந்த குரங்கை நோக்கி சீற, இதை எதிர் நோக்கா குரங்கோ நிலை தடுமாறி உயர்ந்த கிளையில் இருந்து சரசரவென சரிந்தது. இதைக்கண்ட மற்ற மிருகங்கள் குரங்கைக் காப்பாற்ற, சிட்டுக்குருவியோ தன்னால் தான் இவ்வாறு ஆகி விட்டது என அனைவர் முன்னும் கூறி மன்னிப்பு கேட்டது.
இவற்றைப் பார்த்த வயது முதிர்ந்த யானை 🐘, நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதே நமது பலம். சிறு சிறு விளையாட்டு சண்டைகள் விபரீதத்தில் தான் முடியும். “நன்மை செய்தால் நன்மை பயக்கும்”. இன்றிலிருந்து இருவரும் பகைமை விட்டு நண்பர்களாக இருக்க வேண்டும் எனக் கூறியது யானை தாத்தா. அப்போது அங்கு வந்த சில வேடர்கள் அந்த யானையையும் குரங்கையும் பிடிக்க சுற்றி வளைத்தனர். இதை உணர்ந்த யானை தாத்தா, சிட்டுக்குருவியிடம் நீ வேகமாகப் பறந்து சென்று அனைவரையும் இங்கு வர வை என கூறியது. இதற்கிடையே குரங்கு சமயோசிதமாக ஒரு வேடன் தலையில் அமர்ந்து அவனைப் பிய்த்து எடுத்தது. அதற்குள் அனைத்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து அவர்களை ஒடச் செய்தன. யானைத் தாத்தா இருவரிடமும் “பாத்தீங்களா நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்ததால் தான் நம்மால் தப்பிக்க முடிந்தது. இனி இருவரும் நட்புடன் இருக்க வேண்டும் என கூறியது. இதனை உணர்ந்த சிட்டுக்குருவியும் குட்டிக் குரங்கும் தங்கள் தவறினை எண்ணி வருந்தின. அன்றிலிருந்து இருவரும் நண்பர்களாயினர்.
ஒற்றுமையோடு இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர்.
“”தீதும் நன்றும் பிறர் தர வாரா””
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.