புதிய நட்பு!

திரு.க்ரேவன் வந்து சென்ற அன்று இரவு மேரிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. மாமாவே தோட்டத்தைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துவிட்டார், இனிமேல் அதில் பல வேலைகள் செய்யலாம் என்று கற்பனை செய்தபடியே படுத்துக் கொண்டிருந்தவளை அன்று கேட்ட அதே அழுகுரல் மீண்டும் எழுப்பியது.

 யாருடைய அழுகுரல் அது என்று இன்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மெதுவாக நடந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அன்றொருநாள் திருமதி மெட்லாக் உள்ளே சென்று வந்தாரே, அந்த அறையிலிருந்து தான் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அதனுள் சென்றாள் மேரி. அது பெரிய அறையாக இருந்தது. அங்கிருந்த கட்டிலில் அவளது வயதை ஒத்த சிறுவன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான்

“நீயா அழுதது?” என்று மேரி அவனைக் கேட்க,

“ஆமாம். நான் தான் அழுதேன். நீ யாரு? பேயா? இல்லை பூதமா? திடீர்னு எங்கிருந்து வந்த?” என்று அவன் பதிலுக்குக் கேட்டான். மேரி அவனிடம் தான் யார், எப்போது வந்தேன் என்பதையெல்லாம் விளக்கினாள்.

“நீதான் அன்னிக்கும் அழுதியா? ஏன்? இப்படி ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கியே, நீ யாரு?” என்று விசாரித்தாள்.

“உன் மாமான்னு சொல்றியே, அவரோட மகன் தான் நான். என் பேர் காலின். நான் குறைமாதக் குழந்தையாப் பிறந்தேனாம். நான் பிறந்த சமயம் என் அம்மாவும் இறந்திட்டதால, எனக்கு உடல் நலம் ரொம்ப மோசமா இருக்கு. என் முதுகில் பலம் இல்லை. நான் எந்திரிச்சு நடந்தா என் முதுகு கூன் முதுகு மாதிரி வளைஞ்சு இருக்கும். அனேகமா சீக்கிரம் செத்துப் போய்டுவேன்னு நெனைக்கிறேன்” என்றான்.

“அப்படி எல்லாம் தெரியலையே? நீ என்னோட வெளியே வந்து விளையாடினா நல்லா இருக்கும்” என்று மேரி கூற,

“எல்லாரும் என்னைப் பாத்துக் கிண்டல் செய்வாங்க. என்னால நடக்க முடியாது நடந்தால் நான் விழுந்துடுவேன்” என்றான் காலின்.

‘ஐயோ பாவம்! இவன் தனியாவே இருக்கானே?’ என்று நினைத்தபடியே அறையைச் சுற்றிப் பார்த்தாள் மேரி. அங்கு ஒரு அழகான பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதையே அவள் உற்றுப் பார்க்க,

“இதுதான் எங்க அம்மா. இவங்க இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என்றான் காலின்.

“உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு இவங்களப் பத்தி ஒரு ரகசியம் தெரியு.ம் யார்கிட்டயும் சொல்ல மாட்டியே?” என்று கேட்டவள், “உங்க அம்மா ஒரு தோட்டம் வச்சுருந்தாங்க..” என்று ரகசிய பூந்தோட்டத்தை பற்றி விலாவாரியாகக் கூறினாள். டிக்கன் பற்றியும் கூறினாள்.

“எனக்கு இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. நாளைக்குக் காலையிலயும் இங்க வரியா? உன்கூட விளையாடுறேன்” என்றான் காலின்.

“என்னை இங்கே வர விட மாட்டாங்களே?” என்று மேரி வருத்தப்பட,

“எனக்கு உடம்பு சரியில்லை இல்லையா, அதனால நான் சொன்னா எல்லா வேலைக்காரங்களும் கண்டிப்பா கேக்கணும்னு அப்பா சொல்லிருக்காங்க. நான் சொன்னா அவங்க உன்னைக் கூட்டிட்டு வருவாங்க” என்று காலின் அதிகாரமாகக் கூறினான். வாயை மூடிக்கொண்டு கலகலவென்று சிரித்த மேரி, “எனக்கு உன்னைப் பாத்தா இந்தியாவில் பார்த்த இளவரசர் மாதிரி தெரியுது” என்றாள்.

“அது யாரு?” என்று காலின் கேட்க, “நான் இந்தியாவில் இருக்கும் போது அரசர்களுடைய மகன்களைப் பார்த்திருக்கேன். அவங்க இப்படித்தான் சின்ன குழந்தையாய் இருந்தாலும் குரல்ல ரொம்ப அதிகாரத்தோட பேசுவாங்க. அவங்க சொன்னா எல்லாரும் கேக்கணும்” என்றாள் மேரி.

“அப்படியா நான் இளவரசர் மாதிரியா இருக்கேன்?” என்று காலின் கேட்டான்.

“ஆமா. நீ பேசுறது அதே மாதிரிதான் இருக்கு. நான் இப்ப போயிட்டு வரேன்” என்று கூறி உறங்கச் சென்றாள் மேரி.

 மறுநாள் திருமதி மெட்லாக் மற்றும் மார்த்தாவிடம் மேரியைத் தன் அறைக்கு அழைத்து வருமாறு கூறினான் காலின். அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது திரு.க்ரேவன் காலின் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தாரே, அதனால் மேரியை அவனது அறைக்கு  அழைத்துச் சென்றனர்.

அன்று முதல் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்ததால் தினமும் மேரி காலினின் அறையில் வந்து விளையாடினாள். அதனால் காலின் மகிழ்ச்சியாக இருந்தான்.

மழை ஓய்ந்த பின் ஒரு நாள் மேரி காலினுடன் விளையாட வராமல் தோட்டத்துக்குச் சென்று நட்டு வைத்திருந்த செடிகளின் வளர்ச்சியைப்  பார்ப்பதற்காகப் போய்விட்டாள். மழை பெய்திருந்ததால் பல செடிகள் நன்றாக வளர்ந்திருந்தன. அன்று டிக்கனும் வந்திருக்கவே மண்ணை ஒதுக்குவது, உதிர்ந்து கிடந்த இலைகளை அகற்றுவது, செடிகளுக்குப் பாத்திகள் உருவாக்குவது போன்ற நிறைய வேலைகளைச் செய்து விட்டு அன்று மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றாள்.

 ஆனால் மேரி விளையாட வராததால்  அதிக கோபம் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் காலின். மிகுந்த கோபத்தில் அவன் இருப்பதாக மார்த்தா சொல்லவும் அவனைப் பார்க்கச் சென்ற மேரியிடமும் கத்தினான்.

“ஏன் இன்னைக்கு விளையாட வரல? யாருக்குமே என்மேல் அன்பு இல்லை” என்றபடி ஓவென்று கத்தினான். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசி எறிந்தான்.

 பதிலுக்கு மேரியும் அவனைவிட சத்தமாக, “இந்த மாதிரி கத்திக்கிட்டே இருந்தேன்னா மத்தவங்கள மாதிரி நானும் பயந்துடுவேன்னு நினைக்காதே” என்றாள்.

 “நீ ஒரு சுயநலவாதி. அதான் என்னைப் பாக்க வரல” என்று காலின் கூற,

“நீதான் சுயநலவாதி. தோட்டத்துல நான் வச்சிட்டு வந்த செடிகள், அங்க இருக்குற மிருகங்கள், பறவைகள் எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா? உனக்கு தெரியுமா, டிக்கன் உன்னைக் கூட அங்க கூட்டிட்டு வர சொன்னான். அங்க உள்ள தூய்மையான காற்றும் பச்சைச் செடிகளும், பூக்களும் உன்னோட உடல்நிலையில் நல்ல மாற்றத்தைக் குடுக்கும்னு சொன்னான்”

காலினுக்குக் கோபம் சற்றுக் குறைந்தது.

“சரி! அப்ப நானும் வரேன். என்னையும் உங்க நண்பனா ஏத்துக்குவீங்களா?” என்று காலின் கேட்க, “கண்டிப்பா! நீ ஏற்கனவே என்னோட நண்பன் தான்” என்றாள் மேரி.

மறுநாள் டிக்கன் மற்றும் அவனது பறவைகள், விலங்குகள் அனைத்தையும் தன்னைப் பார்க்க கூட்டி வர வேண்டும் என்று காலின் வேலைக்காரர்களிடம் கூற, அவர்கள் டிக்கனை வர அனுமதித்தனர். புதிதாகக் கிடைத்த நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தான் காலின். தன்னை சக்கர நாற்காலியில் வைத்துத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்லும்படி கூற, வேலைக்காரர்கள் உதவியுடன் மேரியும் டிக்கனும் அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.

-தொடரும்.

(அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments