டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம். சில நம்பிக்கை மனிதர்களைத் தான் இந்த இதழின் இவர் யார் தெரியுமா பகுதியில் பார்க்க போகிறோம். ஆட்டிசம் பாதித்த நிலையிலிருந்து சாதித்தவர்களும் உண்டு.அதில் டெம்பிள் கிராண்டின் என்பவர் முக்கியமானவர். தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆட்டிச நிலையாளர் என்று கூறுபவரும் உண்டு.
டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில் பல்வேறு வகையான சென்சரி பிரச்சனைகளை சந்தித்தவர். தனது தகவல் தொடர்பாற்றலை மேம்படுத்திக் கொண்டு நிகர் சராசரி வாழ்வை(near normal life) அடைந்த சாதனையாளர். சிறுவயதில் அவருக்கு இருந்த எண்ணற்ற சிக்கல்களில் ஒன்று தொடு உணர்வைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பம். அதாவது எதை இறுகப் பற்றுவது, எதை மென்மையாகப் பற்றுவது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது. சிறுவயதில் அவர் வீட்டில் வளரும் பூனைகளைத் தூக்கினால் அவை வலியால் கதறுமாம். ஏனெனில் இன்னொரு உயிரைத் தொடுகிறோம் என்று மென்மையாகக் கையாளும் திறன் டெம்பிள் கிராண்டினுக்கு அப்போது இருக்கவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் இந்த தொடுவுணர்வு சிக்கல் அவரை பாடாய் படுத்தியது. இதற்கு தன் உடலுக்கும், சுற்றியிருக்கும் காற்றுவெளிக்குமான தொடர்பை தன்னால் சரியாக உள்வாங்க முடியாததே காரணம் என்று புரிந்து கொண்ட டெம்பிள், தானே ஒரு கருவியை வடிவமைத்தார். ஹக் மெஷின்(Hug machine) என்ற அக்கருவி நரம்பியல் குறைபாடுகளினால் தொடு உணர்வில் சிக்கல் கொண்டோருக்கான வரப்பிரசாதமாக அமைந்தது. உடலுக்குத் தேவையான அழுத்தத்தை(Deep Pressure Stimulation) தரும் இக்கருவியின் மூலம் தனது புலன் உணர்வு சிக்கலில் இருந்து வெற்றிகரமாக வெளி வந்தார் டெம்பிள். பூனைகளை தூக்கக் கூட முடியாதவராக இருந்தவர் இன்று கால்நடை அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
டெம்பிள் கிராண்டின் என்ற ஆங்கில திரைப்படமும் வெளிவந்துள்ளது. தமிழில் “ஹரிதாஸ்” என்ற படமும் ஆட்டிச நிலை சிறுவனை பற்றியது. அவன் பின்னாளில் பெரிய ஓட்டப்பந்தய வீரன் ஆவான் என்பதாக காட்டியிருப்பார்கள். அதில் டீச்சராக சினேகா நடித்து இருப்பார். அந்த டீச்சர் தான் கடைசி வரை அவனுக்கு துணையாக இருப்பார்.
ஆட்டிசநிலையில் இருக்கும் ஐஸ்வர்யா புதிர்க்கட்டங்கள் எனப்படும் பஸில் அடுக்குவதில் திறமையானவர். ஆயிரம் துண்டுகள் கொண்ட பஸிலையும் எவ்வித சிரமமுமின்றி சரியாக அடுக்கிவிடும் சமத்தர். மூன்று வயதில் தொடங்கிய இவரின் பஸில் ஆர்வம் முப்பதுவயதை தாண்டியபின்னும் தொடர்கிறது. இவரது பஸில் சேர்க்கும் திறனுக்காகவே, இவரை ”பஸில் குவீன்” என்று அழைக்கிறார்கள்.
ஆட்டிசம் குறைபாடு என்று கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்.அவர்களை இந்த சமூகமும் ஒதுக்காமல் அரவணைத்து வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
எத்தனையோ ஆட்டிசம் குழந்தைகள் பாரா ஒலிம்பிக் என்று சொல்லப்படுகிற மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் ஒலிம்பிக்கில் பரிசுகளை அள்ளி வருக்கிறார்கள். இசை அநேகக் குழந்தைகளுக்கு இயல்பாக வருகிறது.கார்த்திக் என்ற ஆட்டிசம் பாதித்த இளைஞர் பாட்டு போட்டியில் கலந்து கொன்டு அருமையாக பாடியதை பார்த்திருப்பீர்கள். கார்த்திக் இப்போது சினிமாவிலும் பாடுகிறார்.
உண்மையில் இந்தக் குழந்தைகள் அதிசய குழந்தைகள் தான். எதையும் கவனிக்காமல் விளையாடுவதுபோல் இருந்தாலும், இந்தக் குழந்தைகளிடம் சில மேம்பட்ட திறமைகள் இருக்கும். ஓவிய திறமை, அபரிமிதமான நியாபக சக்தி, கணித புலமை, இசை ஆர்வம் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் அதீத திறன் இருக்கும். பிரபல நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், சதத்தில் சதமடித்தவரான சச்சின், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் மிகக்குறைந்த நிலை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களே…..
ஆட்டிசம் குழந்தைகள் அனைவரும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் அல்ல, சில குழந்தைகளிடம் ஆட்டிசத்தோடு சேர்த்து மூளை வளர்ச்சி குறைபாடும் இருக்கலாம்.
இவர்களைச் சரியாக புரிந்து கொண்டு பயிற்சியளிக்கும் போது அவர்களைப் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க வைக்க முடியும்.
இந்த உலகம் எல்லோருக்குமானது. அன்பால் உலகை வெல்வோம். வாழ்க வளத்துடன்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.