ஓடு! ஓடு! இடத்தைப் பிடி!

பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது. 

குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர். 

“என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார். 

பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தாள். 

இன்றும் மித்து பால்கனி வழியே அழைத்தான். அவனுடைய குரல் கேட்டு தாத்தா எட்டிப் பார்த்து, 

“என்ன மித்து?” என்று கேட்டார். 

“உங்கள இல்ல பட்டு தாத்தா! பாட்டியதான் கூப்பிட்டேன்.” என்றான் மித்து. 

“பார்ரா..” என்று வியப்புடன் கூறிய தாத்தா, 

“பார்வதி! பக்கத்து வீட்டு பொடியன் உன்னதான் கூப்பிடறான்..” என்றார். 

“என்ன மித்து?” என்று கேட்ட பாட்டியிடம்,

“இன்னிக்கு என்ன விளையாட்டு சொல்லித் தர போறீங்க பாட்டி?” என்று கேட்டான். 

“விளையாட்டா.. சாயந்திரம்தான் சொல்வேன்னு சொன்னேனே மித்து! மறந்துட்டியா” என்று பாட்டி செல்லமாகக் கேட்டாள். 

“ம்.. சரி பாட்டி..” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே, தாத்தாவைப் பார்த்து கண் சாடை செய்து விட்டு உள்ளே போய் ஔிந்து நின்று கொண்டான் மித்து. 

இதைக் கவனித்த தாத்தா, அவனுக்கு ஒப்புதல் செய்வது போல லேசாய் தலையசைத்தார். பின்னர், பாட்டியைப் பார்த்து,

“ஆமா.. இன்னிக்கு என்ன விளையாட்டு?” என்று யதார்த்தமாகக் கேட்பது போலக் கேட்டார். 

“மித்துகிட்டயே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்.. உங்களுக்கு எதுக்கு சொல்லணும்.. நீங்களும் விளையாடப் போறீங்களா?” என்ற கிண்டலாகக் கேட்டாள் பாட்டி. 

ம்ஹூம்.. இவ கிட்டேந்து விஷயத்தைக் கறக்க முடியாது.. என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தாத்தா, பக்கத்து வீட்டு பால்கனியைப் பார்த்து, தன் கீழுதட்டைப் பிதுக்கிக் கொண்டு, தன் வலது கை கட்டை விரலை தலை கீழாய் (👎) கவிழ்த்துக் காட்டினார். மித்து தன் தலையை அசைத்துக் கொண்டே உள்ளே போனான். 

பாட்டி சத்தமில்லாமல் தனக்குள் சிரித்துக் கொண்டாள். 

அன்று மாலை வழக்கம் போல குடியிருப்பு வளாகத்தின் விளையாட்டுத் திடலில் குழந்தைகள் எல்லாம் கூடியிருக்க, வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பாட்டி புதிய விளையாட்டினை கற்றுக் கொடுத்தாள். 

அதன்படி நான்கு சதுரடி அளவு கொண்ட பெரிய பெரிய சதுரங்கள் சமமான இடைவெளிவிட்டு வரையப்பட்டன. 

சதுரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறுவனும் சதுரத்தின் நடுவில் மித்துவையும் என ஒரு சதுரத்துக்கு ஐந்து சிறுவர்களை நிற்க வைத்தாள் பாட்டி. 

நடுவிலிருக்கும் மித்துதான் கேச்சர்! சதுரத்தின் மூலையில் நிற்கும் சிறுவர்கள் அடுத்த மூலைக்கு ஓட, நடுவில் இருக்கும் மித்து அந்த காலியான மூலையைப் பிடிக்க வேண்டும்! மூலையை மித்து பிடித்துவிட்டால், மூலையைத் தவற விட்ட சிறுவன்தான் அடுத்த கேச்சர்! இப்படியே சதுரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாட வேண்டும். 

mithu6

இதைச் சொல்லிக் கொடுத்து விட்டு பாட்டியும் அவர்களுடன் கொஞ்ச நேரம் ஓடிப் பிடித்து விளையாடினாள். 

குழந்தைகள் எல்லாரும் பாட்டியுடன் உற்சாகமாக விளையாடினர். 

“பாட்டி! எல்லா வெளையாட்டையும் விட இது சூப்பரா இருக்கு பாட்டி!” என்றான் மித்து! 

“ஆமா பாட்டி!” என்று மற்ற குழந்தைகளும் இதை ஆமோதித்தனர். 

ஓடி ஓடி விளையாடி களைப்படையும்போது நடு நடுவே காகிதம் வைத்து 4 கப்ஸ் செய்யவும் கற்றுக் கொடுத்தாள் பாட்டி! 

ஐந்தாறு சதுரங்கள் இருந்ததால் எல்லா குழந்தைகளுமே குதூகலமாக விளையாடினார்கள். 

பார்வதி பாட்டி அடுத்ததாக என்ன விளையாட்டு சொல்லித் தரப் போகிறாள் என்பதை அடுத்த இதழில் பாக்கலாமா? 

பை! டாட்டா! 👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments