திடீரென்று கரண்ட் போய்விட்டது. நல்ல இருட்டு. கட்டிலில் இருந்து இறங்கி மெழுகுவர்த்தி ஏற்றப்போனான் ஜீவா. காலில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்ட கையால் தடவி பார்த்தான் . ஏதோ சாக்லேட் வாசம் அடிக்க,  ஆச்சரியமாக இருந்தது. மெழுகுவர்த்தியை ஏற்ற, அதன் குறைந்த வெளிச்சத்தில் அங்கே பெரிய அளவில் ஒரு பீரோ போல கீழே கிடந்தது. அருகில் சென்று பார்க்க, சட்டென்று கரண்ட் வந்துவிட்ட்து.

big chocolate
படம் மற்றும் கதை : அப்புசிவா

            அதை பார்த்து ஜீவாவுக்கு கண்கள் விரிந்தது. அது பீரோ அளவில் பெரிய சாக்லேட்.  அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவ்வளவு பெரிய சாக்லேட்டை அவன் பார்த்ததே இல்லை. ஒரு வேளை பொம்மையா என்று அதன் அருகில் சென்று தொட்டுப்பார்த்தான். அது மிக மென்மையாக இருந்தது. கொஞ்சம் உடைத்தான். சாப்பிடலாமா, வேண்டாமா என்று அவன் மனம் கணக்குப்போட்டுக்கொண்டு இருக்கும்போதே அவன் கை வாயில் போட்டுக்கொண்டது.

            ஆஹா… அற்புதமான சுவை. உண்மையிலேயே சாக்லேட்டுதான். நேற்று அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு கிஃப்ட் தருகிறேனென்று சொல்லியிருந்தார். அது இவ்வளவு பெரிய கிஃப்ட்டாக இருக்கும் என்று அவனால் கற்பனை பண்ணமுடியவில்லை. அந்த சாக்லேட் துண்டுகளை அவன் ஆசை தீர எடுத்து எடுத்து சாப்பிட்டான். கொஞ்சம் எடுத்து தன்னுடைய ஸ்னாக்ஸ் பாக்ஸ் முழுக்க வைத்துக்கொண்டான். நாளை பள்ளியில் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். எனினும் நண்பர்களை இங்கேயே கூட்டிவந்து இந்த சாக்லேட்டை இங்கேயே அனைவரும் உடைத்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் அவனுக்கு தோன்றியது.

            சாப்பிட்டது திகட்ட ஆரம்பிக்க, அவன் அந்த சாக்லேட் மீது ஏறி குதித்தான். அவன் கால் அச்சு அதன் மீது அடையாளங்களை ஏற்படுத்தியது. அதன் பின் அதன் மீது சறுக்கல் விளையாண்டான். கையில் ஒரு ஊசி போல் எடுத்து சாக்லேட் மீது கீறி படம் வரைந்தான். கொஞ்சம் போரடிக்க, அவன் அதில் இருந்து குதிக்க, தாகமாக இருந்தது. தண்ணீர் குடிக்க கிச்சனுக்குள் நுழைந்தான்.

            அங்கே இன்னுமொரு ஆச்சரியம். அங்கே மேங்கோ ஜூஸ் அட்டை டப்பாவில்  இருந்தது. அது மாடியில் வைத்திருக்கும் ஒரு தண்ணீர் டேங்க் அளவில் இருந்தது. தன் கையில் இருந்த ஊசியால் அதன் மீது ஒரு ஓட்டை போட, அதிலிருந்து பைப்பில் வருவது போல ஜூஸ் கொட்டியது. ஆசைதீர குடித்தான் ஜீவா. அதன் பின் அங்கே கொட்டுவதை அவனால் நிறுத்த முடியவில்லை. அது ஆறுபோல் ஓட ஆரம்பித்த்து.

            ஜீவா அந்த ஆற்றில் மிதக்க ஆரம்பித்தான். இனிப்பும், மாம்பழ வாசனையும் அந்த அறை முழுக்க நிறைந்திருந்தது. கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தது. திடீரென்று சத்தம் கேட்க ஜீவா திரும்பி பார்த்தான்.

            வெளியே இருந்து ராணுவவீரர்கள் போல அவைகள் வரிசையாக வந்தன. அதெல்லாம் எறும்புகள். கிட்டத்தட்ட அவன் அளவில் இருந்தன. அப்போதுதான் தான் மிகவும் சுருங்கி குள்ளமாக ஆகிவிட்டது அவனுக்கு தெரிந்தது. வந்த எறும்புகள் அவனை அப்படியே தூக்கின. ஜீவாவுக்கு பயம் பிடித்துக்கொண்டது. கத்த ஆரம்பித்தான். அந்த எறும்புகள் அவனை தூக்கிச்சென்று ஹாலில் தொபீரென்று போட்டது.  “ காப்பாத்துங்க “ என்று அவன் கத்த , அவை கோரஸாக “ஹேப்பி பர்த்டே டூ யூ…” என்று பாட ஆரம்பித்தன.

            சட்டென்று விழித்து பார்த்தான் ஜீவா. அப்பா அவன் அருகில் உட்கார்ந்து “ஹேப்பி பர்த்டே டூ யூ…”  என்று பாடிக்கொண்டிருந்தார்.

            “என்ன ஜீவா தூக்கத்தில் காப்பாத்துங்க…னு கத்திட்டு இருந்த…” என்றார் அப்பா.

            “ஒண்ணுமில்லபா… கனவு போல…” என்றான் ஜீவா. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது.

            “சரி எழுந்திரு… குளிச்சு வா…வெளிய போலாம்…” என்ற அப்பா, அவன் கையில் ஒரு சாக்லேட் பாரை கொடுத்துவிட்டுச்சென்றார். அது அவன் கனவில் வந்த சாக்லேட் போலவே சின்னதாக இருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments