அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.

நீண்ட தொலைவு நடந்து வனத்தின் ‌உட்பகுதியை அடைந்தார்கள். கதிரவனின் கதிர்கள் ஊடுருவ முடியாத அளவு இருட்டாக இருந்த அந்த இடத்தின் நடுவில் பிரம்மாண்டமான மரம் ஒன்று இருந்தது. கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் நன்றாகப் பழுத்த கனிகள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. கனிந்த அந்தப் பழங்களின் நிறமும், அவற்றில் இருந்து கிளம்பிய மணமும் காண்போரைக் கவர்ந்திழுத்தன.

“வளர்ந்த நமக்கே இந்தப் பழங்களைப் பார்த்தவுடன் பறித்து உண்ணும் ஆவல் மனதில் எழும்போது அந்தக் குழந்தைகளுக்கு ஆசை வந்ததில் தவறேயில்லை” என்று துருவன் தனது நண்பர்களிடம் சொன்னான்.

அந்த இடத்தில் சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள். வருணனோ அந்தக் குரங்குகளோ கண்களுக்குத் தென்படவில்லை. அருணனோ, “இந்த இடத்திற்குத் தான் வருணன் வந்தான். இப்போது அவர்களைக் காணவில்லையே!” என்று கவலையுடன் அழ ஆரம்பித்து விட்டான்.

அப்போது கீழே கிடந்த ஒரு கருப்புக் கயிறை, அபூர்வன் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட அருணன் பாய்ந்து போய் அந்தக் கயிறை எடுத்து அதைத் தன் கைகளில் வைத்து ஆராய்ந்து பார்த்தான்.

“இந்தக் கயிறு வருணன் கழுத்தில் கட்டியிருந்தது. எங்களோட பாதுகாப்புக்காகன்னு சொல்லி, எங்க குழுவில இருக்கற‌ ஒரு பெரியம்மா கட்டிவிட்டாங்க. இதோ பாருங்க, என்னோட கழுத்திலயும் இருக்கு” என்று தன் கழுத்தில் இருந்த அந்தக் கறுப்புக் கயிறைக் காட்டினான். அதே போலத் தான் இருந்தது.

“இந்தக் கயிறு இங்க கிடப்பதைப் பார்க்கும் போது வருணன் இங்கே தான் அருகில் எங்கயாவது இருக்கணும். வாங்க எல்லாருமாச் சேந்து அவனைத் தீவிரமாத் தேடுவோம்” என்று துருவன் சொல்ல, ஆளுக்கொரு பக்கமாக அவர்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்கள்.

துருவனுக்கு அப்போது தான் கௌதம‌ முனிவர் அவனுக்குக் கொடுத்திருந்த மாயக்கண்ணாடியின் ஞாபகம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு தனியாக ஓரிடத்திற்குப் போய் நின்று கொண்டு வருணனை மனதில் நினைத்துக் கொண்டு அந்தக் கண்ணாடியைப் பார்த்தான்.

அந்தக் கண்ணாடியில் தெரிந்த காட்சி பயங்கரமாக இருந்தது. ஒரு குகை போன்று இருந்த இடத்தில் ஒரு கம்பத்தில் வருணன் கட்டப்பட்டிருந்தான். அவனைச் சுற்றிலும் பல்வேறு வகைப் பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. அந்த இடத்தில் ஐந்து தலைப் பாம்பு ஒன்றின் சிலை இருந்தது. அதற்கு முன்னர் ஒரு பெரிய குழியில் தீ மூட்டப்பட்டு கணகணவென்று எரிந்து கொண்டிருந்தது. வருணனுக்கு அருகில் அவனுடன் சென்ற குரங்குகளும் கீழே மயங்கிக் கிடந்தன.

அந்தக் குகை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் மிக அருகில் தான் எங்கோ அந்த இடம் இருக்கிறதென்று துருவன் நம்பினான்.

அந்தக் கண்ணாடியை இடுப்பில் இருந்த பைக்குள் வைத்துக் கொண்டு தனது நண்பர்களைப் பார்த்துப் பேசப் போனான்.

‘எந்த இடமாக இருந்தாலும் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். வருணன் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான். விரைந்து சென்று அவனைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்’ என்று மட்டும் துருவனின் மனதில் தோன்றியது.

தனது நண்பர்களுடன் மீண்டும் அந்த இடத்திலேயே தேட, அவர்கள் நின்று கொண்டிருந்த பெரிய மரத்தின் அடிப்பகுதியில் மிகப் பெரிய பொந்தொன்று தெரிந்தது. அதிலிருந்து ஒரு சிறிய பாம்பு வெளியே வந்து தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் பொந்திற்குள் சென்றது

பொந்தின் வாய் மிகவும் பெரியதாக ஒரு சிறிய மனித உருவம் நுழையும் அளவு  இருந்தது. பாம்பு வேறு அதிலிருந்து வெளியே வந்ததால், அந்தப் பொந்தில் நுழைந்து போய்ப் பார்க்கலாம் என்று துருவன் முடிவெடுத்தான்.

கிளி, மயில் இரண்டையும் அருணனுடன் துணைக்காக விட்டு வைத்தான் துருவன். அவர்களிடம்,

“மயிலண்ணா, நீங்களும் கிள்ளி கிளியுமாக அருணனை அழைத்துக் கொண்டு அந்தக் கலைஞர்களின் இருப்பிடத்தில் பத்திரமாக சேர்த்து விட்டு, இதே இடத்துக்குத் திரும்பி வந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருங்கள். நான், அபூர்வன், அணில் மூன்று பேருமாக இந்தப் பொந்தின் உள்ளே நுழைந்து தேடிப் பார்க்கிறோம். இங்கே வருணன் கிடைக்கவில்லை என்றால் வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்” என்று சொல்ல, மயிலுக்கு முதலில் இந்த யோசனை பிடிக்கவில்லை.

ஆனால் துருவன் எந்த முடிவெடுத்தாலும் யோசித்து ஏதோ ஒரு வலுவான காரணத்தோடு தான் எடுத்திருப்பான் என்று நம்பியதால், சரியென்று ஏற்றுக் கொண்டது. வருணன் இருக்கும் இடத்தில் நிறையப் பாம்புகளை துருவன் பார்த்ததால் தான் துருவனுக்கு மயிலை அழைத்துச் செல்ல இஷ்டமில்லை. பாம்புக்கும் மயிலுக்கும் ஆகாது என்பதால் தான் துருவன் அப்படி நினைத்தான். அதுவுமில்லாமல் ஏற்கனவே வருணன் ஆபத்தில் சிக்கி இருப்பதால், அருணனை முதலில் பத்திரமான இடத்துக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.

முதலில் அணில் அந்தப் பொந்தில் நுழைந்தது. அணிலைத் தொடர்ந்து  துருவனும், துருவனைத்  தொடர்ந்து அபூர்வனும் பொந்தின் உள்ளே நுழைந்து நகர ஆரம்பித்தார்கள்.‌ அந்த வழி போகப் போக அகன்று கொண்டே சென்றது. சிறிது தூரம் சென்றவுடன் ஒரு புதிய இடத்தை அடைந்தார்கள்.

நிறையப் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்த பாம்புகளின் நகரமொன்றைப் பார்த்தார்கள். குகைகள் போன்ற அமைப்பில் குட்டிக் குட்டி மாளிகைகள் கண்ணுக்குத் தெரிந்தன. மாளிகைகளின் வாயிலில் பெரிய பாம்புகள் காவல் காப்பது போலக் குறுக்கே வழியை அடைத்துக் கொண்டு படுத்திருந்தன.

நடுவில் இருந்த பெரிய குகைக்குள் நிறைய பாம்புகள் உள்ளே ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.

“இது பாம்புகளின் குடியிருப்பாக இருக்கும். நடுவில் இருப்பது நாகங்களின் தலைவருடைய குகை அல்லது இந்த நாகங்கள் வழிபடும் தெய்வத்தின் ஆலயமாக இருக்கலாம். இந்த மாதிரி பாம்புகளின் நகரம் பற்றி எனது தந்தை எனக்குக் கூறியிருக்கிறார்” என்றான் அபூர்வன்.

“இரண்டில் எதுவாக இருந்தாலும் இங்கு தான் வருணன் இருக்க முடியும். இதற்குள் எப்படியாவது புகுந்து தேட வேண்டும். வருணனின் உயிருக்கு ஆபத்து வருவதற்கு முன்னால் அவனைக் காப்பாற்ற வேண்டும்” என்று துருவன் கூற, ‘என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கத் தொடங்கினார்கள்.

“என் கழுத்தில் என்னுடைய ஆசானான கௌதம முனிவர் தந்த பாதுகாப்பு மணி இருக்கிறது. எனக்கு எந்த ஆபத்தும் யாராலும் ஏற்படுத்த முடியாது.‌ நான் துணிந்து உள்ளே போகிறேன். அணில் தம்பி தனது உருவத்தைக் குறுக்கிக் கொண்டு எனது தோளில் அமர்ந்து என்னுடன் உள்ளே நுழையட்டும். நீ வெளியே இருந்து கவனமாக நடப்பவற்றை கவனித்துக் கொண்டேயிரு. உதவி தேவையானால் வந்தால் போதும்” என்று அபூர்வனிடம் சொல்லி விட்டு, துருவன் துணிச்சலுடன் கிளம்பினான்.

குகையின் வாயிலில் காவலுக்கு இருந்த நாகங்கள், துருவனைப் பார்த்து சீறின.

துருவன் கௌதம முனிவர் அவனிடம் கொடுத்திருந்த சில வேர்களை எடுத்துக் கசக்கி அந்த நாகங்களின் முன் காட்ட, அவை மயங்கிக் கீழே சரிந்தன.

 உள்ளே நுழைந்ததும் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த வருணனைக் கண்டார்கள். அங்கேயிருந்த நாகங்கள் ஏதோ பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. யாகத் தீ போன்று நடுவில் இருந்த குழியில் தீ எரிந்து கொண்டிருந்தது.

அந்த யாகத்தீக்கு முன்னால் ஒரு பெரிய ராட்சதப் பல்லியும் , மலைப்பாம்பு ஒன்றும் உட்கார்ந்திருந்தன. இரண்டுமே நடந்து கொண்டிருந்த பூஜையைத் தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தன.

அவை உட்கார்ந்திருந்த தோரணையில் இருந்து அந்த மலைப்பாம்பு அங்கிருந்த பாம்புகளின் தலைவராகவும், அந்த ராட்சதப் பல்லி அங்கு பூஜைகளை நடத்தும் குருவாகவும் இருக்கலாமென்று தோன்றியது.

நாகங்களை எதிர்த்துக் கொண்டு துருவன் உள்ளே நுழைய, புதிய நபரின் வருகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து நாகங்களும் துருவனைத் தாக்க, அவனை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்தன.

துருவன் கழுத்தில் இருந்த மணியை ஏற்கனவே அவன் தொட்டிருந்ததால், அவனைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் உருவாகியிருந்தது. நாகங்களால் அவனை நெருங்க முடியவில்லை. அவன் துணிவுடன் வருணனை நோக்கி முன்னேறினான். அவனைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டு, அணிலின் காதில் எதையோ இரகசியமாகச் சொன்னான்.

“வருணா , கவலைப்படாதே. உன்னைக் காப்பாற்றத் தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். உனது சகோதரன் அருணன் சொன்ன தகவல்களின் உதவியால் உன்னைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறோம். பயப்படாமல் இரு. இங்கேயிருந்து நீ கிளம்பும் நேரம் வந்துவிட்டது” என்று வருணனிடம் துருவன் சொன்னான். வருணனும், மனதில் புதிதாகத் துளிர்த்த நம்பிக்கையுடன் துருவனைப் பார்த்தான்.

அணில் துருவனின் தோளில் இருந்து இறங்கிப் பெரிய உருவத்தை எடுத்தது. வருணனைத் தன் மேல் உட்கார வைத்துக் கொண்டு அங்கிருந்து பறந்தது. அணில் கிளம்பும் போது துருவன், வருணனின் கையில் சில வேர்களைக் கொடுத்தான்.

அங்கே தங்களின் கண் முன்னே அரங்கேறிய நிகழ்வுகளை வியப்புடன் அந்த நாகங்கள் பார்த்துக் கொண்டிருந்தன. தலைவனான மலைப்பாம்பும், குருவான ராட்சதப் பல்லியும் கோபத்துடன் துருவனை முறைத்தன.

அணில் வெளியே சென்றதும் அபூர்வனிடம் வருணனை ஒப்படைத்தது. அவன் கையில் துருவன் தந்த வேர்களையும் தந்தது.

“அபூர்வன் அண்ணா, நீங்கள் உடனே வருணனைக் கூட்டிக் கொண்டு நாம் வந்த வழியே போய், மயிலண்ணாவிடம் வருணனை ஒப்படைத்து விட்டு, அவனைக் குழுவினரிடம் பத்திரமாகச் சேர்க்கச் சொல்லுங்கள். இந்த வேர்கள் உங்கள் அருகில் நாகங்கள் நெருங்காமல் உங்களுக்குப் பாதுகாப்பு தரும்” என்று சொல்லி, அவன் கையில் அந்த வேர்களையும் தந்துவிட்டு, மீண்டும் குகைக்குள் நுழைந்தது.

அபூர்வன் உடனடியாக வருணனை அழைத்துக் கொண்டு அவர்கள் வந்த வழியிலேயே திரும்ப நடக்க ஆரம்பித்தான்.

அணில் உள்ளே சென்று துணிவுடன் துருவன் அருகே நின்றது. அணிலின் பெரிய உருவத்தையும் அதனுடைய இறக்கைகளையும் பார்த்து அங்கிருந்த சிறிய நாகங்கள் நடுக்கத்துடன் ஒதுங்கி நின்றன.

தலைவனான மலைப்பாம்பு தலையைத் தூக்கி துருவனிடம் பேச ஆரம்பித்தது.

“உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்களுடைய இருப்பிடத்திற்கே வந்து எங்களுடன் மோதுவாய்! எங்களுடைய பூஜையைத் தடுத்து நிறுத்தியதோடு நாங்கள் பலி கொடுக்க வைத்திருந்த சிறுவனையும் விடுவித்து அவனை வெளியே அனுப்பி விட்டாய்! அவன் பிழைத்துப் போனால் என்ன? அவனுக்கு பதிலாக உன்னையும் இந்தக் குரங்குகளையும் பலியிட்டு எங்களுடைய பூஜையை முடித்து விடுவோம். எங்களுடைய குரு தியானத்தில் இருந்ததால் உன்னுடைய செயல்களை அவரால் நிறுத்த முடியவில்லை. இப்போது பார். உன்னை அவர் எப்படியாவது பிடித்து உனது சக்திகளை அழித்து விடுவார். மகாசக்தி கொண்ட அவர் முன்னால் உன்னால் நிற்க முடியாது” என்று சொல்ல, துருவன் கொஞ்சம் கூட பயமில்லாமல் குருவென்று பக்தியுடன் பாம்புகளால்  அழைக்கப்பட்ட ராட்சதப்பல்லியைப் பார்த்தான்.

அவன் கண்ணெதிரே ஏற்கனவே பிரம்மாண்டமான உருவத்தில் இருந்த அந்த ராட்சதப்பல்லி இன்னும் பெரியதாக வளர்ந்தது. அதன் உடல் பச்சை நிறமாக மாறியதோடு அதன் உடலிலிருந்து  பிரகாசமான ஒளி வீசியது. அதன் மூக்கில் இருந்து உஷ்ணக் காற்று , புஸ்புஸ்ஸென்று வெளியேறக் கண்களில் இருந்து தீப்பிழம்பு வெளியாகிக் கொண்டிருந்தது. அதனுடைய தோற்றம் பார்க்கவே பயங்கரமாகத் தான் தெரிந்தது.

துருவன் அந்த ராட்சதப் பல்லியைப் பார்த்ததும் அதனுடைய சக்தியைப் புரிந்து கொண்டான். சட்டென்று நிலத்தில் விழுந்து அந்த குருவை வணங்கினான். 

“ஐயா, உங்கள் இருவரையும் பணிவுடன் வணங்குகிறேன். எனக்கு உங்களுடன் தற்சமயம் போர் புரிய விருப்பமில்லை. நான் ஒரு முக்கியமான வேலைக்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். அந்த வேலை முடிந்ததும் நானே இங்கே வந்து என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.  அப்போது உங்களுடன் போர் புரிய சம்மதிக்கிறேன். நான் போரில் தோற்றுவிட்டால் என்னை நீங்கள் தாராளமாக பலியிட்டு உங்கள் பூஜையை முடித்துக் கொள்ளலாம். இப்போது என்னையும் எனது நண்பர்களையும் இங்கிருந்து போக விடுங்கள்” என்று மிகவும் அமைதியாகவும் பணிவோடும் பேசினான்.

-தொடரும்

(என்ன குட்டீஸ்! எல்லோரும் எப்படி இருக்கீங்க? எல்லோரும் எக்ஸாம்லாம் முடிச்சுட்டு, அடுத்த வகுப்புக்குப் போகத் தயாராயிருப்பீங்க. விடுமுறை நாட்களில் நிறையப் புத்தகங்களை வாசியுங்க. புத்தகங்கள் மூலமா நீங்க நிறையக் கத்துக்கலாம். புதுப்புது உலகங்களுக்குப் போகலாம்.

நம்ப கதையில துருவனை நாகங்கள் விட்டுருவாங்களா? அவனால் மலைக்கோட்டைக்குப் போகமுடியுதான்னு அடுத்த எபியில பாக்கலாம். தொடர்ந்து வாசியுங்க. நன்றி)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments