நான்காம் வகுப்பு ஆ பிரிவு அன்று அமளி துமளிப் பட்டது.
“டேய் ராஜா தான்டா இந்த வருஷம் லீடராகப் போறான் அப்புறம் அவன் வெச்சது தான் சட்டம்”.
“ஆமாம் டா சும்மாவே மிஸ்கிட்ட போட்டுக் குடுப்பான்டா”.
“ம்ம், நம்ம ப்ரித்வி மட்டும் பர்ஸ்ட்டு ரேங்கு வாங்குனான்னா இந்நேரம் அவனைத் தான் லீடரா செலக்ட் பண்ணிருப்பாங்க” என மாணவர்களின் குரல்கள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்க, முதல் பாட வேளை மணிக்கு முன்பாகவே வகுப்பாசிரியர் உள்ளே நுழைந்தார்.
“குட் மார்னிங்ங்ங் மிஸ்ஸ்ஸ்” என ஒத்திசைத்த ராகம் மாணவர்களிடம் இருந்து ஒலித்தது.
“குட்மார்னிங் பசங்களா இன்னிக்கு நம்ம க்ராமர்ல ப்ரசண்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ் எல்லாம் படிக்கப் போறோம்” என்று ஆசிரியரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “மிஸ் ஸ்ஸ் ஸ்ஸ்” என்ற குரல்கள் எழுந்து அடங்கிய படி இருந்தது.
“என்னடா எதுக்கு ஸ்ஸ்னு பாம்பு மாதிரி சத்தம் போட்டுக்கிட்டே இருக்கீங்க?”
“மிஸ் மிஸ் இன்னிக்கு நம்ம க்ளாஸ் லீடர் யாருன்னு சொல்றேன்னு சொன்னீங்க மிஸ்” என முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவன் எழுந்து நின்று கையைக் கட்டிக் கொண்டு சொன்னான்.
“ம்ம் ஆமாம்ல மறந்தே போய்ட்டேன் நம்ம க்ளாஸ் லீடர் யாருன்னு சொல்லுங்க பாப்போம்?” என கேட்டுவிட்டு மாணவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தார் ஆசிரியை.
“ராஜா தானே எப்போதும் படிப்புல விளையாட்டுல எல்லாம் ஃபர்ஸ்ட்டு அதனால் அவந்தான் லீடர்” என மாணவர்களின் கிசுகிசு குரல்கள் ஆசிரியையின் காதுகளுக்கும் எட்டியது.
இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவு எடுத்தவர், “அடுத்த ரெண்டு மாசத்துக்கு நம்ம க்ளாஸோட லீடர் பிருத்வி” என்று சொல்லி உற்சாகத்தோடு கை தட்டினார்.
ராஜா அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, மற்ற மாணவர்கள் அனைவரும் பிருத்வியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘நம்ம பெயரைத் தான் மிஸ் சொன்னாங்களா’ என்ற குழப்பத்தில் பிருத்வி இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளாமல் திருதிருவென விழித்த படி அமர்ந்திருந்தான்.
“பிருத்வி, நான் உன்னைத் தான் சொன்னேன்” என அவன் இன்னமும் எழாமல் அமர்ந்திப்பதைப் பார்த்த ஆசிரியை சொல்ல, சட்டென்று எழுந்து நின்றவனைப் பார்த்து அனைவரும் கை தட்டினர்.
மொத்த வகுப்பும் கை தட்டும் ஒலியைக் கேட்டதும் தானாகவே ஒரு பெருமிதம் வந்து பிருத்வியின் முகத்தில் ஒட்டிக் கொண்டது.
அதற்கு நேர்மாறாய் சோகமே உருவாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான் ராஜா. அந்த ப்ரீயட் முடியும் வரை அவன் தன்னிலையில் இல்லை. வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போகும் போது அவனும் அவரை பின்தொடர்ந்து சென்றான்.
தன் வகுப்பு மாணவர்கள் யாரேனும் பின் தொடர்ந்து வருகிறார்களா? என பின்னால் திரும்பிப் பார்த்தவனுக்கு யாரும் வரவில்லை என்று ஊர்ஜிதம் ஆனதும், “மிஸ், மிஸ்” என்று சற்று சத்தமாக அழைத்து விரைந்து போகும் அவரை தடுத்து நிறுத்தினான்.
“என்ன ராஜா? உடம்பு சரியில்லியா!” என்று கேட்டுக் கொண்டே அவன் சிவந்திருந்த மூக்கையும், கலங்கியிருந்த கண்களையும் பார்த்த ஆசிரியை அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
“இல்ல மிஸ், நான் தானே படிப்புல ஸ்போர்ட்ஸ்ல எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்டு அப்ப நான் தானே லீடர் ஆகணும். நீங்க… நீங்க ஏன் பிருத்வியை ஏன் லீடர்னு சொன்னீங்க” என்று மூக்குறிந்து கொண்டே கேட்டான்.
“கண்ணா, காட்டுக்கு ராஜா யாருன்னு உனக்குத் தெரியுமா?”
“ஓ தெரியுமே மிஸ் சிங்கம் தான் எப்போதுமே காட்டுக்கு ராஜா”.
“ம்ம் சிங்கத்தைக் கம்ப்பேர் செய்யும் போது புலி ரொம்பவே சக்தி வாய்ந்தது ஆனா எதுக்காக புலியைக் காட்டுக்கு ராஜாவா செலக்ட் செய்யாம, சிங்கத்தை செலக்ட் செஞ்சிருக்கோம்” என கையைக் கட்டி கொண்டு ராஜாவின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்தினார் ஆசிரியை.
விடை தெரியாமல் ராஜா விழிக்க, “இந்த கேள்விக்கான விடை தெரிஞ்சா நீ கேட்ட கேள்விக்கான விடையும் கிடைக்கும் ராஜா. நாளைக்கு காலைக்குள்ள என்னோட கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்க முடியுதான்னு பாரு, இல்லைன்னா காலையில வந்ததும் என்னை வந்து பாரு கண்ணா” என அவன் கன்னத்தை செல்லமாகத் தட்டிவிட்டுச் சென்றார் ஆசிரியை.
வீட்டிற்குச் சென்ற ராஜா, ஆசிரியையின் கேள்விக்கான விடையை தாய் தந்தையிடம் கேட்க, அவர்கள் கூகிளிடம் தகவல்களைத் தேடித் தந்தனர்.
மறுநாள் தன் கேள்விக்கான விடைத் தெரியப் போகும் மகிழ்ச்சியில் உறங்கியவன், அடுத்த நாள் எப்போதும் எழும் நேரத்திற்கு முன்னரே எழுந்து விரைவில் தயாராகி பள்ளியை வந்தடைந்தான்.
வகுப்பிற்குள் சென்று தன் உடைமைகளை வைத்தவன், ஆசிரியர்கள் அமரும் ஓய்வறைக்குச் சென்றான். அது இன்னமும் திறக்கப்படாமல் திண்டுக்கல் பூட்டை மாட்டிக் கொண்டிருந்தது.
“என்ன ராஜா, எதுக்காக இங்க வந்து வெயிட் பண்ற?” என டிசர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் சகிதம் வந்த உடற்பயிற்சி ஆசிரியர் கேட்கவும், “குட் மார்னிங் சார், எங்க க்ளாஸ் மிஸ்ஸுக்காக வெயிட் பண்றேன் சார்” என்று பவ்யமாக ராஜா சொன்னதும் அவர் தலையாட்டிவிட்டு சென்றார்.
ராஜாவின் வகுப்பாசிரியை தூரம் வருவது தெரிந்ததும், அவரிடம் ஓடோடிச் சென்றான்.
“மிஸ், மிஸ் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கெடைச்சிடுச்சு மிஸ்” என கத்திக் கொண்டே ஓடி வருபவனைப் பார்த்து அர்த்தமுடன் சிரித்துக் கொண்டே நின்றார் ஆசிரியை.
“மிஸ், சிங்கம் எப்போதும் கூட்டமாத் தான் வாழுமாம், அதோட மனைவி மக்கள் மட்டும் இல்லாம ஒரு பத்து பதினஞ்சு சிங்கத்தோட தான் சுத்துமாம். ஆனா புலி அதோட மனைவி குட்டின்னு மட்டும் கொஞ்சம் தனியா வாழுமாம்” என்று பதில் சொல்லிவிட்டு ஆசிரியைப் பார்த்தான் ராஜா.
“ம்ம் அப்புறம் வேற ஏதாவது இருக்கா?”
“அப்புறம் ராத்திரி நேரத்துல புலியை விட சிங்கத்து ரொம்ப நல்லா கண்ணு தெரியுமாம் மிஸ்” என்று ஆச்சரியத்தோடு சொன்னான் ராஜா.
“ரொம்ப சரி இதையெல்லாம் யோசிச்சுத் தான் நான் ப்ரித்வியை லீடரா தேர்ந்தெடுத்தேன் ராஜா”.
“புரியல மிஸ் என்ன சொல்றீங்க? இருட்டுல எங்க ரெண்டு பேருக்குமே கண்ணு தெரியாதே!” என குழப்பத்தில் எதிரொலித்தது ராஜாவின் குரல்.
“இல்லப்பா நான் அந்த அர்த்தத்துல சொல்லல, வகுப்பு தலைவன் தனக்குன்னு ஒரு குறுகிய வட்டம் அமைச்சுக்கிட்டு தன்னோட வேலைகள், தன்னோட நண்பர்கள்னு மட்டும் பாத்துக்கிட்டா சரி வராதில்லப்பா. நீ உனக்குப் புரிஞ்ச பாடத்த என்னிக்காவது மத்தவங்களுக்கு சொல்லிக் குடுத்துருக்கியா, அப்படியே யாராவது வந்து கேட்டாலும் முடியாதுன்னு சொல்லிடுவ தானே. ஆனா ப்ருத்வி அப்படி இல்லியே
“க்ளாஸ் லீடர்னா சில விஷயங்களைத் தானாவே முன்வந்து செய்யணும் பா. டீச்சர் சொல்ற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்கக் கூடாது. அதுக்குத் தான் சொன்னேன் இருட்டுல பாக்குற சக்தி வேணும்னு, அதாவது டீச்சர் சொல்லாமலே அவங்க அடுத்து என்ன கேப்பான்னு தெரிஞ்சுக்கிட்டு செயல்படுற நேர்த்தி” என ஆசிரியை விளக்கிச் சொன்னதும், ராஜாவின் சிரித்த முகம் வாட்டம் அடைந்தது.
“ராஜா, நீயும் இதை எல்லாம் ஃபாலோ செஞ்சீன்னா அடுத்த ரெண்டு மாசத்துல நீ தான் லீடர்” என ஆசிரியை சொன்னதும் கலக்கம் நீங்கி அவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராஜா.
ஆசிரியை, “என்ன அப்படி பாக்குற? நம்ம க்ளாஸ்ல ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை லீடரை மாத்தப் போறேன் அப்பத்தானே நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்”.
“அப்படியா மிஸ்! அப்பன்னா கண்டிப்பா நான் நீங்க சொல்றா மாதிரி நடந்து காண்பிச்சு அடுத்த லீடரா வருவேன்”.
“ஆல் தி பெஸ்ட் ராஜா!” என ஆசிரியை சிரிக்க, ராஜா மிகுந்த மகிழ்ச்சியோடும், தன்னம்பிக்கையோடும் அங்கிருந்து கிளம்பினான்.
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.