“என்னடா கண்ணா இப்படி வாய் விடாம இருமிட்டு இருக்கே?”
“ஆமாம் அத்தை, ராகுல் ரெண்டு நாளா இருமிட்டு இருக்கான், இருமல் மருந்து வாங்கிக் கொடுத்தேன், அது இன்னும் சரியாகலை!” என்றாள் ராதா.
“சரி, சரி நான் வந்துட்டேன் ல, இனிமே அவன் நல்லா ஆயிடுவான்!”
“பின்னாடி உள்ள முள்ளு முருங்கை மரத்தில் இருந்து ஒரு 20 இலையைப் பறிச்சு எடுத்துட்டு வா ராதா!”
“சரிங்க அத்தை, இதோ கொண்டு வர்றேன்!”
“அப்படியே ஒரு கப் இட்லி அரிசியை ஊற வச்சுடு!”
“அத்தை, நீங்க சொன்னபடி அரிசியை ஊற வச்சுட்டேன், இலையும் பறிச்சிட்டு வந்துட்டேன்!”
“சரி அரிசி ஒரு மணி நேரம் ஊறின உடனே, அதோட இந்த இலையை நல்லா அலம்பி, கையினால சின்னச் சின்னத் துண்டா கிள்ளிப் போடு; அதோட ஒரு ஸ்பூன் ஜீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, தேவையான உப்பு போட்டு நல்லா அரைச்சு எடுத்துத் தோசை வார்த்துக் கொடு! ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூணு தடவை சாப்பிட்டா, இருமல் எல்லாம் குணமாகிடும்.
இந்த அரைச்ச மாவிலேயே தேவையான அரிசி மாவு கலந்து, கெட்டியா வச்சுண்டு, வடை மாதிரியும் செய்து தரலாம். மதுரையில் எல்லாம் தள்ளுவண்டிகளில் ‘கீரை வடை’ ன்னு விப்பாங்க!”
“சரிங்க அத்தை, இப்போ நாம நம்ம வீட்டுல மரம் இருக்கு, எடுத்துக்கிட்டோம், இல்லாதவங்க என்ன செய்யறது!”
“கீரைக்கார அம்மா கிட்ட சொன்னா அவங்க கொண்டு வந்து கொடுத்துடுவாங்க!”
“நானும் இந்த மாதிரிச் செய்து தர்றேன் அத்தை!”
“ஆனா ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோ.. சளியோடு சேர்ந்த இருமலாவோ இல்ல காய்ச்சல் இருந்தாலோ கண்டிப்பா டாக்டர்கிட்ட போய்டனும்.. இந்த வைத்திய முறையில் இருமல் குணமாகலைன்னாலும் டாக்டர்கிட்ட கட்டாயம் கூட்டிட்டுப் போகணும். வறட்டு இருமலுக்குத் தான் இது சரியா இருக்கும். சரியா?”
“சரிங்க அத்தை!”
மதுரையில் இருக்கிறேன். M. A., M. P hil., முடித்திருக்கிறேன். நான் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். 30 வகை சமையல் இணைப்புப் புத்தகமாக மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி, அவள் விகடன், தேவதை (இப்போது வருவதில்லை)… போன்ற பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்போது தான் கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன். YouTube ஒன்றிலும் போட்டு வருகிறேன்.