ஆரவும் ஆரவ் அம்மாவும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ‘வீதி உலா’ சென்று வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். அப்படி வீதி உலா போகும் போது, அந்தத் தெருவில் உள்ள வீடுகளைப் பற்றி, அதன் வண்ணங்களைப் பற்றி, அவங்க பார்க்கும் எல்லாவற்றையும் பற்றி என்னவெல்லாம் தோணுதோ அதையெல்லாம்  பேசிக்கொண்டு போவார்கள்.

இந்த வாரம், அவங்க தெரு உலா போகும்போது  ஆரவ் ஒரு தர்பூசணி வியாபாரியைப் பார்த்தான். உடனே அதை வாங்கி தரும்படி கேட்டான். ஆரவ் அம்மா, “ஐயையோ, இந்த  வாரம் நான் கையில பணம் எடுக்காம வந்துட்டேன், அந்த வியாபாரி நம்ம வீட்டு பக்கம் வருவங்கல்ல அப்போ வாங்கிக்கலாம்” என்று அம்மா சொல்ல, ‘உடனே வாங்கி தாங்க’ என்று ஆரவ் அடம் பிடித்தான்.

watermelon

“கொஞ்சம் பொறுமையா இரு ஆரவ், வீட்டுக்கு போனதும் வாங்கி  தர்றேன், இந்த வியாபாரி வரலைன்னாலும் கடைக்கு போய் வாங்கி தர்றேன்” என்று அம்மா பதில் சொன்னார்.

“ஏம்மா நீங்க எப்பவுமே பொறுமையா இரு பொறுமையா இருன்னு சொல்றிங்க, நா கேட்டது  உடனே கிடைச்சாதான நல்லா இருக்கும். ஏன் பொறுமையா இருக்கணும் ? எது வேணும்னாலும் காத்திருக்கிறதுதான் பொறுமையா?” என்று கோபமாகக் கேட்டான் ஆரவ்.

அதற்கு ஆரவ்வின் அம்மா, “சும்மா காத்திருக்கிறது மட்டும் பொறுமை இல்லடா, கோபப்படாம காத்திருக்கனும், அதான் பொறுமையின் சிறப்பு. கோபப்படாம காத்திருக்கும்போது நமக்கு ஏற்று கொள்ளும் தன்மை வரும்,புரிந்து கொள்ள முடியும், நம்மை சுற்றி நடப்பதை ரசிக்க முடியும், கோபமில்லாத புரிதல் நமக்கு ஒரு அமைதியை கொடுக்கும். அது மட்டுமில்ல, அமைதியா காத்திருக்கும்போது நமக்கு புடிச்சத செய்ய தோணும், கவிதை, கதை, ஓவியம், கற்பனை, ரசனை, படைப்பாற்றல், தொடர்பு படுத்தி பார்க்கும் சமயோஜித புத்தி எல்லாமே தோணும்.”

ஆரவ் கவனமாகக் கேட்டான். அம்மா மேலும், “ஆனா எவ்வளவு நேரம் பொறுமையா இருக்க வேண்டியிருக்கும்ங்கிறதைத் தெரிஞ்சு வச்சிருக்கது நல்லது, நேரம் தெரியாம காத்திருக்கிறது முன்னேற்றத்துக்குத் தடையா ஆகிடக் கூடாது. நேரம் காலம் அறிஞ்சு பொறுமையா இருப்பது நல்லது” என்றார்.

“சரிம்மா!” என்றான் ஆரவ்.

“அம்மா கண்டிப்பா இன்னைக்கு சாய்ந்திரத்துக்குள்ள தர்பூசணி வாங்கித் தர்றேன், நீ பொறுமையா காத்திரு” என்று அம்மா கூற, மகிழ்ச்சியுடன் தலையாட்டி பொறுமையாகக் காத்திருக்க ஆரம்பித்தான் ஆரவ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
3 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments