அந்த காட்டில் எல்லா வகையான விலங்குகளும் வாழ்ந்து வந்தன.

ஒரு குட்டி புள்ளிமான் தன் தாயோடு வாழ்ந்துக்கிட்டு இருந்தது. தினமும் வானத்தில் புகைய கக்கிட்டு சரட்ட்ட்னு பறந்து போறத, குட்டி புள்ளிமான் எப்பவும் ஆர்வத்தோட பார்க்கும்.

ஒரு நாள் அது தன் அம்மாகிட்ட, “அம்மா மேல பறந்து போறது என்ன பறவை?”

“அது பறவை இல்ல. அது விமானம். அதில் ஏறி கடல் தாண்டி கூட பயணிக்கலாம்”

“ஓ அப்ப நானும் விமானத்துல போகலாமா?” என உற்சாகமாக கேட்டது குட்டி மான்.

“இல்ல இல்ல அதெல்லாம் மனிதர்கள் வாழ்ற பகுதியில இருக்கும். நீ அங்கல்லாம் போக முடியாது.

குட்டி மான் உடனே ரொம்ப சோகம் ஆகிடுச்சு. ஆனா, அம்மாகிட்ட அழுது அடம்பிடிக்கல.

ஒரு நாள் குட்டி மான், “நான் விளையாட போறேன் மா” அப்டினு சொல்லிட்டு போச்சு.

அப்ப வானத்துல சரட்ட்ட்ட்… சத்தம் கேட்டதும் புள்ளி மான் மனிதர்கள் பகுதிக்கு போய், அந்த சரட்ட்ட்ல ஏறி வானத்தில பறவை போல பறக்கனும்னு ஆசப்பட்டது.

அதனால அது மனிதர்கள் வாழ்விடப் பகுதி நோக்கி நடக்க ஆரம்பிச்சது.

charat
படம்: அப்புசிவா

குட்டி மான் தனியா போறத சிங்கக்கூட்டம் பார்த்தது. அதுல இருந்த அம்மா சிங்கம், குட்டி மானை கூப்பிட்டது
” எங்க போற?”

புள்ளி மான், உண்மைய சொன்னா சிங்கம் தன்னை விடாதுனு யோசிச்சு… “அம்மா தான் சிறுத்தை வீட்டுக்கு போய் அவங்க குட்டிகளோட விளையாட சொன்னாங்க”

“ஓ, சிறுத்தை வீட்டுக்கா போற? தனியா போயிடுவியா?” மான் பதில் சொல்லறதுக்கு முன்னாடியே சிங்கம்மா, அந்தப் பக்கமா போன கரடி தாத்தாவ கூப்பிட்டது.

“கரடி தாத்தா இந்த மான் குட்டி சிறுத்தை வீட்டுக்கு போகனுமாம்.. பத்திரமா கூட்டிட்டு போங்க”

சிங்கத்துக்கு நன்றி சொல்லிட்டு திருதிருனு முழிச்சிட்டே கரடி தாத்தா கூட நடந்து வந்தது மான்.

சிறுத்தையோட வீட்டுக்கிட்ட வந்ததும், கரடிய ஏமாத்திட்டு தப்பிச்சு காட்டை விட்டு வெளில ஓடிடலாம்னு நினைச்சது.

ஏன்னா, சிறுத்தையோட வீடு காட்டோட எல்லைப்பகுதில இருந்தது. அதுக்கப்பறம் கொஞ்சம் அடர்ந்த காடும் அதைத் தாண்டினா மனிதர்கள் பயணம் செய்யும் பாதை இருக்கறதாகவும் மான் அம்மா சொல்லிருக்காங்க. அது மான் குட்டிக்கு நல்லா நியாபகம் இருந்தது.

சிறுத்தையோட வீடு பக்கமா வந்ததும் கரடிய விட்டு வேகமா ஓட ஆரம்பிச்சது மான்குட்டி.

மான்குட்டி ஏன் ஓடுதுனு கரடிக்கு புரியவே இல்ல. மான்குட்டி தொலைஞ்சு போனா சிங்கம்மாக்கு பதில் சொல்லனுமே அப்டின்னு பயமா இருந்தது கரடி தாத்தாவுக்கு.

“ஏ புள்ளிமானே ஓடாத நில்லு. இந்த வயசான காலத்துல உன் கூட என்னால ஓட முடியாது” அப்டின்னு கத்திக்கிட்டே பின்னாடியே ஓட பார்த்தது கரடி.

கரடியோட சத்தத்த கேட்ட சிறுத்தை பாய்ஞ்சு போய் புள்ளிமான தடுத்து நிறுத்திடுச்சு.

“என்ன கரடி தாத்தா? என்ன ஆச்சு? ஏன் மான்குட்டிய பாத்து கத்துறீங்க”

“உங்க வீட்டுக்கு விளையாட வருதுனு இதை என் கூட அனுப்பி வச்சாங்க சிங்கம்மா. ஆனா இந்த மான்குட்டி உங்க வீட்டு பக்கமா வந்ததும் என்னை விட்டுட்டு வேற பக்கமா ஓட ஆரம்பிச்சுடுச்சு”

“சரி நீங்க போங்க, நான் பாத்துக்கறேன்” அப்டினு கரடிய அனுப்பிட்டு, “எங்க வீட்டுக்கு ஏன் வந்த? என்ன விசயம்” அப்டின்னு அதட்டலா கேட்டது சிறுத்தைம்மா.

சிறுத்தையோட கோபத்த பார்த்து பயந்து போன மான்குட்டி நடந்ததை எல்லாம் சொல்லிடுச்சி.

“என்ன? சரட்ட்ட் ல பறக்க போறியா? அதெல்லாம் சாத்தியமில்ல. அந்தப் பக்கம் போறது ரொம்பவும் ஆபத்தானது” அப்டின்னு அறிவுரை சொன்னது சிறுத்தை.

ஆனா, அதை கேக்காம மான்குட்டி அழ ஆரம்பிச்சுடுச்சு.

“அழாத, போய் சிறுத்தை குட்டிக்கு விளையாட்டு காட்டிட்டு இரு” சிறுத்தை சொல்லிட்டு அம்மா மானுக்கு தகவல் சொல்ல மரம்தாவி குரங்க கூப்பிட போனது.

மரம் தாவி குரங்கு தான், அந்த காட்டில போஸ்ட்மாஸ்டர் வேலை பார்த்தது. வேகவேகமா மரத்தில் தாவி தாவி போகும். சீக்கிரமா போய் தகவல் சொல்லிடும். அதனால குரங்கை கூப்பிட்டு மான் அம்மாவ கூட்டிட்டு வர சொன்னது சிறுத்தைம்மா.

சிறுத்தை குட்டி பிறந்து ஒரு வாரம் தான் ஆச்சு. காட்டில இருக்கற எல்லா விலங்குகளும் சிறுத்தைகுட்டிகள பத்தி தான் பேசிட்டு இருந்தன.

சிறுத்தை குட்டிகள மான்குட்டிக்கு ரொம்ப புடிச்சிருந்தது. பாக்க பூனைக்குட்டிகள் போல குட்டியா அழகா இருந்தன.

கொஞ்ச நேரம் விளையாடினதுக்கு அப்பறமா அது மெதுவா அங்கிருந்து தப்பிச்சு காட்டின் எல்லை பக்கமா போயிடுச்சு.

தன்னை யாரும் பார்க்கல. காட்டை தாண்டி வெளில வந்துட்டோம். இனி சரட்ல ஏறி வானத்தில பறக்காலாம்.. இப்படியெல்லாம் விதவிதமா கற்பனை செஞ்சுக்கிட்டே மனிதர்கள் பயணம் செய்யுற சாலைக்கு வந்தது மான்குட்டி.

முதல்ல அது சாலைய கவனிக்கவே இல்ல. கால் ரொம்ப கடினமான பரப்பில் படுறதையே தாமதமா தான் உணர்ந்தது.

சுதாரிச்சு “என்ன நடக்குது?” நிமிர்ந்து பார்த்தா நடு சாலையில் நின்னுட்டு இருந்தது.

அப்ப அதிவேகமா ஒரு கார் அந்த சாலையில வந்தது.

அதை பாத்ததும் மான் மிரண்டு போயிடுச்சு. அந்தக் காரில் இருந்து தப்பிக்க இடது பக்கமா ஓடினது. அங்க அந்தப்பக்க சாலையில வந்த இன்னொரு பெரிய வாகனம் பெரிய சத்தத்தோட நின்னது.

பயந்து போய் வலது பக்கமா குதிச்சது. என்ன செய்யறது புரியாம சாலையோட இரண்டு பக்கமும் மாறிமாறி குதிச்சிக்கிட்டு இருந்தது.

சாலையோட இரண்டு பக்கமும் நிறைய வாகனங்கள் அப்படி அப்படியே நிக்க ஆரம்பிச்சுடுச்சு.

மான் பக்கத்தில இருந்த வாகனங்கள்ள இருந்து மனிதர்கள் கையில் வினோதமான பொருளோட இறங்க ஆரம்பிச்சாங்க.

எல்லார் கையிலையும் அந்த பொருள் இருந்தது. எல்லாரும் மான்குட்டிய சுத்தி அந்த பொருளோட நின்னாங்க.

அப்ப திடீர்னு ஒரு பையன் கையில வச்சிருந்த அந்த வினோத பொருள்ல இருந்து சத்தம் வந்தது

“காவாலய்யா காவாலய்யா..”

பயந்து போன மான்குட்டி மிரண்டபடி, திரும்ப காட்டுக்குள்ள ஓட ஆரம்பிச்சது.

திரும்பி திரும்பி பாத்துட்டே ஓடி, எது மேலயோ மோதி விழுந்து எந்திரிச்சு நிமிர்ந்து பார்த்தது.

ஒரு பக்கம் மான் அம்மா, ஒரு பக்கம் சிங்கம்மா ஒரு பக்கம் கரடிதாத்தா ஒரு பக்கம் சிறுத்தைம்மா.

இன்னொரு பக்கம் வினோத சத்தத்தோட மனிதர்களோட வினோத பொருள்.

கரடித்தாத்தா பக்கமா ஓடி எல்லார்கிட்ட இருந்தும் தப்பிச்சு காட்டோட உள்பக்கத்த நோக்கி மின்னல் வேகத்துல பாய ஆரம்பிச்சது மான்.

இப்ப வானத்தில சரட்ட்ட் சத்தம் கேட்டது. ஆனா மான்குட்டி வானத்த நிமிர்ந்து பாக்கவே இல்ல.

What’s your Reaction?
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments