வணக்கம் பூஞ்சிட்டுகளே!

என்ன… எல்லாருக்கும் பள்ளித் தேர்வுகள் முடிஞ்சு லீவு  விட்டாச்சா ?

லீவா? வருஷம் பூராவும் அப்படி தானே போச்சு.. அப்படிங்கறீங்களா!

புரியுது குட்டீஸ்.. இந்த கோவிட் பெருந்தொற்று நம்ம எல்லாரையும்  தவிர்க்க முடியாத ஒரு அசாதாரணமான சூழலுக்கு தள்ளியிருக்கு. இந்த நிலைமையில் இருந்து நாம சீக்கிரம் விடுபட இரவு பகல் பாக்காம மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இயங்கிக்கிட்டு இருக்காங்க.. நாம  பாதுகாப்பா இருக்கணும்ங்கிறதுக்காக அயராது கஷ்டப்படுற அவங்க எல்லாருக்கும்  நாம செய்யற பெரிய உதவி, முறையா முகக்கவசம் போட்டுக்கிட்டு, அடிக்கடி கைகளை நல்லா கழுவிட்டு, வீட்டுக்குள்ள சமத்தா இருக்கறது தான்! கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமா இருக்கிற இந்தக் காலகட்டத்துல  லீவாச்சேன்னு  அம்மா அப்பாவை வெளில கூட்டிட்டு போக சொல்லி தொந்தரவு செய்யாம, பூஞ்சிட்டுகள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு சமத்தா பொறுமையா இருப்பாங்களாம்.. இந்த நோய்க் கிருமியை ஓட ஓட விரட்டுவாங்களாம் … சரி தானே குட்டீஸ்?!

இப்போ, நம்ம கதைக்கு போகலாமா?!

வழக்கமா நம்ம ‘கதை கதையாம் காரணமாம்’ பகுதில ஒரு ஊர் , அந்த ஊரோட கதைன்னு தெரிஞ்சுக்குவோம். இந்த மாதம்  ஒரு மாறுதலுக்காக, ஒரு ஊருன்னு இல்லாம  குட்டி குட்டியா நிறைய ஊர்களைப் பத்தித் தெரிஞ்சுக்கப்போறோம்..

முதல்ல நாம தெரிஞ்சுக்க போற ஊரோட பேர்- பெருநாழி.

பெருநாழி அருப்புக்கோட்டை மற்றும் கமுதிக்குப் பக்கத்துல இருக்கு. 

perunazhi

நாழி அப்படின்னா பொருட்களை அளப்பதற்கு நம்ம முன்னோர்கள் பயன்படுத்தின ஒரு அளவுகோல். உழக்கு என்றும் இதை நம்ம வீட்டு பெரியவங்க சொல்வாங்க. இன்னும் கூட நம்ம வீட்டு சமயலறையில் கொஞ்சம் தேடி பாத்தீங்கன்னா நம்ம அம்மாக்களும் பாட்டிக்களும்   இதை கண்டிப்பா வெச்சிருப்பாங்க.

naazhi
நாழி

சரி, விஷயத்துக்கு வருவோம்.. இந்த ஊர்ல இருந்த அளவுகோல்கள் அளவில் பெருசா பயன்பாட்டில் இருந்ததானால இந்த ஊருக்கே பெருநாழின்னு பேர் நிலைச்சுருச்சாம்.

திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, பெருநாழி மாதிரி, ஒரு ஊரோட சிறப்பு விஷயத்தோடு, அந்த  ஊரோட பெயரும் சேர்ந்து வருவதும் ஒரு கட்டத்துல அந்த சிறப்பு விஷயமே பின்னாளில் அதே  ஊருக்கு பெயராக மாறுவதும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தானே!

இப்படி சிறப்பு விஷயங்கள், பொருட்கள் மட்டுமில்லாம  ஊருக்கே பெருமை சேர்க்கும் நல்ல மனிதர்களாலும் அந்த ஊரோடே பேறே மாறிப்போன கதைகளும் நம்ம தமிழகத்துல உண்டு.

உதாரணமா, நம்ம சிங்காரச் சென்னைல இருக்கும் முக்கிய பகுதியான தண்டையார்பேட்டைக்கு இப்படி ஒரு கதை உண்டு.

18 நூற்றாண்டு வாக்குல  இந்த ஊரு பேரு  ‘லெப்பை காடுகள்’ன்னு தான் இருந்திருக்கு, இந்த இடத்துல, தொண்டி என்ற ஊரிலிருந்து வந்த குன்னங்குடி மஸ்தான் சாஹிப் என்கிற ஒரு இஸ்லாமியத் துறவி எப்போதும் தியானம் பண்ணிக்கிட்டு இருப்பாராம். அவரை தொண்டியார் அதாவது  தொண்டி ஊரிலிருந்து வந்த அடியார் என்று அருகிலிருந்த மக்கள்  கூப்பிட ஆரம்பித்து, காலப்போக்கில் தொண்டியார் தியானம் செஞ்ச லெப்பை காடுகள், தொண்டியார்பேட்டை ஆகி மிக சமீபத்துல மக்களோட பேச்சு வழக்குல மருவி தண்டையார்பேட்டை என்றுமானது.

பேட்டை அப்படின்னா கூட்டமாக மக்கள் வாழும் பகுதி என்று பொருள். அப்போ அரக்கோணம் பக்கத்துல இருக்குற ராணிபேட்டைன்னா ராணிகள் வாழும் பேட்டையான்னு கேக்காதீங்க. ராணிப்பேட்டைக்கும் ஒரு கதை இருக்கு!

ராணிப்பேட்டை, 1771ல நவாப் சாதுத்தல்லா கான் என்பவரால் கட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட ஊர். அப்போதைய போரில் வீர மரணம் தழுவிய தேசிங்குராஜா அவர்களின் நினைவாக அவரோட மனைவியும்  அவரது நினைவாகவே இருந்து இறந்து போனாங்களாம். அவர்களோட வீரத்துக்கு அடையாளமா, அப்போ நவாப் கட்டின ஊர் தான் இப்போ நமக்கெல்லாம் ராணிப்பேட்டை.

இதே போல, சங்க காலத்துல குமண மன்னர்ன்னு ஒருத்தர் இருந்தாராம். இவர் மிகப்பெரிய வள்ளலாம். வள்ளல் அப்படின்னா, என்ன.. ஏது.. நேரம் காலம்ன்னு பாக்காம எளியவர்களுக்கு எந்நேரமும் உதவும் நல்ல உள்ளங்கள்ன்னு அர்த்தம். இந்த குமண மன்னரது நாட்டுக்கு அப்போ முதிரம்ன்னு பேராம். குமண மன்னர், குமண வள்ளல்ன்னு பேர் பெற்று, பின்னாளில் அவர் தலைநகரமாக ஆட்சி செஞ்ச ஊர் குழுவூர் என்றாகி இப்போ கொழுமம் என்று பேரோடு நிலைச்சு நிக்குது. இப்போ கொழுமம், திருப்பூர் மாவட்டத்துல இருக்கு.

இப்படி, நம்ம வரலாற்று பயணத்துல பின்னாடி போய்கிட்டே இருந்தோம்ன்னா, நிறைய ஊர்க் கதைகளும், அந்த கதைகளுக்கு பின்னாடி இருக்கிற மிக சிறந்த மனிதர்களும், அவர்களோட  சிறப்பான வாழ்க்கை வரலாறும் தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க ஆச்சரியமா இருக்குல்ல குட்டீஸ்..  ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ன்னு நம்ம வள்ளுவர் தாத்தா சும்மாவா சொன்னாரு?!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments