இதுவரை:

சாகச விரும்பியும் சேட்டைக்காரனுமான தேரை பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் உடையது. அதன் நண்பர்களான எலி, மூஞ்சுறு மற்றும் தேன்வளைக் கரடி மூவரும் இணைந்து அதை  நல்வழிப்படுத்த முயல்கின்றனர். ஒரு மோட்டார் காரைத் திருடி அதில் வேகமாகப் போய் பல விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்துக்காகப் போலீசார் தேரையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இனி…

சிறையில் பல வாரங்கள் சிரமம் அனுபவித்த நிலையில் தேரை எப்படியாவது தப்பித்துப் போக வேண்டும் என்று நினைத்தது. சிறைக் காப்பாளரின் மகள் தேரையிடம் அன்பு செலுத்தி வந்தாள். அவளிடம் தேரை தன் கஷ்டங்களைச் சொல்ல, அவளது உதவியுடன் சலவை செய்யும் பெண்ணைப் போல உடைகள் அணிந்துகொண்டு ரகசியமாக தப்பித்தது தேரை.

 வெளியில் வந்த தேரை ஒரு ரயில் நிலையத்தை அடைந்தது. ரயில் ஓட்டுநர் ஒருவரிடம் சென்று, “நான் ஒரு சலவைத் தொழிலாளி. என்னோட மகள் வீட்டுக்குப் போறேன்.. பணத்தையும் உடைமைகளையும் தொலைச்சிட்டேன்” என்று அழுதது.

“சரி வா.. உன்னை நான் போற இடத்தில இறக்கி விடுறேன். அதுக்குப் பதிலா நீ என்னுடைய வீட்டிற்கு வந்து துணிகளை சலவை செய்து குடுப்பியா?” என்று ஓட்டுநர் கேட்க, தேரை ஒத்துக் கொண்டது.

தேரையை சலவை செய்யும் பெண் என்று நம்பிய ஓட்டுநர் ரயில் இன்ஜினில் தன் அருகில் அமர்த்திக் கொண்டு பயணித்தார். பின்னாலேயே இன்னொரு சிறிய ரயில் பெட்டியில் போலீசார் சிறையிலிருந்து தப்பித்த தேரையைத் துரத்திக் கொண்டு வருவது தெரிந்தது.

அதைப் பார்த்த தேரை, ஓட்டுநரிடம், “நான் செய்யாத குற்றத்துக்காக என்னைக் கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க.. நான் கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்துருக்கேன்” என்று கூறிக் கண்ணீர் விட்டது. தேரை கூறியதை உண்மை என்று நம்பிய ஓட்டுநர், ரயில் ஒரு சுரங்கப் பாதையைக் கடக்கும் நேரத்தில் தேரையை ரகசியமாகத் தப்பிக்கச் செய்தார்.

 பாதி வழியில் இறங்கிய தேரை, ஒரு பெண்மணியைப் பார்த்து, “எனக்கு ஏதாவது வேலை குடுங்க.. எனக்கு நல்லா துணி துவைக்கத் தெரியும்” என்று கூறியது. அந்த பெண்ணும் தேரையைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று துணிகளைத் துவைக்கும் வேலையைக் கொடுத்தார்.

 ஆனால் உண்மையில் தேரைக்குத் துணிகளைத் துவைக்கவே தெரியாது. துவைக்கிறேன் என்ற பெயரில் மேலும் துணிகளை அழுக்காக்கி விட, அந்தப் பெண் கோபித்துக்கொண்டு தேரையை வெளியே துரத்தி விட்டாள்.

தெருவில் தனித்து விடப்பட்ட தேரை, அந்த வழியே சென்ற வாகனத்தை நிறுத்தித் தன்னை ஏற்றிச்செல்லுமாறு கேட்க, அந்த வாகனத்தில் வந்தவர்களும் பரிதாபப்பட்டு தேரையைத் தங்களுடன் ஏற்றிக்கொண்டனர். ஏறிய பின்னர் தான் அந்தக் கார் தான் முதலில் தேரை திருடி விபத்துக்குள்ளாகி, அதன்பின் சிறைக்கும் செல்ல வைத்த வாகனம் என்பது தேரைக்குத் தெரிய வந்தது.

தன்னுடைய இயல்பான குணம் தலைதூக்க, “நான் காரை ஓட்டுறேனே ப்ளீஸ்..” என்று காரின் உரிமையாளரிடம் கேட்டது தேரை. மாறுவேடத்தில் இருந்ததால் காரில் இருந்தவர்களும் தேரையை சரியாக அடையாளம் தெரியாமல் வண்டி ஓட்டுவதற்கு அனுமதி கொடுத்தனர். சிறிது தூரம் மெதுவாக வண்டியை ஓட்டிய தேரை திடீரென்று வெகு வேகமாக ஓட்ட ஆரம்பித்தது.

 பயந்துபோன காரின் உரிமையாளர் வண்டியை நிறுத்த முயல, முடியாமல் போனதால் கார் அருகிலிருந்த குளத்தில்  உருண்டு விழுந்தது. காரில் இருந்தவர்கள் அனைவரும் குளத்துக்குள் விழுந்தனர்.  தேரையைப் பிடிப்பதற்காகத் தங்கள் வாகனத்தில் அதுவரையில் பின்தொடர்ந்து வந்திருந்த போலீஸ்காரர்கள், அவர்கள் அனைவரையும் மீட்டு, தேரையை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-தொடரும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments