பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்தது. இப்போது போல அலைகள் இல்லாமல் அந்த பெருங்கடல் அமைதியாக, நீல வண்ணத்தில் கண்களைக் கொள்ளை செய்யும். அந்த பெருங்கடலுக்கு நடுவே, அடி ஆழத்தில் ஓர் அழகான நாடு இருந்தது.

 கடல் நாட்டில் திமிங்கலங்களும், சுறா மீன்களும்,  டால்பின்களும், கடற்குதிரைகளும், குட்டி குட்டி வண்ண வண்ண மீன்களும், கடற்பாசிகளும், கடல் தாவரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. கடலின் அடி ஆழத்தில் நம் இமயமலையை விடப் பெரிய மலைகள் கூட இருக்கும்.

இந்த அழகான கடல் நாட்டின் அரசன் சுத்தன். சுத்தனின் ஆட்சியில் கடல் நாட்டில் அனைத்துக் கடல்வாசிகளும்  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

பெயருக்கேற்றபடி நம் சுத்தனுக்கு  மிகவும் பிடித்த விஷயம் சுத்தம். அவனுக்கு அவன் நாடு ரொம்ப ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும்; நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பார்க்க பளிச்சென்று இருக்க வேண்டும்; தங்கள் அரசனைப் போலவே அந்தக் கடல்நாட்டில் வாழும் அனைத்துக் கடல் உயிர்களுக்கும் சுத்தம் மிகவும் பிடித்து விட்டது. பல மீன்கள் தங்கள் நாட்டைச் சுத்தம் செய்வதைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்து நாட்டை மினுமினுக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

  அப்பொழுது சுத்தனுக்கு சவாலாக ஒன்று நடந்தது. அந்தப் பெருங்கடலின் ஒரு சிறு கரையோரத்தில் புதிதாக ஓர்  ஊர் உருவானது. அந்த ஊரில் குடியேறிய மக்கள் ரொம்பவும் வால்தனம் செய்பவர்கள். மக்கள் தாங்கள் சாப்பிட்ட பொருட்கள், இறைவனுக்குப் படைத்த பூக்கள், தங்களுடைய உடைந்த பாத்திரங்கள், பழைய உடைகள், பல புதுவித சாயங்கள் இவை அனைத்தையும் கடலுக்குள் கொட்டினார்கள்.

 இவை எல்லாமே ஒவ்வொன்றாக கடலின் அடி ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டன.

வழக்கமாக அழுக்குகளைச் சாப்பிட்டு சுத்தம்‌ செய்யும் மீன்கள் இந்தக் குப்பைகளைச்‌ சாப்பிட அவற்றிற்கு ஜீரணம்‌ ஆகாமல் வயிறு வலிக்குத் தொடங்கியது. பரிசோதித்த மீன் மருத்துவர், “இவற்றையெல்லாம் இனி சாப்பிடாதீர்கள்.. உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை” என்றார்.

alaiyum naamum

“அப்போ இவற்றையெல்லாம் எப்படி சுத்தம் செய்வது?” என்று ‌தங்களுடைய அரசனிடம்  தங்களுடைய சந்தேகத்தைக் கேட்டார்கள்.  ‘என்ன செய்வது?’ என்று சிறிது நேரம்‌ யோசித்த சுத்தன் பின்,  “ஓர் பெரிய ஆழத்தில் அந்தப் பொருட்களை எல்லாம் கொண்டு சென்று சேருங்கள்” என்றான். 

நல்ல யோசனை! மீன்களும் சில காலங்கள் குப்பைகளைப் பெரிய‌பள்ளத்தில் சேர்த்தார்கள். சில நாட்கள் பிரச்சினையின்றிக் கழிந்தது. நாட்கள்‌ செல்லச் செல்ல அந்த குப்பைப் பள்ளத்திலிருந்து மோசமான நாற்றம் வர ஆரம்பித்தது. அந்த நாட்டின் தண்ணீரே கலங்கலாக மாறியது.

இதைப் பார்த்த சுத்தனுக்கு பயங்கர‌சோகம். ‘சுத்தமாக மின்னிய என்‌ கடல் நாடு இந்த முட்டாள்‌ மனிதர்களால் குப்பைக் கூளமாக மாறி விட்டதே!” என்று கன்னத்தில் கை வைத்து வருந்தினான்.

பின் ஒரு முடிவுடன் நிமிர்ந்தவன், “இது எல்லாம் சரிப்பட்டு வராது;  இந்த குப்பைகளை எல்லாம் நம் நாட்டுக்குள்ளேயே வரவிடாமல் காப்பதே ஒரே  வழி!” என்று முடிவு செய்தான். ‘எப்படி குப்பைகளை நாட்டுக்குள்ளேயே வரவிடாமல் தடுப்பது?’ தங்கள் வாழ்வின் அடி ஆதாரமான நீர் கடவுளிடமும் காற்றுக் கடவுளிடமும் உதவி கேட்டான் சுத்தன். நீர்க்கடவுளும் காற்றுக் கடவுளும் சுத்தனுக்கு உதவி செய்ய முடிவு செய்து கை கோர்த்தார்கள்.

காற்றுக் கடவுள் தன் கரங்களால் நீரில் அலை வீரர்களை உருவாக்கினார். அலை வீரர்கள் கரை நோக்கிப் படையெடுத்து வந்து அந்த ஊர் மக்கள் போடும் குப்பைகளையெல்லாம்‌ மீண்டும் கரைகளிலேயே கொண்டு சேர்த்தார்கள். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் அலை வீரர்கள் இடைவிடாது வேலை செய்து சுத்தன் தன் ஊரைச் சுத்தமாக வைக்க உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன குட்டிச் செல்லங்களே.. நீங்களும் கடல் ராஜாவான சுத்தனிற்கு கடல் நாட்டைச் சுத்தமாக வைக்க உதவி செய்வீங்களா? மீன்களால் செரிக்க முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைக் குறைச்சிடுங்க; கடலிலும் கடற்கரையோரத்திலும் பிளாஸ்டிக் பொருட்களைப் போடாதீங்க.. சாலையில் போகும்போதும் வழியில் போடாதீங்க.. அவையெல்லாம் மழையில் அடித்துச் செல்லப்பட்டு கடலுக்குள் தான் போகும். பிற்காலத்தில் பெரிய ஆளானதும் படிச்சி விஞ்ஞானியா மாறி கடலையும் கடல் வளத்தையும் மனிதர்களின் கழிவிலிருந்து எப்படிக் காப்பதுன்னு கண்டுபிடிங்க.. சரியா பட்டூஸ்❤️❤️

சரி.. இப்போ கடலில் அலைகள் எப்படி உருவாகின்றன‌என்று பார்ப்போமா?

கடற்பரப்பின்‌ மீது காற்றின்‌ இழுவிசை செயல்படுவதால் நீரில் ஏற்படும் அசைவுகளே அலையாகும். காற்றின்‌விசையால் நீர்ப்பரப்பின்‌மெல் வேலை செய்ய, அங்கிருக்கும் நீர் இடம்‌பெயர, காற்று இலைகளை அசைத்து மரங்களின் ஊடே வீசுவது போல, அலைகளாக நீரை நகர்த்துகிறது. அலையில் உயரம் காற்றின் வேகம், காற்று வீசும் கால அளவு, தரையின் ஆழம் இதைப் பொறுத்து வேறுபடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments