“பாட்டி எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட என்ன ரெடி பண்ணி இருக்கீங்க?” என்றவாறு அடுப்பறைக்கு வந்தான் ராமு.

பாட்டி தக்காளி வெட்டிக்கொண்டு இருப்பதை பார்த்ததும்.. “எதுக்கு பாட்டி தக்காளி நறுக்குறீங்க?” என்றவாறு அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.

“ராமு! வா… இன்னிக்கு நம்ம தோட்டத்தில நிறைய தக்காளி விளைஞ்சதா.. அதான் தக்காளி தோசை செய்யலாம்னு நறுக்குறேன்” என்றார்.

மீதமிருந்த தக்காளியைப் பாத்திரத்தில் போட்டவர் ராமுவிடம், “கண்ணா! இந்தத் தக்காளிய நீங்க நல்லா கழுவி கொடுப்பீங்களாம்.. நான் அதை வெட்டி தோசைக்கு தயார் செய்வேனாம்.. சரியா?” என்றவாறு அவனிடம் அளித்தார்.

“சரி பாட்டி.. நான் கழுவறேன். இத எப்படி செய்வீங்கனு சொல்லுங்க. நான் கேட்டுக்கிட்டே செய்றேன்”

“சரி டா கண்ணா!” என்றவாறு பாட்டி சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு பெரிய கப்ல ரெண்டு கப் இட்லி அரிசி , அதே கப்ல கால் (¼) கப் துவரம்பருப்பு சேர்த்து நல்லா கழுவிட்டு காரத்துக்கு தேவையான அளவு காய்ந்த மிளகாய் போட்டு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கனும்.

அரைக்கத் தேவையான அளவு தக்காளி எடுத்துக்கணும். ரெண்டு கப் அரிசிக்கு   13 பெரிய தக்காளி எடுத்து கழுவி எல்லாத்தையும் நாலு நாலு துண்டா வெட்டி எடுத்து வச்சிக்கனும்.

 ரெண்டு மணிநேரம் கழிச்சு ஊறுன அரிசியோட கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், 1 ஸ்பூன் மிளகு சீரகம், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அத தனியா எடுத்து வச்சிட்டு

நறுக்கி வச்ச தக்காளிய நல்லா விழுதா மைய அரைச்சுக்கனும். ஏற்கனவே அரைச்சு வச்ச அரிசியோட சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலக்கிக்கனும்.

அவ்வளவு தான்  தக்காளி தோசைக்கு மாவு ரெடி ஆகிட்டு.. இன்னும் ஒரு ஒருமணி நேரம் கழித்து குட்டிக்கு தோசை செய்யலாம் சரியா. அதுக்குள்ள இதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி ரெடி செஞ்சு வச்சிடலாம்”  என்றவாறு எல்லாவற்றையும் எடுத்து வைத்தவர். தக்காளி தோசை செய்து தேங்காய் சட்னியுடன் எல்லாரும் சேர்ந்து உண்டனர்

tomato dosa

“பாட்டி தோசை செம்ம டேஸ்டா இருக்கு..” என்றபடி உண்டனர் ராமுவும் சுனிதாவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments