“அம்மா, அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில மாறுவேடப் போட்டி வச்சிருக்காங்கம்மா. எனக்கும் கலந்துக்கணும்மா. ஏதாவது நல்ல ஐடியா கொடுங்கம்மா, ப்ளீஸ் மா”

என்று கெஞ்சினான் அமுதன்.

“என்ன மாதிரி ஐடியா வேணும் உனக்கு? ஏதாவது தீம் மாதிரி கொடுத்திருக்காங்களா?” என்றாள் அமுதனின் அம்மா.

“உங்க இஷ்டம்னு சொன்னாங்க. ஆனா சுதந்திரத்துக்காகப் போராடினவர்கள், ஆங்கில ஆட்சியரை எதிர்த்த பழைய அரசர்கள் அந்த மாதிரி ஏதாவது வேஷம் போட்டுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்றான்.

“வீரபாண்டிய கட்டபொம்மன்”

“அதுக்குத் தேவையான உடை, வாள் எல்லோமே கடையில் போய் வாங்கணும். நேரம் இல்லையேம்மா? அப்பா ஆஃபிஸில் இருந்து வந்து நாம கெளம்பி மார்க்கெட் போறதுக்குள்ள கடை மூடிடுமே? இப்ப உங்களுக்கு வேலை இருக்குமே? இப்பக் கிளம்ப முடியாதே?” என்றான் அமுதன்.

அமுதனின் அம்மா வீட்டிலேயே உணவுப் பொருட்கள் தயாரித்து உணவகங்களுக்கு அனுப்பும் வேலையை வீட்டில் இருந்தே செய்வதால் எப்போதும் அவளுக்கு வீட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும். சட்டென்று எங்கும் அப்படிக் கிளம்ப முடியாது.

“சரி, வேற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே போடற மாதிரி வேடம் யோசிக்கலாமா?”

“ஆமாம். அப்படியே செய்யலாம்” என்று சொல்லி ஆனந்தத்துடன் குதித்தான் அமுதன்.

“மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், தாதா பாய் நௌரோஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொடி காத்த குமரன், பகத் சிங்” என்று வரிசையாக அம்மா சொல்லிக் கொண்டே வர,

“சுப்பிரமணிய பாரதியார்”

என்று அம்மா சொன்னவுடன் அமரன் துள்ளிக் குதித்தான்.

bharathiyaar

“அதே அதே, அம்மா நான் பாரதியார் வேஷம் போடறேம்மா. அது தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று உற்சாகத்துடன் சொன்னான்.

“அம்மா, பாரதியார் வேஷமே போட்டுக்கறேம்மா. அதுக்கு அப்பாவோட வேட்டி, தாத்தாவோட கறுப்பு கோட் , தலைப்பாகை கட்டத் துண்டு எல்லாமே வீட்டில இருக்கு. உங்களுக்கு பாரதியார் பாட்டு நிறையத் தெரியுமே! அதில ஒண்ணைக் கத்துக் கொடுங்க. அதுவே சரியா இருக்கும். நீங்க வேலை செஞ்சுக்கிட்டே எனக்கு முதலில பாட்டு மாத்திரம் சொல்லிக் கொடுங்க. அப்பா வந்ததும் மீதி வேலையைப் பாத்துக்கலாம்” என்று சொல்லி விட்டு ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலையில் அமுதன் அப்பாவின் உதவியுடன் மாறுவேடப் போட்டிக்குத் தயாராகி விட்டான். தார்ப் பாய்ச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி, விசிறி மடிப்பு வைத்து அழகாகப் பொருத்தப்பட்ட முண்டாசு, கறுப்பு அங்கி போட்டுக் கொண்டு மீசையை மட்டும் கறுப்பு மையால் எழுதிக் கொண்டு கிளம்பினான்.

அமுதன் பள்ளிக்குச் செல்லப் பேருந்தில் ஏளிய போது மழை மேகம் வலுத்து வந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாகக் கருத்த மேகங்களுடன் இருந்தது. வானம் அடித்து மழை பெய்யத் தயாராகிக்  கொண்டிருந்தது. அமுதனின் அம்மா அவனிடம் குடையைக் கொடுத்து அனுப்பினாள்.

வழி முழுவதும் பாரதியாரின் பாடலைத் திரும்பத் திரும்ப மனதில் உருவேற்றிக் கொண்டே போனான் அமுதன். அவன் பேருந்தில் இருந்து இறங்கும் போது மழை கொட்டித் தீர்த்தது.

பள்ளியில் மேடையில் மாறுவேடப் போட்டி ஆரம்பித்து, சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நடுவராக ஒரு மதிப்பிற்குரிய பெரியவர் வந்திருந்தார்.

அவர் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி. பல்வேறு மக்கள் நலத் தொண்டுகளைச் செய்து வருபவர். நல்ல தமிழறிவு கொண்டவர்.

விதவிதமான ஆடைகளில் பல்வேறு குழந்தைகளும் வந்து அழகாக நடித்து,

எல்லோருடைய மனங்களையும் மகிழ்வித்தனர்.

சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், இந்திரா காந்தி, அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் மேடையில் அழகாக நடை பயின்றார்கள். கிருஷ்ணர் ராமர், கண்ணகி, இயேசு கிறிஸ்து மாதிரி கூட வந்தார்கள். டைனோசர், கழுகு, கிளி மாதிரி கூட அழகாக வேடம் போட்டுக் கொண்டு வந்து குழந்தைகள் மழலை மொழி பேசி நடித்துவிட்டுப் போனதும் அழகாகவே இருந்தது.

அமுதனின் முறை வந்தது. அமுதன் மேடையேறினான். அவனுடைய தோற்றத்தைப் பார்த்துக் கூட்டம் ‘கொல்’லென்று சிரித்தது. அவனுடைய வெள்ளை வேட்டியில் சேறு படிந்திருந்தது. முகத்தில் கூட மீசை லேசாகக் கலைந்திருந்தது. ஆனாலும் அமுதன் கலங்காமல் மேடையில் நின்று அங்கிருந்த பார்வையாளர்களைத் துணிவுடன் பார்த்தான்.

“தேடிச்சோறு நிதந் தின்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக வுழன்று-பிறர்

வாடப் பல செயல்கள் செய்து-நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ!”

என்று உணர்ச்சி பொங்க அமுதன் முழங்கிய போது பார்வையாளர்கள் கூட்டத்தில் சட்டென்று அமைதி பரவி அமுதனை ஆர்வத்துடன் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து அமுதன், “நான் தான் சுப்பிரமணிய பாரதி” என்று ஆரம்பித்துப் பல்வேறு வீர வசனங்களை உணர்ச்சியுடன் பேசி முடித்தான்.

நடுவராக வந்திருந்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எழுந்து நின்று கை தட்டினார். அவரைத் தொடர்ந்து அனைவரும் கை தட்டி அமுதனைப் பாராட்டினார்கள்.

பரிசுகள் அறிவிக்கப் பட்டன. மூன்று பரிசுகள் மூன்று மாணவர்கள் பெற்ற அறிவிப்பைத் தொடர்ந்து, நடுவர் அவர்களின் சிறப்புப் பரிசு அமுதனுக்கு அளிக்கப் பட்டது. எல்லோருமே ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். நடுவர் சிறப்பு உரையாற்ற எழுந்தார்.

“நான் இந்தச் சிறப்புப் பரிசை அளிக்க முக்கியமான காரணம் ஒன்றிருக்கிறது. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். காலையில் நான் இந்த விழாவிற்காக எனது வாகனத்தில் வந்து இறங்கிய சமயம், இந்தச் சிறுவனைப் பார்த்தேன். மழை கொட்டிக் கொண்டிருந்த சமயம் தெருவோரத்தில் இருந்த பாதாளச் சாக்கடையின் மூடியை யாரோ திறந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சிறிய நாய்க்குட்டி அந்தச் சாக்கடையில் விழுகின்ற மாதிரி மிக அருகில் நின்று கொண்டிருந்தது. யாரும் கவனிக்காத அந்த விஷயத்தை இந்தச் சிறுவன் கவனித்து விட்டான். ஓடிப்போய் அந்த நாய்க்குட்டியைக் காப்பாற்றி, எதிர்ப்பக்கம் சென்று விட்டு விட்டு வந்தான். அங்கிருந்த பெரியவர்களைக் கூப்பிட்டு அந்தச் சாக்கடை மூடியையும் மூட வைத்தான். அந்தச் செயலால் தான் அவனுடைய உடை அழுக்கானது.

‘அழுக்கு அவன் உடையில் தான். மனதில் இல்லை’ என்று அப்போதே புரிந்து கொண்டான். பாரதியாக வேடம் தரித்தது மட்டுமல்லாமல் மனதளவிலும் பாரதியாகவே மாறிய இந்தச் சிறுவனை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று சொல்லி எல்லா உயிரினங்களிடமும் அன்பு காட்ட வேண்டிய அவசியத்தைச்

சொன்னவர் பாரதி. அதைப் புரிந்து கொண்டு செயல்பட்ட இவனுடைய நற்சிந்தனைக்காகத் தான் இந்தச் சிறப்புப் பரிசு. நாளைய பாரதத்தைச் செதுக்கப் போகும் இந்தச் சிற்பிக்கு என் கையால் பரிசளிப்பதில் பெருமை அடைகிறேன்” என்று சொல்லித் தனது உரையை முடித்ததும், அரங்கமே எழுந்து அமுதனுக்காகக் கை தட்டியது.

‘இளைய பாரதத்தினாய் வா வா வா!’

நாளைய பாரதத்தின் பிரதிநிதியான இன்றைய அமுதன் நல்ல இந்தியனாக நிச்சயமாக உருவெடுப்பான்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments