என்ன சுட்டீஸ்! எல்லாரும் எப்டி இருக்கீங்க. சுட்டி மித்து கதை உங்களுக்குப் பிடிச்சுதா?
இன்னும் படிச்சி முடிக்காதவங்க சீக்கிரம் படிச்சிட்டு வாங்க.
2வது லாக்டவுன் வேற போட்டுட்டாங்க! எல்லாரும் கவனமா இருங்க.
உங்கள குஷிப்படுத்த என் அடுத்த கதையோட வந்திருக்கேன். இது கொஞ்சம் விறுவிறுன்னு சுவாரசியமா இருக்கும். உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.
சரி. இன்னிக்கு புது கதையோட முதல் எபி படிக்கலாமா! கதையோட தலைப்பு, சின்ன விஷயம்!
வாங்க படிக்கலாம்!
சின்ன விஷயம்! – 1
அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“ஏய் விக்கி? என்ன டல்லா இருக்க? வா விளையாடலாம்!” என்று அவனை அழைத்தான் அவனுடைய நண்பன் கரண்.
“ம்ச்.. போடா.. நா வரல..” என்று வருத்தமாகக் கூறினான் விக்கி.
“ஏண்டா?” என்று அவர்களுடைய தோழி அபி கேட்டாள்.
“இன்னிக்கு என்ன மிஸ் செம்மையா திட்டிட்டாங்க.. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு!” என்றான் விக்கி.
“மிஸ் திட்டினாங்களா? எதுக்கு?” என்று அபி கேட்டாள்.
அவள் வேறு பள்ளியில் படிக்கிறாள். விக்கியும் கரணும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.
“பின்ன.. ஹோம்வொர்க் நோட் எடுத்துட்டு வரலன்னா திட்டாம என்ன செய்வாங்களாம்!?” என்று ஏளனமாக கரண் பதில் சொன்னான்.
“இல்லடா.. நா ஹோம்வொர்க் நோட் எடுத்துகிட்டுதான் வந்தேன்.. ஆனா ஸ்கூல்ல வந்து பாக்கறப்ப அது இல்ல..” என்று பதிலளித்தான் விக்கி.
“நீ எடுத்துகிட்டு வந்தா உன் பேக்ல இல்லாம வேற எங்க போகுமாம்? நீ வீட்ல செல்ஃப்ல எடுத்து வெச்சத பேக்ல வெச்சதா நெனச்சிட்டு ஸ்கூல் வந்துட்ட போல.. வீட்டுல தேடிப் பாரு.. உன் செல்ஃப்லதான் இருக்கும்..” என்றான் கரண்.
“இல்ல கரண். நா தினமும் ஹோம்வொர்க் செய்துட்டு கையோட பேக் உள்ள எடுத்து வெச்சிடுவேன். மறுநாளுக்கு தேவையானதையெல்லாம் செக் செய்து பேக்ல எடுத்து வெச்சிடுவேன்.. அப்பதான் மறுநாள் காலைல டென்ஷனில்லாம கிளம்ப முடியும்னு எங்கம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க! அப்டிதான் நேத்திக்கும் எடுத்து வெச்சிட்டு படுத்தேன். இன்னிக்கு காலைல ஸ்கூல் கிளம்பறப்ப கூட எதுக்கும் இருக்கட்டும்னு செக் செய்து ஹோம் வொர்க் நோட் இருக்கான்னு செக் செய்துட்டுதான் ஸ்கூல் கிளம்பினேன்.
இன்னிக்கு முதல் பீரியடே மேத்ஸ் தான். என் பேக்ல உள்ள ஹோம்வொர்க் நோட் காணலை.. நாம ப்ரேயர் போயிருந்த நேரத்திலதான் யாரோ என் நோட்டை எடுத்திருக்கணும்..” என்று அழுத்தமாகக் கூறினான் விக்கி.
“என்னடா சொல்ற? காலைலயும் செக் பண்ணினியா? அப்றம் எப்டி நோட் காணாம போச்சு?” என்று கரண் கேட்டான்.
“உன் பேக்லேர்ந்து யாராவது எடுத்திருப்பாங்கன்னு எப்டி சொல்ற விக்கி?” என்று அபி கேட்டாள்.
“ப்ரேயர் போகும் போது என் பேக் ஜிப் மூடியிருக்கான்னு நா செக் செய்தப்ப எல்லா ஜிப்பும் மூடிதான் இரு்தது. ஆனா ப்ரேயர் போய்ட்டு வந்ததும் பாத்தப்ப என் பேக்ல இருந்து முதல் ஜிப் திறந்திருந்தது. அப்பவே எனக்கு டௌட்டுதான்.. உள்ள எல்லா நோட்டும் இருக்கான்னு செக் பண்ணிட்டிருக்கும்போதே மிஸ் வந்துட்டாங்க.. ஹோம்வொர்க் நோட் சப்மிட் செய்ய சொன்னாங்க.. அப்பதான் என் நோட் இல்லங்கறத கவனிச்சேன்.. மிஸ் கிட்ட சொன்னா மிஸ் நம்பவே இல்ல.. நான் ஹோம்வொர்க் பண்ணல.. அதனாலதான் நோட் எடுத்துட்டு வரலன்னு என்ன திட்டினாங்க..” என்று சொல்லி முடித்தான் விக்கி.
“நம்ம க்ளாஸ்ல அப்டி யாருடா நோட்டல்லாம் திருடறாங்க.. அதுவும் மேத்ஸ் ஹோம்வொர்க் நோட்டைப் போய் திருடறது என்ன பழக்கம்..” என்று கரண் சற்று கோபத்துடன் வினவினான்.
“அதுதாண்டா எனக்கும் புரியல..” என்றான் விக்கி.
“உங்க க்ளாஸ் மிஸ் கிட்ட சொன்னியா விக்கி?” என்று கேட்டாள் அபி.
“சொல்லிட்டேன் அபி. நா செக் பண்றேன்னு சொன்னாங்க.. ஆனா இன்னிக்கு மிஸ்ஸுக்கு ஏதோ முக்கியமான வேலைன்னு அவசரமா லீவ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க..” என்றான் விக்கி.
“நம்ம க்ளாஸ் யாஷிகா வரா பாரு.. அவளுக்கு இதப்பத்தி எதாவது தெரியுமான்னு கேக்கலாம் இரு..” என்று கூறினான் கரண்.
“அவ கிட்டயா.. ரொம்ப அலட்டிப்பாளே..” என்றாள் அபி.
அதற்குள் அவர்களுடைய தோழி யாஷிகா அங்கே வந்தாள்.
கரண் வகுப்பில் நடந்ததைக் கூறினான்.
“என்ன விக்கி, உன் நோட்டும் காணமா? பத்மினி நோட்டும் காணல.. ரோஷினி நோட்டும் காணல.. அவங்களும் நோட் எடுத்துட்டு வந்தோம்னுதான் சொன்னாங்க..” என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாகக் கூறினாள்.
“என்னது? பத்மினி ரோஷினி ரெண்டு பேர் நோட்டும் கூட காணலயா?” என்று மற்ற மூவரும் அதிர்ந்தனர்.
“ஆமா விக்கி.. போன வாரம் கூட நம்ம க்ளாஸ்ல நாலு சயின்ஸ் ரெக்கார்ட் நோட்டு காணாம போச்சு..” என்று மேலும் கூறினாள் யாஷிகா.
“ஐயோ.. சயின்ஸ் ரெக்கார்ட் நோட்டா..” என்று விக்கி கேட்டான்.
“ஹே.. எல்லாரும் சேர்ந்து மிஸ் கிட்ட கம்ப்ளெய்ன்ட் குடுக்கலாம்ப்பா.. இது இப்டியே போச்சுன்னா.. நாளைக்கு நம்ம எல்லாருடைய நோட்டும் கொஞ்சம் கொஞ்சமா காணாம போய்டும்..” என்றான் கரண்.
அனைவரும் தங்கள் வகுப்பாசிரியையிடம் இது பற்றி முறையிட முடிவு செய்து கொண்டனர்.
அவர்கள் தங்கள் வகுப்பாசிரியையிடம் முறையிட்டார்களா?
அவர்களுடைய வகுப்பாசிரியை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்?
அந்த நோட்டுத் திருடன் யார் என்று கண்டுபிடித்தார்களா?
எல்லாம் அடுத்தடுத்த பாகங்களில் காண்போம்.
அது வரைக்கும் சமத்தா இருக்கணும் சுட்டீஸ்! சரியா!
பை! பை! டாட்டா!
👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.