பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு  ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும். அடுத்த சில மணி நேரங்களில் “சோ” வென்று மழை பொழியும். சில பொழுதில் ஒரே பருவ நிலை பல காலம் தொடரும். இப்படி இருந்தால் எப்படி உயிர்களால் வாழமுடியும்.. உயிர்கள் வளர முடியாமல் பூமியே வெறிச்சோடியிருந்தது.

நம் பூமிக்குப் பல கோடி ஒளி வருடங்கள் தள்ளியிருந்த கோள் ஒன்றில் எந்திர ஏலியன்கள்  வாழ்ந்தார்கள்(?!). வாஷிங் மெஷின் (washing machine), ஃப்ரிட்ஜ்(fridge), ஓவன்(oven), கார்(car), பைக்(bike) ஆகிய அனைத்தும் அணுக்களில் உள்ள மின்சாரம் உண்டு   அங்கே உல்லாசமாக வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் ஃப்ரிட்ஜ், ஏசி, ஓவன் மூன்று நண்பர்களும் ராக்கெட் ஏறிப் விண்வெளியில் பொழுது போக்க சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சூரியனுக்கு அருகே நீல வண்ணத்தில் பந்து போல் சுற்றிக் கொண்டிருந்த நம் பூமி அவர்கள் கண்ணைப் பறித்தது.

“ஆஹா.. எத்தனை அழகு இந்த கோள்” என்று ஒன்றாகக் கூறியவர்கள் நம்‌ பூமியை நோக்கி ராக்கெட்டை செலுத்தினார்கள். பூமியில் வந்து இறங்கவும் செய்தார்கள்.

அவர்கள் வந்த நேரம் மழை பெய்து முடியும் தருணம். வானிலிருந்து தூறலாய் நீர் பூமிக்கு வந்து கொண்டிருந்தது. அதை ரசித்தபடி பூமியில் உலா வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஓவன் நின்று ஆச்சர்யமாய்க் கூவியது, “ஆஹா!! இங்கே பாருங்களேன்!”

மற்ற இருவரும், “என்ன?”, “என்ன?” என்ற படி ஓவனிடம் ஓடி வந்தனர்.

“இதோ.. இதைத்தான்!” என்று ஓவன் கைகாட்டிய திசையில் பார்த்தால் பச்சையாய் ஒரு தளிர் பூமியைத் துளைத்துக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அந்த தளிரின் காம்பு பூமியை விட்டு வெளிவர தங்கள் எல்.இ.டி கண்கள் மின்ன மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தோ, கொடுமை! அந்த காம்பிலிருந்து பச்சையாய் இலை ஒன்று முளை விடும்போது சுட்டெரிக்கும் சூரியனார் வந்து விட்டார். செடியும் வாடத் தொடங்கியது.

ஏசி பதறத்  தொடங்கியது.. “அச்சச்சோ.. இந்த சூட்டில் இது வாட ஆரம்பிக்கிறதே!” என்று கன்னத்தில் கை வைத்தது.

“அட.. வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? நீ வேலை செய்தால்தான் உன்னைச் சுற்றி குளு குளு என்றாகுமே.. அதை வைத்து இந்த செடிக்கு உதவலாமா?” என்று கேட்டது ஃபேன்.

“அட! நல்ல யோசனை!” என்று தானியங்கியாய்த் தன்னை உயிர்ப்பித்த ஏசி அந்த செடியைச் சுற்றிக் குளுமையைப் பரப்பியது. வாடாமல் நின்ற செடி இரண்டு சிறு இலைகளை வெளியிட்டது. மூன்று பேரும் துள்ளிக் குதித்தனர்.

 சிறிது நேரத்தில் பனி மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே ஏசியும் ஃபேனும் ஓவனைப் பார்க்க, “சரி.. சரி..” என்றபடி தன்னை உயிர்ப்பித்த ஓவன் செடியை பனியில் உறையாமல் காத்தது.

செடி மேலும் பல இலைகளை வெளியிட்டு அழகாய் வளர்ந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. பெருமழை தங்குமிடம் அச்சிறு செடியில் விழ, அது சாயத் நோக்கியது.  இப்போது ஃபேன் செடியின் மேல் சுற்றி, அதன் மேல் தண்ணீர் விழாமல் குடை போல் அரணாய்க் காத்தது.

அந்த சிறு செடியும் நன்றியோடு மொட்டு விட்டு சிறு‌ பூ பூத்தது. “ஆஹா!! என்ன‌அழகு! என்ன அழகு!” என்று ஆர்ப்பரித்த மூவரும் அப்போதுதான் சுற்றிலும் துளிர் விட ஆரரம்பித்த சிறு தளிர்களைக் கண்டனர்.

கோபத்துடன்  வானையும் அதிலிருந்த  சூரியனையும்  மேகங்களையும் பார்த்த ஓவன் சொன்னது, “என்ன அண்ணாக்களே! நீங்கள் இப்படி எந்த ஒழுங்கும் இல்லாமல் காலநேரம் பாராமல் மாறி மாறி வந்தால் எப்படி?”

சிவந்த வானம் சொன்னது, “நாங்கள்‌ என்ன பண்ணுவது? சூரியன் சுட்டெரிக்கிறது. அதில் நீர் நீராவியாகி இங்கே வருகிறது. உயரே செல்ல குளிர்ந்த நீராவி மழையாய்ப் பொழிகிறது. மேலும் குளிர்ந்தால் பனியாய்ப் பொழிகிறது. இதில் நாங்கள் என்ன செய்வது?” என்று வருத்தமாய்க் கேட்டது.

“என்ன செய்யலாம்? என்று யோசித்த எந்திர ஏலியன்கள் தலை மேல் சட்டென்று பல்ப் எரிந்தது. தங்களுக்குள் பேசி முடிவு செய்து பூமியிடம் தங்கள் திட்டத்தை விவரித்தார்கள்.

“நன்றாகக் கேட்டுக்கொள் பூமி..  வெயில் அடித்தாலும் அது பூமியைத் தாக்காமல் நான் சில காலம் பூமியைக் குளு குளு வென்று குளிர்காலத்தில் வைத்திருப்பேன்” என்றது ஏசி.

“பெருமழையைப்  சுற்றிச் சிதறடித்து அழகிய மழைக்காலமாக்குவேன்” என்றது ஃபேன்.

“சில காலம் நான் நாள் முழுக்க வேலை செய்து உன் வெம்மை காக்க வெயில் காலம் தருவேன்..” என்றது ஓவன்.

இவ்வாறு மூன்று எந்திர ஏலியன்களும் நம் பூமியைச் சுற்றி  விஸ்வரூபமெடுத்து தங்கள் வேலை செய்ய பருவநிலைகள் மாற, செடிகள் செழித்தோங்கிட, எங்கும் பூக்கள் மலர்ந்து பூமியில் வசந்த காலம் பிறந்தது.

***

சரி.. இப்போது பருவ நிலை மாற்றத்திற்கான உண்மைக் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா? உண்மையைச் சொல்வதென்றால் உங்களில் பலரைப் போல நானும் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றும் பூமி சூரியனுக்கு அருகில் வரும்போது கோடைக்காலம், தூரமாகத் செல்லும்போது குளிர்காலம் என்றே நினைத்து வந்தேன். ஆனால் அது மட்டும் காரணம் இல்லையாம்.

பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம், பூமி செங்குத்தாய் நிற்காமல் 23.5′ சாய்ந்து இருக்கிறது. அதாவது இப்படி👉 🍎 நில்லாமல் இப்படி 👉🍓

அதனால் என்ன‌? என்று நினைக்கிறீர்களா.. பூமி சூரியனைச் சுற்றும் பொழுது சில காலம் பூமியின் வடக்குப் பகுதி சூரியனை நோக்கியிருக்கும். சில காலம் தெற்குப் பகுதி சூரியனை நோக்கியிருக்கும். எந்தப் பகுதி சூரியனை நோக்கியிருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு அந்த காலத்தில் கோடை காலம். விலகியிருக்கும் பகுதிக்கு குளிர்காலம். பின்வரும் படத்திலிருத்து இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்

seasons

நம் கற்பனைக் கதையில் உள்ள ஆகப்பெரும் முரண் என்ன தெரியுமா? ஃப்ரிட்ஜ் போன்ற சில எலக்ட்ரானிக் பொருட்களில் வெளிவரும் வாயுக்களால்  பூமியின் வளி மண்டலம் சூடாகி, நம் பருவநிலை மாற்றங்கள் குழம்பித் தவிக்கின்றன. இதனால் பூமியின் சீரான உயிர் சுழற்சி பாதிக்கப்படுகிறது என்று அறிவியலாளர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் நாம் அவைதான் நம் பருவநிலையையே காப்பாற்றுவதாக ஒரு கற்பனைக் கதை எழுதி வில்லனை ஹீரோவாக்கி விட்டோம்😎😎😀😀

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments