1937-ம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த வாலண்டினா தெரஸ்கோவா, அடிப்படையில் விமானி கிடையாது. விமானம் ஓட்டிய அனுபவம் கிடையாது. ஒன்றே ஒன்றை தயக்கம் இல்லாமல் செய்வார். அது  ஸ்கை டைவிங்.

Valentina Tereshkova pillars

பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் போனபோது, தபால் வழியாகப் படித்துக் கொண்டே ஒரு ஜவுளி ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தார்.

22 வயதில் ஏரோஸ்லேவல் பறக்கும் கழகத்தில் சேர்ந்த பின்புதான் தொடர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சி எடுத்தார். மாஸ்கோ சதுக்கத்தில் புரட்சி தின கொண்டாட்டத்தில் தெரஸ்கோவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்று, ரஷ்ய அதிபர் முன்னிலையில் ஒரு பெண் ஸ்கை டைவிங் நிகழ்த்தியபோது சதுக்கமே ஆராவாரத்தில் அதிர்ந்தது.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்

தெரஸ்கோவாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது, அரசியல் முகம். தன் ஜவுளி ஆலையில் வேலைசெய்த பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சவால்களை ஒருங்கிணைத்துத் தீர்க்க, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.

1961-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று வந்ததும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்ப தீர்மானித்தது ரஷ்யா. அந்த அறிவிப்பை மக்கள் முன்வைத்து பெண் வீரர்கள் குழுவை தேர்ந்தெடுக்க முடிவுசெய்தது. தெரஸ்கோவாவின் விண்ணப்பத்தோடு, 400 விண்ணப்பங்கள். சிபாரிசு என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை.

அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது பாராசூட்டில் இருந்து குதிப்பது. தெரஸ்கோவாவின் பலமே அதுதான். நிறைய பயிற்சிகளுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்ட ஐந்து பேரில் முதல் பெயர், வாலண்டினா தெரஸ்கோவா.

விண்வெளி யாருக்குத்தான் ஆச்சர்யம் தரவில்லை? என்ன சவால் என்றால், இதுவரை பெண்களை அனுப்பியதே இல்லை. உடலளவில் அவர்கள் சந்திக்கப்போகும் பிரச்னைகளுக்கு சோதனை எலியே தெரஸ்கோவா தான். ஆண்களுக்கு, பெண்களுக்கு என்றெல்லாம் தனித்தனி பயிற்சிகள் கொடுக்க முடியாது. அறிவுச்சார்ந்த பயிற்சியும் உடல்சார்ந்த பயிற்சியும் பின்னிப்பெடலெடுக்க தொடங்கியது. 15 மாதங்களாக தொடர்ந்தன உடல் பயிற்சிகள். மனரீதியான பயிற்சிக்காக, தனியறை இருட்டில் பல மணி நேரம்… பல நாட்கள்கூட அடைக்கப்பட்டிருப்பார்.

‘வோஸ்டாக் – 6’ என்பதுதான் தெரஸ்கோவா பயணம் செய்த விண்கலத்தின் பெயர். ஜூன் 16, 1963 அன்று உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை விண்வெளியில் பாய்ந்தார். வெல்லரி பைக்கோஸ்கி என்னும் விண்வெளி வீரரும் ‘வோஸ்டாக் – 5’ என்ற விண்கலத்தின்  மூலம் இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்டார். விண்வெளியைச் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலங்கள், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டன. வோஸ்டாக் ஆறில் இருந்த வாலண்டினா, பைக்கோஸ்கியை தொடர்புகொள்ள முயற்சித்தார். இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஒரு பெண்ணும் ஆணும் விண்வெளியில் உரையாடிய தருணம் அது.

விண்வெளியில் இருந்துகொண்டு சோவியத் பிரதமர் குருசேவ் உடன் பேசியபின் தெரஸ்கோவா, ரேடியோவில் பேசினார். “நான் சீகல் (seagull) விமானத்தில் இருந்து பேசுகிறேன். நன்றாக இருக்கிறேன். அடிவானத்தில்  வெளிறிய ஊதா நிறத்தில், ஊதாக் கோடுகளுடன் ஒரு வடிவம் காட்சி அளிக்கிறது. அது பூமி.”

வளிமண்டலத்தின் ஏரோசோல் படலங்கள், தெரஸ்கோவா எடுத்த புகைப்படங்கள் மூலம்தான் தெரியவந்தது. அந்த விண்கலம் மூலம் 2 நாட்கள் 22 மணி நேரம் 50 நிமிடங்கள் (கிட்டத்தட்ட மூன்று நாட்கள்) விண்வெளியில் இருந்தவாறு பூமியை 48 முறை சுற்றி வந்தார் தெரஸ்கோவா.

ஜூன் 19… விண்கலம் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது, சுமார் 6000 மீட்டர் இருக்கும். ஒருமுறை நிதானித்து வானத்தில் இருந்து குதித்த தெரஸ்கோவா, உண்மையான ஃபீனிக்ஸ் போல தெரிந்தார். மாபெரும் இறக்கைகளான பாராசூட்டில், கஜகஸ்தானின் பாவின்ஸ்கி என்னும் பண்ணையில் தரையிறங்கினார். அவரை மக்கள் சூழ்ந்துகொண்டு கொண்டாடித் தீர்த்தனர்.

அந்த வரலாற்றுப் பெண்மகள், 1963-ம் ஆண்டு ஆண்ட்ரியன் நிக்கோலேயவ் என்னும் விண்வெளி வீரரை காதலித்து மணந்துகொண்டார். ரஷியாவின் மூன்றாவது விண்வெளி வீரர் அவர். யூரி ககாரின் பயிற்சி மையத்தில் சீனியர் விஞ்ஞானியாக இருந்து ஓய்வுபெற்ற தெரஸ்கோவா, வருகிற மார்ச் ஆறாம் தேதி 80 வயதைத் தொடுகிறார்.

விண்வெளிப் பயணம் என்பது ஓர் உல்லாசப் பயணம் அல்ல. இந்தப் பேரண்டத்தில் மனிதன் என்பவன் நுண்துகள். அந்தப் பிரம்மாண்டத்தை காண முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் மணிமகுடக் கல்லாக வாலாண்டினா திகழ்கிறார்.

மாஸ்கோவுக்கு அருகில் உள்ள RKK எனர்ஜியா மியூசியத்தில் முதல் பெண்ணை ஏந்திக்கொண்டு பறந்த அந்த விண்கலம், இன்றும் நின்றுக்கொண்டிருக்கிறது. அந்த விண்கலம் என்றும் தெரஸ்கோவாவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments