அபி மற்றும் சுபி ஊருக்குப் போகும் சேதியைக் கேட்ட விலங்குகள், “ஏன் எங்களை நீங்கள் ஊருக்கு எடுத்துப் போகும் பையில் ஒளித்து வைக்கக்கூடாது?” என்று கேட்டன.
சரி அப்படியே செய்வோம் என்று அபியும், சுபியும் முடிவெடுத்து விட்டு சீக்கிரமாகவே உறங்கச் சென்றனர்.
காலையில் எழுந்து பல் தேய்த்து, குளித்து ஊருக்குக் கிளம்பினார்கள். அந்த விலங்குகளையும் ஊருக்கு எடுத்துப் போகும் பையில் மறக்காமல் எடுத்துக் கொண்டு போனார்கள். காரில் ஏறி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போனார்கள். அந்த விலங்குகளும் பையின் சிறு துவாரம் வழியே வேடிக்கை பார்த்தன.
அவர்களின் தாத்தா, பாட்டியின் ஊர் வந்துவிட்டது. அங்கே ஒரு மாடு, ஒரு கன்றுக்குட்டி, மூன்று கோழிகள் இருந்தன, பக்கத்து வீட்டில் ஒரு நாயும் இருந்தது. பையில் இருந்த விலங்குகளுக்கு ஒரு யோசனை வந்தது.
தினமும் இரவு பையில் இருந்து வெளியே போய் அந்த விலங்குகளுடன் விளையாடினால் என்ன என்ற யோசனையை முயல் சொல்ல, அதற்கு அனைத்து விலங்குகளும் சம்மதம் தெரிவித்தன. தினமும் யாருமறியாமல் இரவு நேரத்தில் போய் மாடு, கோழி மற்றும் நாயோடு விளையாட முடிவு செய்தனர்.
முதல் நாள் இரவு வெளியே விளையாடச் சென்ற போது அவர்கள் மாடு, கன்றுக்குட்டி, கோழிகள் மற்றும் நாயைக் கண்டார்கள்.
“அவர்களும் நம்மைப் போல் விலங்குகள் தானே நாம் தைரியமாக அவர்களுடன் போய் விளையாடலாம்!” என யானை தைரியம் சொன்னது.
அதற்கு அனைத்து விலங்குகளும் சம்மதம் தெரிவித்துவிட்டு விலங்குகளை நோக்கி சென்றனர்.
“நாயே! நாயே! ஏன் எங்களை மட்டும் வீட்டுல வளர்க்க மாட்டேங்குறாங்க?” என்று புலி பக்கத்து வீட்டு நாயிடம் கேட்டது.
“நீங்கள் அனைவரும் காட்டு விலங்குகள் அல்லவா? அதனால் தான்” என்று நாய் சொன்னது.
“பரவாயில்லை. கவலைப்படாதீங்க நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டோம் அல்லவா, அப்புறம் அபி, சுபி கூட உங்களுக்கு நண்பர்களா இருக்கிறார்கள் அல்லவா!” என்று மாடு ஆறுதல் சொன்னது.
“நீங்க எல்லாரும் ஏன் என்னை விட ரொம்ப சின்னதா இருக்கீங்க?” என்று கன்றுக்குட்டி யானையைப் பார்த்துக் கேட்டது.
“நாங்க எல்லாரும் சட்டையிலேர்ந்து வந்திருக்கோம், அந்த சட்டையைத் தயாரித்த தையல்காரர் எங்களை சின்னதா தைச்சுட்டாரு!” என்று யானை பதில் சொன்னது.
இப்படியே தினமும் இரவு யாருக்கும் தெரியாமல் விலங்குகள் அனைவரும் சந்தோசமாகக் கதை பேசி விளையாடினார்கள்.
ஒருநாள் இரவு அவர்கள் புது விளையாட்டு விளையாடினார்கள். ரொம்ப நேரம் விளையாடியதால் காலை ஆனதை அவர்கள் கவனிக்கவில்லை.
காலை ஆறு மணி ஆகிவிட்டது தாத்தா மாடு மற்றும் கோழியை கவனிக்க வந்தார். அப்போது காட்டு விலங்குகள் தாத்தாவைப் பார்த்து பயந்தன. எல்லா விலங்குகளும் உடனே புல்லுக் கட்டுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டன. ஆனால் தாத்தாவோ புல்லுக்கட்டுக்கு அருகே தான் வந்து கொண்டிருந்தார்.
—- தொடரும் —