மயில் கூறிய தகவல்களைக் கேட்ட இளவரசி ஐயை பதறிப்போய் விட்டாள். மாயாவியை எதிர்க்கும் எண்ணத்துடன் அவர்கள் வந்திருப்பது அவளுக்கு மனதில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியது.

என்ன தான் தன்னைக் காக்கும் முயற்சியில்  துருவன் துணிந்து இறங்கியிருந்தாலும் மாயாவியை எதிர்த்து வெல்வது கடினமான செயல் என்பதோடு துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் உயிருக்கே ஆபத்து என்பதை நினைத்துத் தான் கலங்கிப் போனாள் இளவரசி.

சிறிது நேரம் கழித்து மயிலும், கிளியும் துருவன் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள். இரவு உணவை உண்பதற்கு மலைக்கோட்டையில் விருந்தினருக்கு உணவு அளிக்கப்படும் உணவுக்கூடத்தை அடைந்தார்கள். பிரம்மாண்டமாக இருந்த அந்த உணவுக் கூடத்தில் வகை வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் விருந்தோம்பலில் சிறிதளவு கூடக் குறை வைக்காத அந்த நல்ல பண்பிற்கு மனதாரத் தலை வணங்கினான் துருவன்.

அவன் நடந்து கொண்ட விதமும், பேசிய விதமும் அவனை அவ்வளவாகக் கொடியவனாகக் காட்டவில்லை என்று துருவன் நினைத்தான்.

“அவன் பார்க்க எப்படி இருந்தாலும், நல்ல படியாக நடந்து கொண்டாலும் அவன் செய்த செயல்கள் தவறு தானே? குழந்தைகளை அறியாப் பருவத்தில் பெற்றோரிடம் இருந்து பிரித்துத் தனது மாளிகையில் அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக சிறை வைத்திருப்பதும் தவறு தானே? அந்தத் தவறுகளுக்காக அவனைத் தண்டிக்க வேண்டியதும், பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றோரிடம் நல்லபடியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் நம்மால் ஆன முயற்சிகளை நாம் மேற்கொள்ளத் தான் வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று அபூர்வனிடம் துருவன் சொன்னான்.

இளவரசி ஐயை அச்சத்துடன் பேசிய சொற்களை மயில், துருவனிடம் சொன்னது.

“இந்த மாதிரி இளவரசி பேசியதில் ஆச்சர்யமே இல்லை. அவருடைய உள்ளத்தில் இருக்கும் கருணை குணத்தை அது காட்டுகிறது.‌ நாளையே நாம் நமது முயற்சிகளைத் தொடங்கலாம்” என்று துருவன் சொன்னான்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் ஒரு சிறிய புழு ஒன்று ஊர்ந்து வந்தது. மயில் அதைக் கொத்தப் போக, துருவன் மயிலைத் தடுத்தான்.

அந்தப் புழு சிறிய நாகமாக மாறியது.

“என்னை நாகங்களின் குரு தான் புழுவாக மாற்றி உங்களிடம் ஒரு தகவலைச் சொல்லச் சொல்லி அனுப்பி இருக்கிறார். நாக தேசத்தில் இருந்து நாகங்கள் எல்லாம் குருவின் மந்திர சக்தியின் உதவியுடன் அவருடைய தலைமையில் மலையில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறார்கள். நாளை காலையில் இந்த மாளிகையின் வெளியே இருக்கும் வனத்தை அடைந்து விடுவார்கள். உங்களிடம் தகவல் சொல்வதற்காக என்னை மட்டும் முதலில் அனுப்பினார்.‌ நாளை காலையிலோ இல்லை அதன் பிறகோ நீங்கள் எந்த சமயத்தில் உங்களுடைய போரைத் தொடங்கினாலும் நாங்கள் அனைவருமே உங்கள் உதவிக்காக மாளிகைக்குள் வந்து விடுவோம்” என்று சொல்லி விட்டு அந்தச் சிறிய நாகம் மீண்டும் புழுவாக மாறி வெளியே சென்று விட்டது.

“மிகவும் நல்ல செய்தி தான். நாளையே தகுந்த சமயம் பார்த்து நாம் நம்முடைய தாக்குதலைத் தொடங்கி விடலாம்” என்று துருவன் மகிழ்ச்சியுடன் சொன்னான். ஆனால் துருவன் எண்ணியபடி எதுவுமே அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.

மலைக்கோட்டை மாயாவி, தனக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று தன்னுடைய உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டான். அதற்கான மாற்று ஏற்பாடுகளில் அவனும் இறங்கி விட்டான்.

அன்று இரவு தூங்கப் போவதற்கு முன்னால் துருவன் தனது குருவிடம் இருந்து ஆசிகளைப் பெற நினைத்தான். துருவனுக்கு அது முதல் யுத்தம்; மற்றும் அவன் எதிர்க்கப் போகும் மாயாவி வலிமை வாய்ந்தவன் என்பதால் தனது குருவின் ஆசிகளும் அறிவுரைகளுமே தனக்கு வழி காட்டித் தனது வெற்றிப் பாதையில் துணிவுடன் முன்னேற வைக்கும் என்று மனதார நம்பினான்.

தனது குருவான கௌதம ரிஷியை மனதில் நினைத்துக் கொண்டு அவர் கொடுத்த மாயக் கண்ணாடியை எடுத்தான். அவரும் அந்தக் கண்ணாடியில் உடனே காட்சி தந்தார்.

“குருவே, எனது பணிவான வணக்கங்கள். எனக்கும் எனது நண்பர்களுக்கும் எங்களுடைய இந்த நியாயமான யுத்தத்தில் வழி காட்டுங்கள். எங்களுக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்” என்று சொல்லி அவரை வணங்கினான். அவனுடைய நண்பர்களான மயில், கிளி, அணில் மற்றும் அபூர்வனும் கண்ணாடிக்கு எதிரே நின்று அவரை வணங்கினார்கள்.

“உனக்கு வெற்றி உண்டாகட்டும். நீ உன்னுடைய இலக்கைத் தேடி வந்த பாதையில் தன்னலம் கருதாது மற்றவர்களுக்குச் செய்த உதவிகளின் பலன்கள், உனக்கு உறுதுணையாக உன் பின்னால் நிற்கும். நான் உனக்குப் பரிசாகக் கொடுத்த கயிறு, கழுத்தில் மணி, மந்திர நீர் இவற்றை மறவாமல் எடுத்துச் செல். நாளை தான் உனக்கு முக்கியமான நாள். தயங்காமல் எதிரியை எதிர்கொண்டு துணிவுடன் போராடி வெற்றி வாகை சூடி வர எனது வாழ்த்துகள்” என்று வாழ்த்தினார்.

துருவனுடைய நண்பர்களுக்கும் ஆசிகள் வழங்கினார்.

“இன்னொரு முக்கியமான விஷயம். முடிந்தால் அபூர்வனின் பெற்றோரையும் இந்த மாயக்கண்ணாடியை உபயோகித்து அழையுங்கள். அவர்களுடைய ஆசிகளும் உங்களுக்குக் கிடைக்கட்டும்” என்று சொல்லி விட்டு மறைந்து போனார் கௌதம ரிஷி.

“ஆமாம். இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே? இதற்காகத் தான் நமக்கு வழிகாட்டப் பெரியவர்கள் தேவைப் படுகிறார்கள்” என்று துருவன் நினைத்தான். உடனே அபூர்வனின் பெற்றோரை மனதில் நினைத்துக் கொண்டு மாயக்கண்ணாடியில் பார்த்தான். உடனே அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள்.

அபூர்வனின் அன்னை, அபூர்வனைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீர் சொரிய ஆரம்பித்தாள். அபூர்வனுக்கும் திடீரென்று அவர்களைப் பார்த்ததில் வாயில் வார்த்தைகளே வரவில்லை.

“அபூர்வா, இந்தக் கண்ணாடியை உபயோகித்து அதிக நேரம் பேச முடியாது. அப்படிப் பேசுவது உங்களுக்கு ஆபத்து. நீ நமது நாட்டிற்குத் திரும்பும் நாள் நெருங்கி விட்டது. நீ உன்னுடைய தவறுகளை உணர்ந்து விட்டாய். நல்ல பண்புகள் நிறையக் கற்றுக்கொண்டு விட்டாய்.

இனி உன்னுடைய மந்திர சக்திகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும் நாளும் நெருங்கி விட்டது. நாளைய போரில் உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். நாளை உன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் தருணத்தில் நீ மறந்து போன சக்திகள் அனைத்தும் உனக்கு ஞாபகம் வந்து விடும்.

இந்த தர்ம யுத்தத்தில் நீங்கள் அனைவரும் ஜெயித்து வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம். எங்கள் ஆசிகள் உங்கள் அனைவருக்கும்” என்று சொல்லி விட்டு அவர்களும் மறைந்து விட்டார்கள்.

நாளை என்ன நடக்கப் போகிறதோ என்ற சிந்தனையுடன் தூங்கச் சென்றார்கள் அனைவரும். துருவன் தனது தாய், தந்தையரை மனதில் நினைத்து வணங்கி, மானசீகமாக அவர்களிடம் ஆசிகளைப் பெற்றான். யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலையில் எழுந்து அந்த முக்கியமான நாளுக்காகத் தயாரானார்கள் அவர்கள்.

காலை உணவை முடித்துக் கொண்டு நகரத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். செல்வச் செழிப்புடன் பிரம்மாண்டமாக இருந்தது அந்த நகரம். ஆனால் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த மக்களின் முகத்தில் மகிழ்ச்சி மட்டும் இல்லவே இல்லை.

வாழ்க்கையின் வசதிகள், பணம், பொருள், உணவு, உடை, உறையுள் என்று எல்லாம் இருந்தாலும், சுதந்திரம் இல்லையென்றால் அந்த வாழ்க்கையின் பயன் தான் என்ன? கூண்டுக் கிளிகளாய் வாழ்வதில் அர்த்தமில்லை. துருவனால், அந்த மக்களின் மனதில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சிறிது நேரத்தில் மாயாவி அழைப்பதாகக் காவலர்கள் வந்து அவர்களைக் கேளிக்கை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

முதல் நாள் போலவே மாயாவியும், அவனுக்கு நெருக்கமானவர்களும் அந்த மண்டபத்தில் நிறைந்திருக்க, சுவரை ஒட்டி, அந்தப் பெரிய பெரிய கூண்டுகள் இருந்தன. இளவரசியின் முகத்தில் அச்சம் தெரிந்தது. கலக்கத்துடன் என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்தபடி, அவர்களையே கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

துருவன் குழலூதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தான். அவனைத் தொடர்ந்து அபூர்வன் தனது வித்தைகளைக் காட்டி அங்கிருந்த பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தான். அணில், மயில், கிளி எல்லாமே அடுத்தடுத்து தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டின.

மாயாவியின் முகம் இறுகி இருந்தது. முதல் நாள் இரசித்ததைப் போல, அவன் இன்றைய தினம் அவர்கள் செய்த எதையுமே பார்த்து மகிழவில்லை. இறுதி நிகழ்வு முடிந்து துருவனும் அவனுடைய நண்பர்களும் அவைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு மேடையில் இருந்து இறங்கினார்கள்.

அப்போது திடீரென்று மேற்கூரையில் இருந்து ஒரு பெரிய கூண்டு வந்து அவர்கள் மேல் இறங்கி அவர்களைச் சிறை செய்தது. என்ன நடக்கிறதென்று புரியாமல் திகைத்துப் போய் அவர்கள் நின்றார்கள்.  

 மலைக்கோட்டை மாயாவி இடிஇடியென்று நகைத்தான். அவர்களைப் பார்த்துக் கைகளைக் கொட்டி பலமாகச் சிரிக்க, அந்த அவையில் இருந்த மாயாவியின் ஆட்களும் தங்களுடைய அரசருடன் சேர்ந்து சிரித்தார்கள்.

“என்ன நினைத்து என்னை எதிர்க்கக் கிளம்பி வந்தீர்கள்? ஒரு சிறுவன், அவனுடன் ஒரு சித்திரக் குள்ளன், கூடவே இரண்டு பறவைகள், ஒரு சிறு அணில். இந்தப் படை என்னை எதிர்க்கப் போகிறதாம்? பார்த்தீர்களா நண்பர்களே! இவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புத் தான் வருகிறது. சரியான கோமாளிகள். என்னுடைய எதிரிகளைப் பார்த்து எனக்கே அவமானமாக இருக்கிறது” என்றான் மாயாவி.

இளவரசியோ திகிலுடன் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இளவரசியாரே, இவர்களுடன் சேர்ந்து தப்பித்துச் சென்று விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தீர்களோ? கற்பனைக் கோட்டை இப்போது இடிந்து தூள் தூளாக நொறுங்கிப் போனதா? முக்காலமும் உணர்ந்த இந்த மாயாவியை யாராலாவது ஏமாற்ற முடியுமா? அப்படியும் துணிச்சலோடு என்னை ஏமாற்றியதாக நினைத்து இங்கே தங்கிய இவர்களுடைய துணிச்சலைப் பாராட்டிப் பரிசு தான் தரவேண்டும். என்ன பரிசு தரலாம்?” என்று சொல்லி விட்டுக்  கன்னத்தில் விரலை வைத்து யோசிப்பதைப் போல் நடித்தான். முகத்தில் கேலிச் சிரிப்பு தவழ்ந்தது.

“வேண்டாம், வேண்டாம், பாவம் இவர்கள் அப்பாவிகள். இவர்களை மன்னித்து விட்டு விடுங்கள். இவர்களை இங்கிருந்து அனுப்பி விடுங்கள். இவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீது இருக்கும் அன்பால் வந்திருக்கிறார்கள். எனக்காக இவர்களை விட்டு விடுங்கள்” என்று இளவரசி ஐயை, மலைக்கோட்டை மாயாவியிடம் கண்ணீருடன் கெஞ்சினாள்.

“இளவரசியே சொல்லி விட்டார். இவர்களை மன்னித்து விட்டு விடலாமா? எதற்கும் இந்தச் சிறுவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம். தாயின் மடியில் படுத்துக் கொஞ்சுகின்ற பருவத்தில், நாய், பூனைகளுடன் விளையாடுவதை மறந்து விட்டு மாயாவியிடம் மோத வந்திருக்கிறாயே சிறுவனே? நான் யார் என்று உனக்கு நன்றாகத் தெரியுமா?” என்று துருவனைப் பார்த்து கர்ஜித்தான் மாயாவி.

துருவனோ, அவனுக்கு பதில் சொல்லாமல் தானும் கை கொட்டிச் சிரிக்க ஆரம்பித்தான். மாயாவிக்குக் கோபம் தலைக்கு மேல் ஏறியது.

தொடரும்,

( ஹலோ குட்டீஸ், ஸ்கூல் திறந்து புது கிளாஸுக்குப் போயிட்டீங்களா? ஹோம் வொர்க்லாம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சா? நேரம் கிடைக்கும் போது பூஞ்சிட்டை எடுத்துப் படிக்க ஆரம்பிங்க, ஓகேயா? அடுத்த அத்தியாயத்தில் மாயாவிக்கும், துருவனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் நடக்கப் போகுது. துருவனை நாம எல்லாருமாச் சேந்து ஜெயிக்க வைப்போமா? அடுத்த மாதம் சந்திக்கலாம். பை ‌👋👋👋👋

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments