ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், உலக டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் 27-வது இடம், மகளிர் இரட்டையர் போட்டியில் முதலிடம், பத்தாண்டுகள் இந்திய டென்னிஸ்ஸின் நம்பர் ஒன் வீராங்கனை என சானியா தொட்ட உச்சங்கள் அனைத்தும் இந்தியாவைப் பொறுத்தவரை காலத்தால் மறக்க முடியாத முத்தான முதல் சாதனைகள்.
மும்பையில் சானியா பிறந்தார். சொந்த ஊர் ஹைதராபாத். சானியாவின் தந்தை கிரிக்கெட் பிரியர். டென்னிஸ் விளையாட்டிலும் ஈடுபாடுகொண்டவர். சானியாவுக்கு 4 வயதானபோது அமெரிக்காவில் அவரது குடும்பம் சில காலம் வசித்தது. அங்கே உள்ள விளையாட்டு கிளப்பில் சானியாவின் தந்தை டென்னிஸ் விளையாடுவதை வாடிக்கை யாக வைத்திருந்தார். அப்போது தான் டென்னிஸ் விளையாட்டு சானியாவுக்கு அறிமுகமானது.
விடாப்பிடி பயிற்சி
1992-ல் ஹைதராபாத் திரும்பிய பிறகு டென்னிஸ் பயிற்சியில் சானியாவைச் சேர்க்க அவருடைய அம்மா நசீமா விரும்பினார். அப்போது ஹைதராபாத்தில் இந்திய அணியின் முன்னாள் டென்னிஸ் வீரர் ஸ்ரீகாந்த், குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.
திறன் அடிப்படையில் குழந்தைகளைத் தேர்வுசெய்த அந்தப் பயிற்சியில், சானியாவை எப்படியும் சேர்த்துவிட வேண்டும் எனக் கடும் பிரயத்தனம் செய்தார் நசீமா. “சானியா டென்னிஸ் விளையாடும் அளவுக்கு வளரவில்லை” என்று கூறி பயிற்சியில் சேர்க்க ஸ்ரீகாந்த் மறுத்தார். ஆனால், நசீமா விடவில்லை. ஸ்ரீகாந்தை விடாமல் வற்புறுத்தி, தன் மகளைப் பயிற்சியில் சேர்த்துவிட்டார்.
பயிற்சியில் டென்னிஸ் ராக்கெட்டைப் பிடித்து சானியா காட்டிய வேகமும் விவேகமும் பயிற்சியாளரை வியப்பில் ஆழ்த்தின. அவர் வழங்கிய கடுமையான பயிற்சிகளைச் சாதாரணமாகச் செய்துமுடித்தார். அவரது வழிகாட்டலில் தேர்ந்த டென்னிஸ் வீராங்கனையாக சானியா உருவெடுத்தார்.
ஒரு முறை பயிற்சியின்போது நடந்த டென்னிஸ் போட்டியில் 8 வயதான சானியா, 16 வயதுப் பெண்ணைத் தோற்கடித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். சிறு வயதிலேயே டென்னிஸ்ஸில் அவரது சர்வீஸும், வரும் வேகத்திலேயே பந்தைத் திருப்பி அனுப்பும் வேகமும் பெரியவர்களைக் கூடத் திணறடித்தன.
முதல் வெற்றி
2001-ல் சானியாவின் தொழில்முறை டென்னிஸ் பயணம் தொடங்கியது. நாடு முழுவதும் நடைபெற்ற 12, 14, 16, 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுவந்தார். ஜூனியர் பிரிவில் விளையாடிய காலத்தில் ஒற்றையர் பிரிவில் 10 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 13 பட்டங்களையும் வென்று இந்திய அளவில் முன்னணி வீராங்கனையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சானியா. அதே கால கட்டத்தில் சர்வதேசப் பயணத்தையும் வெற்றிகரமாகவே தொடங்கினார். 2003-ம் ஆண்டில் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் அவர் பட்டம் வென்றதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்போது அவருக்கு 16 வயதுதான். சானியாவின் இந்த வெற்றி டென்னிஸ் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பெருமையான தருணம்
2003 தொடங்கி 2010வரை சர்வதேச அளவில் ஏராளமான ஒற்றையர் போட்டிகளில் சானியா பங்கேற்றார். 2005-ல் அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுவரை முன்னேறியதே சானியாவின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சிறந்த ஆட்டம். ஆனால், மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார். குறிப்பாக, 2010-க்குப் பிறகு இரட்டையர் பிரிவுகளில் தொடர்ச்சியாக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் சானியா.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2009), பிரெஞ்சு ஓபன் (2013), அமெரிக்க ஓபன் (2014) என மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தினார். இதே பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் (2008, 2014, 2017), பிரெஞ்சு ஓபன் (2016) போட்டிகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மகளிர் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து விம்பிள்டன் (2015), அமெரிக்க ஓபன் (2015), ஆஸ்திரேலிய ஓபன் (2016) போட்டிகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்திருக்கிறார் சானியா. 2015-ல் மார்ட்டினாவுடன் சேர்ந்து தொடர்ச்சியாக இரட்டையர் பிரிவில் சாதித்தபோதுதான், அந்தப் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை சானியா அடைந்தார்.
இதுவரை ஆசிய அளவில் எந்த டென்னிஸ் வீராங்கனையும் செய்யாத சாதனை இது. இந்திய வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்திய டென்னிஸ் வரலாற்றில் மைல்கல். இதன்மூலம் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் அடுக்கடுக்கான வெற்றிகளை ஈட்டினார். 2015 ஆகஸ்ட் முதல் 2016 பிப்ரவரிவரை விம்பிள்டன் உட்பட 41 முறை மார்ட்டினா ஹிங்கிஸுடன் சேர்ந்து வெற்றிகளைக் குவித்தார் சானியா.
கிடைத்த கவுரவம்
டென்னிஸ் விளையாட்டில் ‘ஃபோர்ஹேண்ட் ஷாட்’ என்பது மிகவும் திறன்வாய்ந்த ஒரு உத்தி. சர்வதேச அளவில் புகழப்படும் இந்த உத்தியைப் பயன்படுத்துவதில் சானியா கில்லாடி. இந்தப் பாணியில் பல அற்புதமான ஷாட்களை ஆடி சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறார். 2010-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை சானியா மணந்தபோது சர்ச்சைகள் எட்டிப் பார்த்தன ‘பாகிஸ்தானியரை மணந்தாலும் இந்தியாவுக்காக விளையாடுவேன்’ என்று அறிவித்து, இதுவரை சொன்ன வாக்கிலிருந்து விலகாமல் பயணித்துவருகிறார் சானியா.
2016 ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிவரை முன்னேறி நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சானியா இழந்தார். ஆனால், இரட்டையர் பிரிவில் தான் வலிமையான வீராங்கனை என்ற பெருமையை நிரூபிக்க அவர் தவறவில்லை.
ஒற்றையர் பிரிவில் 63 சதவீத வெற்றிகளையும் இரட்டையர் பிரிவில் 70 சதவீத வெற்றிகளையும் ஈட்டியுள்ள சானியா, தற்போது உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 42 முறை WTA (Women Tennis Association) பட்டங்களையும்; 18 முறை ITF (International Tennis Federation) பட்டங்களையும் சானியா வென்றிருக்கிறார்.
டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் சாதனை மங்கையாகப் பயணித்துவரும், சானியாவின் திறமையை அங்கீகரிக்கும்வகையில் 2004-ல் அர்ஜுனா விருதையும் 2006-ல் பத்மஸ்ரீ விருதையும் 2015-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.