வணக்கம் பூஞ்சிட்டுக்களே,

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

பள்ளிகளிலும் வீடுகளிலும் சுதந்திர தினத்தை பற்றிய கதைகளையும், சுதந்திரம் பெற போராடிய தலைவர்களின் வீர தீர செயல்களையும் கேட்டு தெரிந்திருப்பீர்கள்!

அரும்பெரும் நாடான நம் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு அஹிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றோம் குழந்தைகளே!

இப்படி நம் நாட்டின் சுதந்திர வரலாற்றை ஒரு வரியில் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஏன் அடிமை படுத்தினார்க்ள்? நம் நாட்டில் அப்படி என்னவெல்லாம் சிறப்பு இருந்தது ? என்று தேடி படியுங்கள் குழந்தைகளே.

இப்பொழுது நாம் எது சுதந்திரம்? சுதந்திரம் என்ற வார்த்தை நம் அன்றாட வாழ்க்கையில் எங்கு தேவைப்படுகிறது என்று கொஞ்சம் யோசிப்போமா?

பாடம் எதுவும் படிக்காமல், சாப்பிட சொல்லாமல், காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க சொல்லாமல், நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்ப்பதும், விளையாடுவதுமாக இருந்தால் சுதந்திரமாக இருக்கும் என்று தோன்றுகிறதா?

அப்படி தோன்றாமல் இருந்தால் சபாஷ் குட்டீஸ்!

அப்படியே தினமும் செய்தாலும் சலிப்பாகி விடும், உடம்பும் மனமும் சோர்வாகிவிடும் இல்லையா செல்லங்களே,

நம் உடலை நல்ல முறையில் வளர்ப்பதுதான் உண்மையில் சுதந்திரம் குழந்தைகளே, சில பாட்டி தாத்தாலாம் சுகர் இருக்கு இனிப்பு சாப்பிட கூடாது, பிரஸர் இருக்கு உப்பு சாப்பிட கூடாது என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? முட்டு வலி, மாடி ஏற முடியவில்லை என்று சொல்வதையும் கேட்டிருப்பீர்கள். விரும்பியதை சாப்பிட முடியவில்லை என்றால் அப்புறம் எப்படி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்? அதனால சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்யனும், அம்மா அப்பா கொடுக்கும் சத்தான காய்கறிகளையும், பழங்களையும், அடம்பிடிக்காமல் சாப்பிடனும். அப்போதான் நீங்க பெரியவங்களா ஆனதுக்கப்புறமும் நல்லா சாப்பிடவும், நோய் எதுவும் இல்லாமல், மருந்து மாத்திரை சாப்பிடாமல் சுறுசுறுப்பாக விரும்பியதை சாப்பிடவும் விரும்பிய இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வரவும் முடியும் குட்டீஸ்.

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்”

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

போன்ற பழமொழிகள் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். உங்களுக்கு வேறு ஏதும் பழமொழிகள் தெரிந்தாலும் சொல்லுங்க குழந்தைகளே.

உடலின் சுதந்திரத்தை நன்கு சரிவிகித உணவை உண்பதன் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் பெற திட்டமிட்டு விட்டீர்களா ?

அடுத்து நம் அறிவு சுதந்திரமாக சிந்திக்க என்ன செய்யலாம்? நிறைய கதைகள், கட்டுரைகள் வாசிக்கலாம் குழந்தைகளே! வாசிக்கும் பொழுது நம் சிந்தனை திறன் மேலோங்கி நம் வாழ்வில் சுதந்திரமாக சிந்திக்க முடியும். நாம் வாசித்ததை மற்றவர்களுடன் பகிரும் பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள். இதன் மூலம் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நிகழும். மற்றவர்களுடன் பரிசீலிக்கும் திறந்த மனமும் நமக்கு பழகும்.

பரந்த உள்ளத்தோடும் நல்ல சிந்தனையோடும் சுதந்திரமாக செயல்பட நிறைய வாசிங்க செல்லங்களே!

அதே நேரத்தில் வரையறை இல்லாத சுதந்திரமும் நல்லதல்ல குழந்தைகளே. நம் நாடு சுதந்திரம் பெற்றதோடு அப்படியே விட்டு விடவில்லை நம் தலைவர்கள், நம் நாட்டின் எல்லை எது? என்று நம் நாட்டின் வரைபடம் வரைந்தார்கள். நம் நாட்டுக்கென்று தேசிய கீதம் , தேசிய கொடி, அரசியமைப்பு சட்டம் எல்லாம் பெரு முயற்சியோடு கொண்டு வந்தார்கள். அதனால்தான் நாம் இன்று பெருமையோடு இந்தியர்கள் என்ற அடையாளத்தோடு உலகம் முழுதும் வளம் வருகிறோம். பல சாதனைகள் புரிகிறோம். அதே போல் நம் தனி மனித சுகந்திரத்திலும் பெற்றோரின் வரையறைகளை புரிந்து செயல்பட வேண்டும் செல்லங்களே.

சுறுசுறுப்பாக இருப்பது சுதந்திரம்!சுய சிந்தை சுதந்திரம்! வரையறையோடு சுதந்திரம் வளமானது!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் பூஞ்சிட்டூஸ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments