“தாத்தா.. தாத்தா.. தாத்தா!” வீட்டின் தாழ்வாரத்திலிருந்து சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான் மனோ.
“என்னடா ஏலம் போடுற?” கைபார்த்துக் கொண்டிருந்த கீரைக் கட்டைக் கீழே வைத்தார் தாத்தா.
“உடனே வெளியே வாங்க தாத்தா!” அனுவின் சத்தமும் சேர எழுந்து வெளியே வந்தவர் அலுத்துக் கொண்டே சொன்னார், “வந்துட்டேன்.. எதுக்குக் கூப்பிட்ட?
“நாம் இங்கே இருக்கிற டயர், தேங்காய் சிரட்டை எல்லாத்தையும் க்ளீன் பண்ணனும்.. எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. வாங்க!”
“ஏன்டா இப்போ இந்த வேலை?”
“இதிலே தான் டெங்கு கொசு முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம். இப்போ மழை பெஞ்சிருக்கு. தண்ணி சேர்ந்திருக்கும். அதான் கொசு முட்டை போடுறதுக்குள்ள நாம் கிளீன் பண்ணிடலாம்.”
“இதெல்லாம் யார் உனக்கு சொன்னா?”
“இன்னைக்கு நம்ம ஊர் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்து டாக்டர், நர்ஸ் எல்லாம் வந்தாங்க. அவங்கதான் சொன்னாங்க”
“அவங்களுக்கு வேற வேலையில்லை..” துண்டை தோளில் தட்டிப் போட்டவர் உள்ளே செல்ல திரும்ப, மனோ முன்னே போய் நின்றான், “என்ன தாத்தா.. இப்படி சொல்லிட்டீங்க. என் ஃப்ரெண்ட் ஹரிணிக்கு டெங்கு வந்து அந்த ஹாஸ்பிடல்லதான் அட்மிட் ஆனா.. கையில் குளுக்கோஸ் எல்லாம் போட்டாங்களாம்..”
“அச்சோ.. அந்த முடியைத் குட்டையாய் வெட்டிக் குதித்து குதித்து நடக்குமே அந்த சுட்டிக் பெண்ணுக்கா காய்ச்சல்..”
“அவளுக்கே தான்.”
“ஆனால் எங்கும் கடவுள் இருக்காரோ இல்லையோ, நம்ம ஊரில் எங்கும் கொசு இருக்கும். நம்ம வீட்ல டயர், சிரட்டையை எடுத்துப் போட்டா கொசு ஒழிஞ்சிடுமா மனோ?”

“அவன் சொல்றது சரிதான் மாமா.. கொசுக்கள்ல ரெண்டு வகை இருக்கு. ஒன்று சாக்கடையில் முட்டை போடும். இன்னொன்னு நல்ல தண்ணியில முட்டை போடும். டெங்கு, மலேரியா பரப்புற கொசு நல்ல தண்ணியில் முட்டை போட்டு, வீட்டுக்குள்ளே ஜன்னல் ஸ்க்ரீன், மேஜையடியில்னு நம்மோடு வாழும். அதனால் இதையெல்லாம் க்ளீன் பண்ணாலே கொசு உற்பத்தியாகிறதை நாம் தடுக்க முடியும்..”
“சரி.. நம்மவீட்ல கொசு வளர்ற இடத்தையெல்லாம். சுத்தம் பண்ணிடலாம். பக்கத்து வீட்ல இருந்து கொசு இங்கே வந்துட்டா?”
“டெங்கு தடுப்புல ரெண்டு முக்கியமான தடுப்பு நடவடிக்கை இருக்கு மாமா.. ஒன்று கொசு உற்பத்தியாவதைத் தடுப்பது. ரெண்டாவது கொசு கடிக்காமல் தடுப்பது..”
“எப்படிம்மா கொசு கடிக்காமல் தடுக்க முடியும்?” அனு ஆர்வமாய்க் கேட்டாள்.
“இந்த கொசு பெரும்பாலும் பகல் பொழுதில் தான் ரொம்பவும் ஆக்டிவா இருக்கும் அனு. அந்த நேரங்களில்கொசு கடிக்காமல் பாத்துக்கனும். . முடிஞ்சா ஜன்னல்களில் நெட் போடலாம். அப்புறம் அது முழங்கைக்குக் கீழே, முழங்காலுக்கும் கீழே கடிக்கிற அறிவாளி கொசு. அதனால் நாமும் அறிவாளியாகி அந்த நேரங்களில் முழுக்கை, முழுக்கால் சட்டை போட்டுக்கணும். கொசுவிரட்டிச்சுருள், சட்டையில் தடவிக்கிற கொசு விரட்டி மருந்து எல்லாம் உபயோகப்படுத்தலாம்.”
“சூப்பர் மா.. நாங்க அப்படியே செய்றோம்..”
“சரிதான் மா.. நீ சொல்ற மாதிரியே பண்ணிடலாம். அந்த ஒரு வாரம் வாழ்ற இத்துணூன்டு கொசுவுக்கு இம்புட்டு அறிவு இருந்தா இத்தனை வருஷமா வாழ்ந்து இத்தாம் பெரிசா இருக்கிற நமக்கு எவ்ளோ அறிவு இருக்கும். வாங்கடா பசங்களா.. ஒரு கை பார்த்திடலாம்..” தாத்தா தன் பேரன் பேத்திகளோடு வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கும் பொருட்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
என்ன குட்டீஸ்.. மனோவும் அனுவும் அவங்க வீட்ல டெங்கு கொசுவைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கிட்டாங்க. எங்கே ஓடுறீங்க நீங்களும் உங்க வீட்டைக் க்ளீன் செய்திட்டு, முழுக்கை சட்டைப் போடப் போறீங்களா? குட் குட்டீஸ்!!

தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.