அத்தியாயம் 15

malaikottai15

இறுதிப் பகுதி யுத்தம் ஆரம்பித்து விட்டது.‌ இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த மாயாஜால வித்தைகளை ஒருவர் மீது மற்றவர், ஏவத் தயாராக நின்றார்கள். நாகங்களின் குருவான மலைப்பாம்பு இரண்டு பேரையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றது.

துருவன் ஆண்டவனைத் துதித்த பின்னர் தாய், தந்தையை மனதில் வணங்கி விட்டுத் தனக்கு வித்தைகளைக் கற்றுக் கொடுத்த குருவை மனதார வேண்டிக் கொண்டு தனது மந்திரக்கோலைக் கையில் எடுத்தான்.

மாயாவி தான் முதல் தாக்குதலைத் தொடங்கினான். தனது மாயசக்தியால் நூற்றுக்கணக்கான பாம்புகளை ஏவினான். துருவன் உடனே தனது மந்திரக்கோலை அசைத்து மயில்களை அனுப்ப, அந்த மயில்கள் பாம்புகளைத் துரத்தின. மாயாவி, சூறாவளிக் காற்றை ஏவியதும் துருவன் தன்னைச் சுற்றி ஒரு மலையை அரணாக உருவாக்கினான். இடி, மின்னலுடன் கூடிய மழையை மாயாவி உருவாக்க, மந்திரக்குடை ஒன்றை உருவாக்கித் தன்னை மூடிக் கொண்டான் துருவன்.

புகைப்படலத்தை மாயாவி உருவாக்க, அதைக் காற்றை ஏவி விரட்டினான் துருவன்.

அவர்கள் இருவருடைய யுத்தம் இப்படியே நீண்ட நேரம் தொடர்ந்தது. தீ, மழை, காற்று, விஷப் பூச்சிகள், பயமுறுத்தி நடுங்க வைக்கும் வினோத உருவங்கள், செவிகளைக் கிழிக்கும் நாராசமான ஒலி என்று பல்வேறு வகைகளில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் இருவரும் வல்லவர்கள் என்று நிரூபித்தார்கள்.

அப்போது தான் மாயாவிக்கு, துருவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அவனைப் பற்றித் தவறாக எடை போட்டு விட்டதைப் புரிந்து கொண்டான். அவனை வெல்வது கடினம் என்பதை நிச்சயமாக உணர்ந்து விட்டான். ஆயினும் தனது தோல்வியையும் இயலாமையையும் அவனால் ஏற்க முடியவில்லை. துருவனை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற வெறியும் ஆத்திரமும் மனதை ஆட்டி வைக்க, மாயாவி செய்யத் தகாத செயலைச் செய்யத் துணிந்தான்.

இருவருக்கும் இடையே நடந்த போர், இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை உணர்ந்த துருவன், மனதிற்குள் தனது குருவை வேண்டினான். மாயாவியைச் செயலிழக்க வைக்கும் மந்திரக் கயிறொன்றை அவர் அவனுக்கு அளித்திருந்தார். அதை மாயாவி மேல் இறுதி அஸ்திரமாக ஏவுவதற்கு முன்னால் ஒரு சிறு மணித்துளி, கண்களை மூடி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது தான் மாயாவி, ஈனத்தனமான அந்தச் செயலைச் செய்யத் துணிந்தான். தனது உறையில் இருந்த கூரிய வாளை உருவி, துருவனின் கழுத்தை நோக்கி வீசினான்.

மந்திர வித்தைகளைக் கையாளும் சமயம் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்பதும், எதிராளி கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் போது தாக்கக் கூடாது என்பதும் அவர்களுடைய போரின் விதிகள். விதிகளை மீறி விட்டான் மாயாவி. அவர்களுடைய போரை கவனித்துக் கொண்டு நின்ற மலைப்பாம்பு அவனுடைய செயலை உணர்ந்து தடுப்பதற்குள் வாள் துருவனின் கழுத்தை நெருங்கி விட்டது.

ஆனால் ஆண்டவனின் கருணையாலும், கௌதம ரிஷி, துருவனுக்கு அளித்திருந்த வரத்தாலும், அந்த வாளால் துருவனைக் காயப்படுத்த முடியவில்லை. அந்த வாள் ஒரு பூமாலையாக மாறி, துருவனின் கழுத்தை அலங்கரித்தது. தன்னலம் கருதாமல் துருவன், வரும் வழியில் செய்த நற்செயல்களின் பலனாக இறைவன் அருள் புரிந்து விட்டார்.

துருவன் புன்முறுவலுடன் கண்விழித்துத் தனது மந்திரக்கயிறால் மாயாவியைக் கட்டிப் போட்டு அவனைச் செயலிழக்க வைத்தான். மலைப்பாம்பு மாயாவியின் செயலால் சீற்றத்துடன் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

“மூடனே, உன்னை விட வயதிலும் அனுபவத்திலும் எவ்வளவோ சிறியவனான துருவன், மனதில் துணிவுடன் உன்னை எதிர்த்து நின்று போர் விதிகளைக் கடைப்பிடித்து நேர்மையாகப் போராடினான். ஆனால் நீயோ தோல்வியை ஏற்க முடியாமல் செய்யத் தகாத செயலைச் செய்யத் துணிந்தாய். உனக்கு இதற்காகக் கொடிய தண்டனை நிச்சயமாகத் தரப் போகிறேன்” என்றது.

மாயாவி, மனம் வருந்தி தவறை உணர்ந்து கண்ணீர் உகுத்து நின்றான்.

“சிறுவனே! உனது வீரத்துக்கு முன்னால் நான் தோற்று நிற்கிறேன்.‌ என்னை உனது கரத்தால் கொன்று விடு. இந்தத் தோல்வியை ருசித்த பின்னர் எனக்கு உயிர் வாழ ஆசையில்லை” என்றான்.

“மலைக்கோட்டை மன்னரே! உங்களுக்கு தண்டனை தரும் அளவு நான் ஒன்றும் உயர்ந்தவன் இல்லை. நான், தங்களால் சிறை பிடிக்கப்பட்ட சிலரைக் காப்பாற்ற விழைந்தேன். எனது பணி முடிந்தது. இனியாவது மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தாமல் ஆட்சி செய்யுங்கள். நான் எனது நாட்டிற்குத் திரும்புகிறேன்” என்று கூறினான்.‌ மாயாவியோ துருவனின் பதிலால் மனம் நெகிழ்ந்து நின்றான்.

“பார்த்தாயா மாயாவி? இந்தச் சிறுவனின் மனதில் இருக்கும் கருணையும், கனிவும் உனது உள்ளத்தில் இல்லாதது தான் உன்னுடைய தோல்விக்குக் காரணம். மன்னிப்பு தான் உனக்கு மிகப் பெரிய தண்டனை. இனியாவது குழந்தைகளைச் சிறைப்பிடித்துப் பெற்றோரை மனம் வருந்த வைக்காமல் நல்லவனாக வாழத் தொடங்குவாயாக! உன்னுடைய தவறுகளுக்கு தண்டனையாக உனது மாயசக்திகளை உன்னிடமிருந்து இந்தக் கணமே நான் பறித்துக் கொள்கிறேன். நல்ல எண்ணங்களுடன் நன்னடத்தையை நீ தொடர்ந்து கடைப்பிடித்தால் ஓராண்டு நிறைவு பெற்றதும் உன்னுடைய சக்திகளை மீண்டும் அளிக்கிறேன் ” என்று மலைப்பாம்பு குரு கூறியது.

“நான் குழந்தைகளைக் கவர்ந்து வந்தேனே ஒழிய, அவர்களை எந்தக் காரணம் கொண்டும் வன்முறைக்கு ஆளாக்கவில்லை. அவர்களைக் கவர்ந்து வந்ததன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. எனது தாய், அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். காட்டிற்கு வேட்டையாட வந்த ஒரு மன்னருக்கு உதவி செய்து அவருடைய உயிரைக் காப்பாற்றினார்.

அந்த மன்னரும் எனது தாயை மணந்து கொண்டு வனத்தில் வாழ்க்கை நடத்தினார். நான் பிறந்து சில நாட்களில் தனது நாட்டுக்குத் திரும்பிய பின்னர், எங்களை மறந்து விட்டார். மற்றொரு நாட்டு இளவரசியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதாகக் கேள்விப்பட்ட என்னுடைய தாய், மன்னரைச் சென்று சந்தித்தார்.

அரக்கர் குலத்து அம்சங்களுடன் பெரிய உருவத்தில் பிறந்திருக்கும் இவனை இந்த நாட்டு இளவரசனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி எனது தாயை, எனது தந்தை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். மனம் உடைந்து போன எனது தாய், அந்தத் துயரத்தினாலேயே உயிர் இழக்க, நான் அனாதையானேன். இந்தக் காரணத்தினாலும் மன வருத்தத்தாலும் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வசிக்கும் குழந்தைகளைக் கண்டால் என் மனதில் ஆத்திரம் பெருகியது.

விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும் நிறைய வித்தைகளைப் பல குருக்களிடம் கற்றுக் கொண்டேன். வனம், வனமாகத் திரிந்தேன். எனது உடல் வலிமையாலும், எனது சக்தியாலும் மனிதர் பலரை எனக்கு அடிமையாக்கி, இந்த மலைக்கோட்டையை உருவாக்கினேன். குழந்தைகளைக் கவர்ந்து வந்து மனிதரைத் துன்புறுத்தி இன்பம் கண்டேன்” என்று தனது கதையைக் கூறினான் மாயாவி.

துருவனும் அவனுடைய கதையைக் கேட்டு மனம் வருந்தினான். “அன்புக்கு ஏங்கிய உங்களுடைய துயரம் புரிகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்தாலே, அவர்கள் நம்மை நேசிப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள். என்னுடன் வாருங்கள். எனது தாய், தந்தை எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் வற்றாத அன்பை அள்ளித் தருவதில் வள்ளல்கள். எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக உங்களை ஏற்றுக் கொள்கிறோம்” என்று மனதார அழைத்த துருவனுக்கு மாயாவி நன்றி கூறினான்.

தனது தவறை உணர்ந்த மாயாவியின் மீதிருந்த மந்திரக்கயிறை அகற்றினான் துருவன். மலைப்பாம்பு குருவும், துருவனும் மாயாவியிடம் இருந்து விடை பெற்றார்கள். அபூர்வனும் திரும்பி வந்து விட்டான்.

மாயாவி மனம் மகிழ்ந்து போய் நின்றான். தன்னை சகோதரனாக ஏற்ற துருவனுக்கும், அபூர்வனுக்கும் எண்ணற்ற பரிசுகளை அளித்து விடை கொடுத்தான்.

“நான் இனி அமைதியாக எனது மலைக்கோட்டையில் இங்கு வசிக்கும் மக்களிடம் அன்பு செலுத்தி ஆட்சி செய்வேன். அதிகாரமோ, அச்சமோ உருவாக்க இயலாத விளைவுகளை அன்பால் பெற்றுத் தரமுடியும் என்ற மிகப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். அண்டை நாடுகளுக்கு நட்புக்கரம் நீட்டுவேன். இனி அனைவரும் அச்சமில்லாமல் மலைக்கோட்டைக்கு வந்து எனது விருந்தினராகத் தங்கி மகிழலாம்” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தான்.

அனைவரும் மலை அடிவாரத்தை அடைந்தார்கள். மலைப்பாம்பு குரு, நாக இளவரசரை அழைத்துக் கொண்டு தனது தேசத்து நாகங்களுடன் கிளம்பியது.‌ அதற்குள் மாயாவி வீழ்ந்த செய்தி தெரிந்து, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த பல இளவரசர், இளவரசிகளை அழைத்துப் போகவென்று பல நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர் ‌காத்துக் கொண்டிருந்தனர். அனைவரும் துருவனுக்கு நன்றி கூறி விட்டுத் தங்கள் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துச் சென்றார்கள்.

அபூர்வனின் தாய், தந்தையரும் வந்து தனது மகனின் வீரதீர சாகசங்களைக் கேட்டுப் பெருமையுடன் பார்த்து இரசித்தார்கள். அபூர்வன் அங்கிருந்து துருவனிடம் விடை பெற்றான்.

“எனது பெற்றோரும் நாட்டு மக்களும் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சென்று அவர்களுடன் சில நாட்களைக் கழித்து விட்டு, வந்து உன்னைச் சந்திக்கிறேன். நாம் மீண்டும் சேர்ந்து புதிய இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்ளலாம். நமது நட்பு தொடரட்டும்” என்று சொல்லி விட்டு விடை பெற்றான்.

துருவனுக்கு உதவி செய்த கழைக்கூத்தாடி குழுவினரும் அங்கே காத்துக் கொண்டிருந்தார்கள். தனக்கு உதவி செய்த அவர்களுக்கு மனதார நன்றி சொல்லி, மாயாவி தனக்களித்த பரிசுப் பொருட்களை அவர்களிடம் கொடுத்து விட்டான் துருவன்.

இறுதியாக எஞ்சியிருந்த துருவன், ஐயை, அணில், மயில், கிளி இவர்கள் வனத்தின் ஊடே மீண்டும் பயணம் செய்து தலைநகரை அடைந்தார்கள். இளவரசியைக் கண்டு மக்கள் அளவற்ற ஆனந்தம் கொண்டு நகரமெங்கும் தீபங்களை ஏற்றி, மலர்களால் நகரை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

அரசனும், அரசியும் தங்கள் அன்பு மகளைக் கண்டு பேச வார்த்தையே இல்லாமல் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து நின்றார்கள்.

“துருவா, நீ எங்களுக்காகச் செய்தது மகத்தான உதவி. பாராட்டவோ, நன்றி கூறவோ வார்த்தைகளே நாவில் வரவில்லை. இங்கேயே எங்களுடன் அரச மாளிகையில் தங்கி விடு. சகல வசதிகளுடன் நிம்மதியாக வாழலாம்” என்று அரசர் ஒரு வேண்டுகோளை, துருவன் முன் வைத்தார். துருவன் மறுத்து விட்டான்.

 நானும் என்னுடைய தாய், தந்தையைப் பிரிந்து வந்து நாட்களாகி விட்டன. எனக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் வசிப்பதில் தான் எனக்கு இன்பம் இருக்கிறது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பினான். எண்ணற்ற பரிசுகளுடன் அவனை வழியனுப்பினார் அரசர். மயில் இளவரசியுடன் அங்கேயே தங்கிவிட்டது. கிளியும் துருவனுடன் தான் இனி இருக்கப்  போவதாகச் சொல்லி விட்டதால், அணில் மட்டும் வனத்திற்குத் திரும்பியது.

துருவன் தனது குருவைச் சென்று சந்தித்து விட்டு, அவருடைய ஆசிகளைப் பெற்ற பின்னர், தனது கிராமத்திற்குத் திரும்பினார். துருவனின் பெற்றோர் மகனுடைய மகத்தான செயலைக் கேட்டுப் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்கள். இரண்டு திங்கள் கிராமத்தில் கழித்த பின்னர், மீண்டும் துருவன் கிளம்பித் தனது குருவின் ஆச்ரமத்தை அடைந்தான். அவன் முன்னால் சொன்னபடி, அவரிடம் நீண்ட நாட்கள் தங்கி அனைத்துக் கலைகளையும் ஆற‌ அமரக் கற்றுத் தேர்ந்தான்.

இப்போது துருவன் வளர்ந்து விட்டான். மலைக்கோட்டை சாகசம் முடிந்து பல வருடங்கள் ஓடி விட்டன. மலைக்கோட்டை மாயாவியும் நல்லதொரு அரசனாக மக்களிடம் அன்பும் அக்கறையும் காட்டி ஆட்சி செய்து பேரும் புகழும் பெற்றான்.

துருவன் சொன்னபடி முடிந்த போதெல்லாம் மாயாவி வந்து துருவனின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுடன் நேரத்தைச் செலவழித்தான். அவர்களும் மாயாவியைத் தங்களுடைய மகனாக ஏற்றுப் பாசம் காட்டினார்கள்.

இப்போது துருவன், அவர்களுடைய நாட்டின் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறான். அரசர், தனது மகள் ஐயையை, நாட்டின் அரசியாக முடி சூட்டி விட்டு ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகி விட்டார்.

அபூர்வன், அடிக்கடி வந்து துருவனைச் சந்திக்க வருகிறான். இருவருமாகச் சேர்ந்து கடல் பயணம் மேற்கொண்டு பல்வேறு புதிய தேசங்களைப் பார்க்கத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படிப் பயணம் மேற்கொள்ளும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்.

அன்பும், நேசமும் என்றும் உலகில் நிறைந்திருக்கட்டும்.

நிறைவு.

(ஹலோ குட்டீஸ் , இத்துடன் மலைக்கோட்டை மாயாவி உங்களிடம் இருந்து விடை பெறுகிறான். அடுத்து ஒரு சாகசப் பெண்ணின் கதையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

தொடர்ந்து படித்த குழந்தைகளுக்கும், இனிமேல் படிக்கப் போகும் குழந்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *