தன் உணவை வேட்டையாடி உண்ணும் பறவைகள் ஆங்கிலத்தில் “Raptors” என்றும், தமிழில் “இரை வாரி உண்ணி” என்றும் அழைக்கப்படுகிறது. வல்லூறு (Shikra) நாம் எளிதில் அடையாளம் காண கூடிய மத்திய அளவிலான இரை வாரி உண்ணிகளில் ஒன்று. இப்பறவை இனம், வில்லேத்திரன்குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதை இந்திய துணைக் கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்க முடியும். இதன் scientific name- Accipiter badius ஆகும்.
இதன் உடலளவு கிட்டத்தட்ட ஒரு அடி இருக்கும் (சாதாரண புறாவின் அளவை ஒத்தது). ஆண் பெண் பறவைகள் இடையே சிறிய வித்தியாசங்கள் காணலாம். ஆண் பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; பெண் சற்றுப் பெரியதாயிருக்கும். ஆண் பறவையின் கண் சிவப்பாகவும், பெண் பறவையின் கண்கள் மஞ்சளாகவும் இருக்கும். வாலில் கரும்பட்டைகள் இருக்கும்.
வீட்டின் கொல்லை மரங்களில் காணலாம். திறந்தவெளிப் பகுதிகளை விரும்பும் வல்லூறு, அடர்ந்த வனங்களைத் தவிர்க்கும். மனித வாழ்விடங்களுக்கு அருகில் அதிகம் காணப்படும்.
இலைகளடர்ந்த மரக்கிளைகளில் அமர்ந்து இரைகளைக் கண்காணிக்கும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இரையை நோக்கிக் கீழிறங்கி இமைப்பொழுதில் இரையைக் கொத்திச் செல்லும். இறக்கைகளைப் பலமுறை அடித்த பின் நழுவும் பாணியில் பறந்து செல்லும். வானத்தில் வட்டமிடும் பாணியில் பறப்பதையும் காணலாம்.
கி .. கீ … என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பும்.
அணில்கள், ஓணான்கள், எலிகள், குருவிகள், தட்டானின் இளம்புழுக்கள் போன்றவை இதன் உணவாகின்றன. ஆனால் ஒய்வு எடுக்கும் போது அணில்கள் அருகில் வந்தாலும் கண்டு கொள்வது இல்லை. சில சமயங்களில் புறா போன்ற பெரிய பறவைகளையும் வேட்டையாடும். தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காலங்களில் வீடுகளிலிருந்து கோழிகளைத் திருடுவதும் உண்டு. வீட்டு முற்றத்தில் கூண்டில் உள்ள அலங்கார பறவைகளையும் வேட்டையாட முயலும்.
பெரிய மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்ந்த புல், வேர்களாலான காகத்தின் கூட்டையொத்த கூட்டை அமைக்கும்.
மூன்று அல்லது நான்கு நீல வெண்ணிற முட்டைகளைப் பெண் பறவை இடும். ஆணும் பெண்ணும் சேர்ந்தே குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.
உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் பறவைகளில் ஒன்றான வல்லூறை , தோட்டத்தில் கண்டால் அடையாளம் காண முடியும் தானே!
அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணர்,
புகைப்படக் கலைஞர்,
பறவைகள் ஆர்வலர்