“அப்பா, அப்பா, கடைத்தெருவுக்குக் கிளம்பிட்டீங்களாப்பா?” ஏக்கத்துடன் அப்பா செய்து முடித்த பொம்மைகளைப் பார்த்தாள் பொம்முக் குட்டி. பொம்முவின் அப்பா சன்னாசி, களிமண்ணால் பொம்மைகள் செய்து வர்ணம் தீட்டிக் கடைத்தெருவில் விற்று விட்டு வருவார்.

பொம்மைகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை வைத்துக் குடும்பம் ஓடுகிறது. பொம்மு தான் மூத்தவள். எட்டு வயதுக் குழந்தை. அவளுக்குக் கீழே நாலு தம்பி, தங்கைகள். பொம்முவின் அம்மா தீராத நோயாளி. அடிக்கடி காய்ச்சல், இருமல் என்று ஏதாவது உடம்பைப் படுத்தும்.

எட்டு வயது பொம்மு, வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுடன் வீட்டையும் கவனித்துக் கொண்டு, தம்பி, தங்கைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள். பொம்முவின் இரண்டு தம்பிகளும், ஒரு தங்கையும் பள்ளிக்குப் போகிறார்கள். கடைசித் தங்கைக்கு இன்னும் பள்ளி செல்லும் வயதாகவில்லை. அந்தச் சிறு வயதிலும் வீட்டைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பொம்முவால், நோய்வாய்ப்பட்ட அம்மாவைத் தனியாக விட்டு விட்டுப் பள்ளிக்குப் போக முடிவதில்லை.

எவ்வளவோ பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் அந்த எட்டு வயதுப் பெண்ணின் உள்ளத்தில் இருக்கும் குழந்தை மனது அவ்வப்போது எட்டிப் பார்க்கும். அதுவும் அப்பா செய்யும் பொம்மைகளைப் பார்க்கும் போது மனம் ஏங்கும். வீட்டில் இருக்கும் போது தன்னுடன் வைத்துக் கொண்டு விளையாட ஒரு பொம்மையையாவது எடுத்து வைத்துக் கொள்ள மனதில் ஆசை துளிர்க்கும். ஆனால் அப்பாவிடம் கேட்க மாட்டாள். மனதில் இசையைப் போட்டுப் பூட்டிக் கொள்வாள்.

பொம்முவின் அப்பாவுக்கும் தெரியும். பொம்முவின் பார்வையில் தெரியும் ஏக்கத்தை அவரால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு பொம்மையும் விற்றுக் கிடைக்கும் பணம் வீட்டுச் செலவுக்குத் தேவை என்பதால் அவரும் பெருமூச்சுடன் அனைத்து பொம்மைகளையும் விற்பனைக்கு எடுத்துச் செல்வார்.

அன்று காலையில் அப்படித் தான் அவர் கிளம்பிக் கொண்டிருந்தார்.

“நான் கிளம்பறேன் பொம்மு. வீட்டைப் பாத்துக்கோ. இன்னைக்காவது எல்லா பொம்மையும் வித்துப் போனா, உங்க எல்லாருக்கும் தீபாவளிக்கு இனிப்பும் பட்டாசும் வாங்கிட்டு வரணும் ” என்று சொல்லிக் கிளம்பிய போது, அவர் கூடையில் இருந்து ஒரு பொம்மை தவறிக் கீழே விழுந்தது.

“அடடா” என்று சொல்லிக் கொண்டே பொம்மு, அந்த பொம்மையைக் கையில் எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள். கீழே விழுந்த வேகத்தால் அந்த பொம்மையின் ஒரு கால் உடைந்து போயிருந்தது.

“பொம்மை உடைஞ்சு போச்சு. உடைஞ்சு போன பொம்மையை யார் வாங்கப் போறாங்க? நீயே இதை விளையாட வச்சுக்கோ பொம்மு” என்று சொன்ன பொம்முவின் அப்பா, பொம்முவின் கையில் அந்த பொம்மையைக் கொடுத்து விட்டுக் கிளம்பிப் போனார்.

பொம்மை உடைந்ததாகவே இருந்தாலும் மகிழ்ச்சியுடன் எடுத்து வைத்துக் கொண்டாள் பொம்மு. ஈரக் களிமண்ணை எடுத்து உடைந்து போன காலை ஒட்ட வைத்தாள். அதைக் கொண்டு போய் வீட்டின் பின்புறத்தில் வெயிலில் காய வைத்தாள். அது ஒரு தேவதையின் பொம்மை. வெளியே வைத்து விட்டு பொம்மு வீட்டுக்குள் வந்தபோது, அந்த தேவதை பொம்முவைப் பார்த்து சிரித்த மாதிரி பொம்முவிற்குத் தோன்றியது.

இரண்டு நாட்கள் கழித்து தீபாவளிப் பண்டிகை. அந்த ஏழை வீட்டுக் குழந்தைகள் வசதியான அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பட்டாசுகள் விடுவதையும் புதுத் துணிகள் பற்றிப் பேசுவதையும் ஆசையுடன் வேடிக்கை பார்த்தார்கள்.

பொம்மு சிறிது நேரம் கழித்துப் போய்த் தனது பொம்மையைப் பார்த்தாள். ஓரளவு ஒட்டிக் கொண்ட மாதிரித் தான் அவளுக்குத் தெரிந்தது. நேரம் கிடைத்த போதெல்லாம் அந்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் பொம்மு.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்டா நீ வந்திருக்கே தேவி! என்ன பாக்கறே? நான் உனக்கு தேவின்னு பேர் வச்சிருக்கேன். எனக்குப் பேச்சுத் துணை இனிமே நீ தான். அம்மா பாவம் எவ்வளவு நாளா உடம்புக்கு முடியாமல் இருக்காங்க பாத்தியா? அவங்களை டாக்டர் கிட்டக் கூட்டிட்டுப் போன அளவுக்கு அப்பா கிட்டயும் பணம் இல்லை. பாவம், அப்பா கஷ்டப்பட்டு செய்யற பொம்மையும் நல்லா விக்க மாட்டேங்குது. இப்போ தீபாவளிக்கு எங்களுக்கெல்லாம் ஏதாவது வாங்கணும்னு அப்பாவும் முயற்சி செய்யறாரு. பணம் தான் கிடைக்க மாட்டேங்குது ” என்று தனது ஃப்ரண்டிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

bommu
படம்: அப்புசிவா

அன்று இரவு தூங்கும் போதும் தன் பக்கத்திலேயே தேவியை வைத்துக் கொண்டு தூங்கினாள் பொம்மு. நள்ளிரவில் விழித்துக் கொண்ட போது வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். தேர் போல் இருந்த ஒரு மேகத்தில் பொம்மு தூங்கிக் கொண்டு இருக்க, தேவி அந்தத் தேரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன பொம்மு? தூக்கம் கலைஞ்சு போச்சா? ” என்று சிரித்துக் கொண்டே தேவி கேட்க, பொம்மு அதிர்ச்சியுடன் சுற்று முற்றும் பார்த்தாள்.

“தேவி, நீ பொம்மை இல்லையா? உனக்குப் பேசத் தெரியுமா?  நாம் எங்கே வந்திருக்கோம்? ” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் பொம்மு.

“உன்னோட கவலையை எல்லாம் என் கிட்ட சொன்னே இல்லையா? நான் இன்னைக்கு உன்னை என்னோட உலகத்துக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன். நீ உன்னோட கவலைகளை எல்லாம் மறந்து சந்தோஷமா இருக்கலாம்” என்று சொன்ன தேவி, வானத்தில் மேகங்களுக்கு நடுவில் இருந்த ஒரு நகரத்துக்குக் கூட்டிக் கொண்டு போனாள்.

அங்கே இருந்த எல்லோரும் தேவி மாதிரியே அழகாகவும் நிறைய சக்திகள் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் பறந்து கொண்டு இருந்தார்கள். நிறைய மரங்கள் இருந்தன.

ஒரு மரத்தில் புதுப்புது ஆடைகள் தொங்கின. ஒரு மரத்தில் பழங்கள்; ஒன்றில் இனிப்புகள்; ஒன்றில் பட்டாசுகள்.

“உனக்கு எது வேணுமோ அதை வேணுங்கற அளவு எடுத்துக்கோ” என்று தேவி சொல்ல, பொம்மு தன் தம்பி, தங்கைகளுக்குப் புதிய ஆடைகள், இனிப்பு வகைகள், பழங்கள் என்று எல்லாம் எடுத்து மூட்டை கட்டிக் கொண்டாள். அந்த முட்டையைக் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பொம்மு நடந்த போது கீழே தவறி விழுந்தாள்.

கண்களை விழித்துப் பார்த்தால் அத்தனையும் கனவு. கனவாகவே இருந்தாலும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்த நாள் மாலையில் பொம்முவின் அப்பா, சாயந்திரம் வீடு திரும்பிய போது சந்தோஷமாக வந்தார். அவருடைய பொம்மைகள் அத்தனையும் விற்றுப் போனதோடு, ஒரு பெரிய கடையில் இருந்து நிறைய பொம்மைகளைச் செய்து தர ஆர்டர் கொடுத்து அட்வான்ஸும் கொடுத்திருந்தார்கள். அந்த வருட தீபாவளியை பொம்முவின் குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

பொம்முவின் கனவு பலித்து விட்டது. பொம்முவின் அப்பாவிற்கும் இப்போது நிரந்தர வருமானம் கிடைத்து வருவதால் பொம்முவின் அம்மாவை மருத்துவரிடம் காட்டி சிகிச்சைக்காகப் பணம் செலவழிக்க முடிந்தது. அம்மாவின் உடல்நலம் சரியாகி விட்டதால் இப்போது பொம்மு பள்ளிக்கும் போக ஆரம்பித்து விட்டாள்.

எல்லாம் தேவி வந்த வேளை தான் என்று பொம்மு நினைக்கிறாள். அதில் எந்தத் தவறுமில்லையே! தேவி என்ற தேவதையின் முகத்தில் எப்போதும் போலப் புன்சிரிப்பு தவழ்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments