நீலவால் பஞ்சுருட்டான்

படம்: Dr. பா. வேலாயுதம்

Blue tailed bee eater/ நீலவால் பஞ்சுருட்டான்

இந்த மாதம் நாம் பார்க்கப் போகிற பறவை இதுதான். நம் நாட்டில் கிட்டத்தட்ட ஏழு வகை பஞ்சுருட்டான் பறவைகள் இருக்கின்றன. அவற்றில் சில வலசை வருபவையாகவும் மற்றவை இருப்பிட பறவையாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு    Green bee eater   மற்றும் chestnut headed bee eater ஆகிய இரண்டும் இருப்பிடப்  பறவைகள். மற்ற சில வலசை வருபவை. இவற்றில் நீலவால் பஞ்சுருட்டான் துணைக்கண்டத்திற்குள் வலசை வரும். இந்திய துணைக்கண்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். குளிர்காலத்தில் தமிழகம் மற்றும் மற்ற தென்னிந்தியப் பகுதிகளுக்கு வலசை வரும்.

படம்: Dr. பா. வேலாயுதம்

ஆண் பெண் பறவைகள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். உடலின் மேற்புறம் பெரும்பாலும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி மற்றும் வால் நீல நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி கருப்பு முகமூடியும் தொண்டைப் பகுதியில் இளம் மஞ்சள் ஆரஞ்சு வண்ணமும் காணப்படும். அலகுகள் நீளமாகப் பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பெரும்பாலும் ஒரு இடத்தில் அமர்ந்து பூச்சிகள் வருகிறதா என்று பார்க்கும். கண்டவுடன் விரைவாக பறந்து சென்று அவற்றைப் பிடித்தவுடன் மீண்டும் அதே இடத்திற்கு வந்து அமர்ந்து உண்ணும். தேனீக்கள் சிறு வண்டுகள் பூச்சிகள் மற்றும் சில சமயங்களில் பெரிய தட்டான்களைக் கூட உணவாகக் கொள்ளும். பிடித்த உணவைக் கிளைகளில் அடித்து அவற்றின் மேற்கூடுகள் உடைந்த பின் உண்ணும். பெரும்பாலும் நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதியில் சிறு குழுக்களாக காணப்படும். காலை மற்றும் மாலை வேளைகளில் வயல்வெளிகளுக்கு அருகே இருக்கும் மின்கம்பங்களில் இவை கூட்டமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவை எழுப்பும் ஒலி சிறுபிள்ளைகள் உபயோகிக்கும் கிலுகிலுப்பை ஒலி போன்று இருக்கும். நீர் நிலைகளின் கரையோரங்களில் இருக்கும் மணல் மேடுகளில் துளையிட்டு முட்டையிடும். ஆண் பெண் இரண்டுமே அடைகாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *