நடந்து முடிந்த விஷயங்களைத் திரும்ப நினைத்துப் பார்த்தால் தாமரையால் நம்பவே முடியவில்லை. ‘இத்தனை சக்திகள் கிடைத்து என்ன பிரயோசனம்? ஸ்கூல் கூடப் போக முடியவில்லை. ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டிருக்கற என்னால என்ன நல்லது செய்ய முடியும்? தினம் தினம் சாப்பாடு ஒழுங்காக் கிடைக்கறதே போராட்டமா இருக்கற என்னோட வாழ்க்கையில, என்னால பெரிய சாதனை என்ன செய்ய முடியும்?’, என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குக் கிளம்பினாள் தாமரை. வழக்கம் போல ஆடு, மாடுகளைக் கொட்டிலில் அடைத்து விட்டு வீட்டை அடைந்தாள்.

அங்கே வீட்டிலோ நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சித்தி செண்பகம் சந்தோஷமாகத் தெரிந்தாள். மலர்ந்த முகத்துடன் தாமரையை வரவேற்றாள்.

“வாடி தாமரை வா. திடீர்னு நமக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு. நம்ம கஷ்டமெல்லாம் விடியப் போவுது. இனிமே நீ ஸ்கூலில் சேந்து திரும்பவும் படிக்க ஆரம்பிக்கலாம்”, என்று படபடவென்று பேசிக் கொண்டே போன சித்தியை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் தாமரை.

“நெஜமாவா சொல்லறீங்க சித்தி? அப்படி ஒரு நல்ல காலம் இப்ப திடீர்னு எப்படி வந்துச்சு?”, என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

“நான் வேலை பாக்கற ஒரு வீட்டம்மா, பெண்கள் படிக்கற ஸ்கூலில தலைமை ஆசிரியையா இருக்காங்க இல்லையா? அந்த ஸ்கூலுக்கு ஆயா வேலைக்கு என்னைக் கூப்பிடறாங்க. அதுவும் நாளைக்கே வந்து சேரச் சொல்லறாங்க. நல்ல சம்பளமாம். நீயும் அந்த ஸ்கூலிலயே சேந்து படிக்கலாமாம். தம்பி, தங்கச்சியையும் அங்கே வேலை பாக்கறவங்களுக்காக இருக்கற குழந்தைங்க காப்பகத்தில இப்போதைக்கு விட்டுட்டு அடுத்த வருஷம் ஏதோ நர்ஸரி வகுப்பாமே, அதில சேத்துக்கலாமாம். அந்த ஸ்கூல் இருக்கற அதே இடத்தில வீடும் தராங்களாம். ஏன்னா ராத்திரியும் வேலை இருக்குமாம். வேலை கெடக்கு வேலை? எவ்வளவா இருந்தாலும் நான் செஞ்சிடுவேன். நீங்க மூணு பேரும் படிச்சு நல்ல நெலைமைக்கு நாளைக்கு வர முடியும்னா இப்பக் கொஞ்சம் கூட வேலை பாத்துட்டுப் போயிரலாமே? அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. இனிமே மழையில, குளிருல இந்தக் குடிசையில கஷ்டப்பட வேணாம்”, என்று மகிழ்ச்சியுடன் பேசிய சித்தியைப் பரிவோடு பார்த்தாள் தாமரை.

பாவம் சித்தி, அப்பா இறந்து போனதுக்குப் பிறகு சித்தியின் முகத்தில் சிரிப்பையே பார்த்ததில்லை தாமரை. இன்று தான் பல வருடங்களுக்குப் பிறகு அந்த சோகமான முகத்தில் சிரிப்பும் சந்தோஷமும் சேர்ந்து எட்டிப் பார்த்தன.

ஒருவேளை மின்மினி தேவதை தான் இவற்றிற்கெல்லாம் காரணமோ? அவள் தான் பின்னால் சூத்திரதாரியாக நின்று இவற்றை நடத்தி வைக்கிறாளோ‌ என்று கூடத் தோன்றியது தாமரைக்கு.

‘இருக்கலாம். நிச்சயமாக அப்படித் தான் இருக்கும். அவளிடம் தான் நிறைய மாய மந்திர சக்திகள் இருக்கே? ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு இருக்கற என்னால என்ன செய்ய முடியும்னு நான் நெனைச்சது அவளுக்குத் தெரிஞ்சுருக்குமோ?’, என்று யோசித்தாள் தாமரை.

‘எப்படி ஆனால் என்ன? யார் காரணமாக இருந்தால் தான் என்ன? நல்லது நடந்தால் நமக்கும் நிம்மதி தான்’, என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலையில் ஸ்கூலுக்கு மூட்டை, முடிச்சோடு அந்தக் குடும்பமே போனது. ஒரு ரூம், கிச்சன் இருந்த குடியிருப்பில் அவர்களிடம் இருந்த சாமான்கள் அடங்கிப் போயின. அடுத்த நாளில் இருந்து தாமரை அதே ஸ்கூலில நான்காம் வகுப்பில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.

ஒரு மாதம் ஓடிப்போனது. தாமரையின் குடும்பம் புதுவாழ்க்கைக்குப் பழகிக் கொண்டது. தாமரையின் தம்பி, தங்கைக்கும் புதிய சூழ்நிலையில் ஆரோக்கியமாக வளர வாய்ப்பு கிடைத்தது. விளையாட நிறைய இடமும், புதிய நண்பர்களும் கிடைத்தார்கள்.

ஸ்கூலில் தாமரை சேர்ந்த ஒரு வாரத்தில் சென்னையில் இருக்கும் ஒரு என்.ஜி.ஓ. (NGO) அதாவது அரசு சாராத் தொண்டு நிறுவனம் ஒன்றில் இருந்து ஒரு பெண் வந்து குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைகள் இலவசமாகக் கற்றுத் தந்தாள். ஒரு மாதத்தில் கராத்தே, குங்ஃபூ, டாய்க்கோண்டு (Taekwondo) போன்ற கலைகளை அதிசயிக்கத்தக்க வேகத்தில் கற்றுத் தேர்ந்தாள் தாமரை.

கோல்டன் தமிழச்சிக்கு முதல் சவாலாக ஒரு வாய்ப்பு வந்து தாமரையைத் தட்டியெழுப்பியது. அறைகூவல் விடுத்தது.

நான்காம் வகுப்பின் ‘ஸி’ பிரிவைச் சேர்ந்த மாணவிகளைக் கூட்டிக் கொண்டு ஒரு சிறிய வேனில் ஸ்கூலில் இருந்து கல்விச் சுற்றுலா கிளம்பினார்கள். அருகிலிருந்த ஒரு பழத் தோட்டத்திற்குப் போவதாகக் கிளம்பினார்கள். அது ஒரு பெரிய பணக்காரருடைய பண்ணைத் தோட்டம். நிறையப் பழ மரங்கள் நல்ல பராமரிப்பில் வளர்க்கப் பட்டன. நல்ல தரமான பழங்களின் விளைச்சல் கிடைத்தது. அந்தப் பழங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதிக்காகவும், பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றபடி அருகிலிருக்கும் சின்ன, பெரிய பழ மார்க்கெட்டுகளுக்கும் அனுப்பப் பட்டன. அந்தப் பண்ணைத் தோட்டத்தைப் பார்க்கத் தான் ஸ்கூலில் இருந்து கூட்டிப் போனார்கள்.

அந்த வேனில் நான்காம் வகுப்பைச் சேர்ந்த இருபது மாணவிகள், ஒரு டீச்சர், வேன் டிரைவர் மற்றும் ஒரு ஹெல்ப்பர். இருபது மாணவிகளில் தாமரையும் ஒருத்தி.

வழியில் பாடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் ஜாலியாகப் போனார்கள். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி, வேனில் இருந்து இறங்கி உணவுப் பொட்டலங்களைப் பிரித்து அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள்.

தாமரைக்கு ஏனோ பசியே இல்லை. கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அப்படியே வைத்து விட்டாள். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் வேனில் ஏறினார்கள். ஏறினதுமே எல்லோருக்கும் தூக்கம் தூக்கமாக வந்தது. எல்லோருமே அவரவர் ஸீட்டில் சாய்ந்து தூங்கிப் போனார்கள்.

தாமரைக்கும் தூக்கம் வந்தது. கண்களை மூடிச் சாய்ந்து கொண்டாள். லேசாக ஒரு மாதிரி கிறக்கமாக இருந்தது.

திடீரென்று வேன் ஒரு குலுக்கலுடன் நின்றது. அந்த டிரைவர் இறங்கி யாரிடமோ மொபைலில் பேசினான். சத்தம் கேட்டு தாமரை கண் விழித்தாள். வேனில் இருந்த எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்ததில் அவளுக்கு சந்தேகம் வந்து, ஜன்னல் வழியாக அந்த டிரைவரை எட்டிப் பார்த்தாள்.

வேனில் இருந்த டீச்சரும், ஹெல்ப்பரும் கூடத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க சொன்னபடியே செஞ்சேன். எல்லாருமே தூங்கிக்கிட்டு இருக்காங்க. சாப்பாட்டில கலந்த மருந்து வேலை செய்யுது. இப்ப வேனை எடுத்துட்டு எங்க வரணும்? சொல்லுங்க. அப்படியா, சரி, இதோ கிளம்பி வரேன்”, என்று சொல்லி விட்டு, ஃபோனை கட் செய்தான்.

வேனில் ஏறி ஜாலியாக விசிலடித்துக் கொண்டே வேனை ஓட்டினான். தாமரை, ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று புரிந்து கொண்டாள். அருகிலிருந்த தோழியைச் சத்தம் போடாமல் எழுப்பப் பார்த்தாள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்தப் பெண் அசையவே இல்லை.

வேன் வேறு ஒரு வழியில் திரும்பி சிறிது தூரம் சென்றதும் நின்றது. லேசாகத் தலையைத் தூக்கி, தாமரை பார்த்தாள். ஒரு பழைய கட்டிடம். பத்துப் பதினைந்து முரடர்கள் அதன் வாசலில் நின்று கொண்டிருந்ததும் வேனைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் கையசைத்தார்கள். வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்தோஷமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்து ஒரு மரக்கட்டையால் ஒரு முரடன் தாக்க, அவன் சுருண்டு கீழே விழுந்தான்.

travel
படம்: அப்புசிவா

‘இது ஏதோ குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோத கும்பல் போல இருக்கு. மொத்தக் கூட்டத்தையும் பிடிக்கணும்னா நாம கொஞ்சம் வெயிட் பண்ணி, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிக்கணும். அப்புறமா, யாரு இந்தக் கடத்தலுக்குப் பின்னால இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா அவங்களை மொத்தமா வளைச்சுப் பிடிக்கணும். அது வரைக்கும் மயக்கமா இருக்கற மாதிரி நடிக்கலாம்’, என்று மனதில் முடிவு செய்து கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். மயக்கத்தில் இருப்பது போல நடித்தாள்.

அந்த முரடர்கள் கூட்டத் தலைவன் போலிருந்தவன் வேகமாக ஆணைகளைப் பிறப்பித்தான்.

“இந்தப் பசங்களைத் தூக்கிக் கொண்டு போய் அந்தப் பெரிய ரூமில் அடைச்சு வச்சுருங்க. அந்த டீச்சரையும் அதே ரூமில் அடைச்சு வையுங்க. அந்த டிரைவரையும், ஹெல்ப்பர் பையனையும் வேற ஒரு ரூமில கொண்டு போடுங்க. இரண்டு ரூமையும் கவனமாப் பூட்டிடுங்க. சாயந்திரம் தலைவர் வந்ததும் எப்ப அனுப்பணும், எப்படி அனுப்பணும்னு சொல்லுவாரு. இவங்க எல்லோருக்கும் சாயந்திரம் தான் நெனைவு வரும். சாயந்திரம் வரை அப்படியே கெடக்கட்டும். அப்புறம் இந்த வேனை ஒதுக்குப்புறமாப் பாத்து நிறுத்தி தார்பாலின் ஷீட் போட்டு மறைச்சு வையுங்க. நாளைக்கு வேலை முடிஞ்சதும் மலை மேலே கொண்டு போய் உருட்டி விட்டுரலாம்”, என்று சொன்னது அத்தனையும் தாமரையின் காதில் விழுந்தது.

‘ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வச்சாங்கன்னா, நம்மளால மத்தவங்க முன்னால கோல்டன் தமிழச்சியா மாற முடியாது. மந்திரம் வேலை செய்யாது. அதுனால இங்கேயே எங்கேயாவது ஒளிஞ்சுக்கணும்’, என்று சட்டென்று முடிவெடுத்த தாமரை கடைசி சீட்டின் கீழே தன்னைக் குறுக்கிக் கொண்டு ஒளிந்து கொண்டாள். இறங்குவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த முரடர்கள் உள்ளே போய் விட, இரண்டு பேர் வேனில் ஏறி, சிறுமிகளை ஒவ்வொருத்தராக உள்ளே கொண்டு போனார்கள்.

கிடைத்த இடைவெளியில் டீச்சருடைய பேகில் இருந்து ஸெல்ஃபோனை எடுத்து வைத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு அதை சரியாக ஆபரேட் செய்யத் தெரியாது. இருந்தாலும் ஏதாவது அதன் மூலமாக உதவி கிடைக்கலாம் என்று அவளுடைய உள்ளுணர்வு சொன்னது. மரப்பொந்தில் அந்த மொபைலை ஒளித்து வைத்தாள்.

வேனின் அருகே யாரும் இல்லாத சமயத்தில் இறங்கி ஓடி, எதிரில் இருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

சாயந்திரம் தான் கடத்தப் போகிறார்கள். அதற்குள் இங்கே அருகில் ஏதாவது வீடு இருக்கிறதா, ஏதாவது உதவி கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று கொஞ்ச தூரம் நடந்து பார்த்தாள். அந்த இடத்தில் சுற்று முற்றும் தேடியும் வேறு எந்தக் கட்டிடமும் கிடைக்கவில்லை.

‘சரி, அங்கேயே வெயிட் பண்ணலாம். ஏதாவது வழி கிடைக்கும். மின்மினி தேவதை ஏதாவது நிச்சயமாக உதவி செய்வாள்’, என்று மனதில் நினைத்துக் கொண்டு பழைய இடத்தையே அடைந்து ஒளிந்து நின்று கொண்டு தனது முதல் சாகசத்துக்கு மனதளவில் தயாராகிக் கொண்டாள்.

தொடரும்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments