மிட்டாய்ப்பட்டி என்னும் ஊரில் அமுதன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன்‌ அதே ஊரில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வந்தான். அமுதனுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும்.

 தினமும் மாலையில் பள்ளியில் இருந்து நடந்து வரும் போது செல்வம் அண்ணன் கடையில் லாலிபாப்பை வாங்கிக் கொண்டு அதைச் சுவைத்தபடியே வீடு போய்ச் சேர்வான்.

 அன்றும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, காலையில் அமுதனின் அம்மா கொடுத்து விட்ட இரண்டு ரூபாய்க்கு லாலிபாப் வாங்கச் சென்றான்.

 அண்ணே, ஒரு லாலிபாப் கொடுங்க! என்று அமுதன் கேட்டதும், தம்பி பச்சை லாலிபாப்பா இல்ல சிவப்பு லாலிபாப்பா?

 பச்சை தான் அண்ணே இனிப்பா இருக்கும், சிவப்பு புளிப்பா இருக்கும். அதுனால எனக்குப் பச்சை தான் வேணும் என தினமும் பச்சை நிற லாலிபாப்பை வாங்குபவன் அன்றும் அதையே வாங்கிக் கொண்டான்.

lollies
படம்: அப்புசிவா

 இதைப் பார்த்ததும் கண்ணாடி பாட்டிலுக்குள் இருந்த பச்சை லாலிபாப், சிவப்பு லாலிபாப்பைப் பார்த்து கெக்கே புக்கே என்று சிரித்தது.

 ஹா ஹா பாத்தியா! அமுதனுக்கு என்னைத் தான் பிடிச்சிருக்கு. உன்னை எல்லாம் யாருக்குப் பிடிக்கும். நீ புளிப்பா, காரமா இருப்பியே எனக் கேலி செய்து சிரித்தது பச்சை நிற லாலிபாப்.

 சிவப்பு நிற லாலிபாப் அதை நினைத்து ஓவென்று அழுதது. நான் புளிப்பா இருந்தது என் தப்பா, என்னைப் படைத்தவர் தானே அப்படிச் செய்தார் என்று அழுதது.

 எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். சிவப்பு லாலிபாப் நீ அழாதே, எனப் பாட்டிலுக்குள் இருந்த வயசான  சிவப்பு நிற தாத்தா லாலிபாப் கூறியது.

 இல்ல இல்ல, உங்க கூட இருந்த பச்சை லாலிபாப் தாத்தாவை எப்பவோ அமுதன் வாங்கிட்டுப் போய்ச் சாப்பிட்டுட்டான். ஆனா நீங்க இன்னும் இங்கேயே தானே இருக்கீங்க, என்று வருத்தத்துடன் கூறியது.

 அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அமுதன் கடைக்கு வரவில்லை. மூன்றாம் நாள் அமுதனை அவனுடைய தந்தை அழைத்துக் கொண்டு கடைக்கு வந்தார்.

 அமுதன் அழுது கொண்டே இருந்தான்.

 ஏன்பா அமுதா அழுவுற?. என்று கடை அண்ணன் கேட்டார்.

 அதை ஏன்பா கேக்குற, நிறைய மிட்டாய் தின்னு தின்னு அவன் பல்லு பூரா சொத்தை ஆயிடுச்சு. ஆனாலும் லாலிபாப் வேணும்னு அடம்பிடிக்கிறான்பா, என்றார் அமுதனின் அப்பா.

 அமுதா, நிறைய மிட்டாய் சாப்பிட்டா பல்லு வீணாப் போயிடும்பா.. வேண்டாம்பா.., என்றார் கடை அண்ணன்.

இல்ல அண்ணே! இனிமேல் நான் கொஞ்சம் கொஞ்சமா மிட்டாய் சாப்பிடறதைக் குறைச்சுக்குறேன். இன்னியிலேர்ந்து எனக்கு இனிக்கிற பச்சை லாலிபாப் வேண்டாம், புளிக்கிற சிவப்பு லாலிபாப்பே போதும் என்றான் அமுதன்.

சிவப்பு நிற லாலிபாப்பிற்கு இதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பாட்டிலில் இருந்து எம்பி எம்பிக் குதித்தது. கடைக்காரர் சரியாக அதையே எடுத்து அமுதனின் கையில் தந்தார்.

பச்சை லாலிபாப் உடனே அழத் தொடங்கியது.

கண்ணா, அழாதே! உனக்கும் ஒரு காலம் வரும். அதுவரைக்கும் பொறுமையாக இரு, என அதைச் சமாதானம் செய்தது சிவப்பு நிற தாத்தா லாலிபாப்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments