ஒரு அழகிய காவிரிக் கரையோர கிராமம் வழியாகப் பூஞ்சிட்டு பறந்து கொண்டிருந்தது! கண்களுக்கு குளுமையாக எங்கு நோக்கினும் பசுமை..கரை புரண்டோடும் காவிரியின் அழகை ரசித்துக் கொண்டே பறந்தது.. காவிரி ஆற்றின் கரையையொட்டி அழகிய மாந்தோப்பு ஒன்று பூஞ்சிட்டின் கண்ணில் பட்டது.. மாந்தோப்பில் குழந்தைகள் குதூகலமாய் விளையாடுவதைப் பார்த்ததும் பூஞ்சிட்டிற்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. இங்கு சற்று இளைப்பாறிக் குழந்தைகளோடு உரையாடி விட்டுச் செல்லலாம் என்று எண்ணிய பூஞ்சிட்டு ஒரு மாமரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டது. பூஞ்சிட்டைப் பார்த்ததும் குழந்தைகள் துள்ளிக் குதித்தனர்..  “ஹாய் செல்லங்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க?”,  என்றது பூஞ்சிட்டு. “நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம் பூஞ்சிட்டு..நீ எப்படி இருக்க?”, என்றனர் குழந்தைகள். “நானும் சூப்பரா இருக்கேன். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.” குழந்தைகள் ஒவ்வொருவராய் அறிமுகப்படுத்தி கொண்டனர்.

Eraser

“பூஞ்சிட்டு! பூஞ்சிட்டு! எங்களுக்காக நாங்க தினமும் பயன்படுத்துகிற ரப்பர் அதாவது எரேசர் பற்றி சொல்றியா?”, என்றாள் குழந்தைகளின் நடுவிலிருந்த சுட்டிப் பெண்  மிருதுளா.

“கண்டிப்பாகச் சொல்றேன் குட்டீஸ்”

“அழிப்பான் என்கிற ரப்பர் 1770ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரப்பரின் அழிக்கும் குணத்தை, ஜோசப் ப்ரிஸ்ட்லி Joseph Priestley என்பவர் கண்டுபிடித்தார்.  ஆக்சிஜன் (oxygen) மற்றும் சோடா (soda) நீரைக் கண்டுபிடித்தவரும் இவர் தான்!“.

“அப்போ 1770 க்கு முன்னாடி எந்தப் பொருளால் அழிச்சாங்க பூஞ்சிட்டு”, என்றான் மிதுன் என்ற சுட்டிப் பையன்.

“நல்ல கேள்வி!! பழங்காலத்தில், நன்றாக மொறுமொறுப்பு இல்லாத பிரெட்டுகள், அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன”, என்றது பூஞ்சிட்டு.

“அப்போ , ஜோசப் ப்ரிஸ்ட்லி கண்டுபிடிச்ச ரப்பரைத் தான் நம்ம பயன்படுத்துறோமா பூஞ்சிட்டு?”, என்றாள் இனியா.

“இல்லை இனியா!  அவர் ரப்பரைக் கண்டுபிடித்த பிறகு பல பரிணாம வளர்ச்சிகள் இருக்கு இனியா”, என்றது பூஞ்சிட்டு.

“ஐரோப்பாவின் எட்வார்ட் நைர்னி (Edward Nairne) என்பவர்தான் ரப்பர் என்பதை ஒரு பொருளாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள், எட்வார்ட் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற போது, அழிப்பதற்கு பிரெட்டை எடுப்பதற்குப் பதிலாக வேறொரு பொருளை எடுத்துவிட்டார். அப்படித் தவறுதலாக அவர் எடுத்த பொருள்தான் மிகச் சரியானது. ஆமாம்… அதுதான் ரப்பர்! 1770ல், ரப்பர் என்று பெயரிடப்பட்டுச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை ரப்பர்கள் உபயோகத்திற்கு வந்தன. ஆனால்  இயற்கை ரப்பர்கள் சீக்கிரம் நலிந்து போயின”, என்றது பூஞ்சிட்டு

“ஓ!! அப்பறம் என்னாச்சு பூஞ்சிட்டு?“, என்றான் செல்வம்.

“சார்ல்ஸ் குட்யியர் (Charles Goodyear) என்பவரால்  1839 ம் ஆண்டு ரப்பர் வல்கனைஸ் செய்யப்பட்டு நாம் உபயோகிக்கக்கூடிய வடிவம் பிறப்பிக்கப்பட்டது”, என்றது பூஞ்சிட்டு.

“ரப்பர் வகைகள் பற்றிக் கொஞ்சம் சொல்லேன் பூஞ்சிட்டு”, என்றாள் மிருதுளா.

“இயற்கை ரப்பர், சிந்தெடிக்  ரப்பர் ( Natural and synthetic rubbers) என ரப்பர்கள்  இரண்டு வகைப்படும்.இயற்கை ரப்பர், ரப்பர் மரத்தின் (latex) லேடெக்ஸ்சிலிருந்தும், சிந்தெடிக் வகை ஸ்டெரீன் மற்றும் புடாடீன்  (Styrene- butadiene) எனும் கெமிக்கலில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. சரி குழந்தைகளே! மாலை நேரம் ஆகிவிட்டது. நான் கிளம்பறேன்.அனைவரும் வீட்டிற்குப் பத்திரமா செல்லுங்கள். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.  கரும்பை விரும்பிச் சாப்பிடுங்கள் அரும்புகளே!! உடலுக்கு மிகவும் நல்லது”, என்றது பூஞ்சிட்டு.

“சரி பூஞ்சிட்டு!  உனக்கும் எங்கள் அனைவரின் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்! டாடா!!”, என்றனர் குழந்தைகள்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments