பெரிய பூ நாரை என்று அழைக்கப்படும் Greater flamingo, உயரப் பறக்கக் கூடிய பெரிய பறவைகளில் ஒன்று. பெயர்க் காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், காற்றில் பட படக்கும் இதன் சிறகுகள், விரிந்த பூவின் இதழ்களைப் போல இருக்கும்.
பெரும்பாலும் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் காணப்படும். இந்தியத் துணைக் கண்டத்தின் சில பகுதிகளில் உறைவிடப் பறவையாக காணப்பட்டாலும், மற்ற இடங்களில் குளிர் காலத்தில் வலசை வரும் பறவையாகவே இருக்கிறது. நம் மாநிலத்தில், கிழக்கு கடற்கரைப் பகுதியில் சென்னை முதல் வேதாரண்யம் தாண்டி தனுஷ்கோடி, தூத்துக்குடி வரை குளிர் காலத்தில் (நவம்பர் முதல் மார்ச் வரை) பார்க்கலாம்.
உலகில் கிட்டத்தட்ட ஆறு வகையான பூ நாரைகள் உள்ளன. அவற்றில் பெரியது இந்த Greater flamingo. முதிர்ந்த பறவை கிட்டத்தட்ட 3.5 முதல் 4 அடி வரை இருக்கும். கால்களும், கழுத்தும் நீளமாக இருக்கும். சற்றே கீழ் நோக்கி வளைந்த பெரிய அலகுகள் கொண்டவை இப்பறவைகள். இளம் பூ நாரைகள் வெண்மை கலந்த பழுப்பு நிற உடலைக் கொண்டு இருக்கும். அலகுகள் இளம் கருமை நிறத்தில் இருக்கும். இவை வளரும் போது, உண்ணும் உணவில் உள்ள carotenoid எனப்படும் சத்தின் காரணத்தால் அலகுகள், இறகுகள் மற்றும் கால்கள் இளஞ்சிவப்பு முதல் அடர் சிவப்பு வண்ணம் பெறும். இனப்பெருக்க காலத்தில், உடலில் உள்ள எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இந்த வண்ணத்தை சுரப்பதால், அதைக் கொண்டு தங்கள் இறகுகளை மேலும் அழகு படுத்திக் கொள்ளும் (make up).
பொதுவாகக் கடற்கரை அருகில் ஆழம் குறைவான உப்பு நீர் நிலைகளையும், உப்பங்கழிகளையும் விருப்ப இடமாகக் கொள்ளும். சிறு குழுக்களாக அல்லது பெரிய கூட்டமாக இருக்கும். மற்ற பூ நாரைகளுடன் சேர்ந்தும் இருக்கும். இவை உணவு உட் கொள்ளும் தன்மை சற்றே விசித்திரமானது. தலையை மேல் கீழாக நீருக்குள் அமிழ்த்தி, இரு அலகுகளுக்கு இடையே உள்ள சல்லடை போன்ற அமைப்பால், கடற் பாசி மற்றும் சிறிய கடல் வாழ் உயிரினங்களை வடி கட்டி உண்ணும்.
பெரிய உடலையும், நீண்ட கழுத்தையும் கொண்டு இருப்பதால், பறக்கும் போது அதிக சக்தி செலவாகும் வாய்ப்பு அதிகம். இதனால், கூட்டமாகப் பறக்கும் போது V வடிவமாகப் பறக்கும். மொத்தத்தில், அழகும், அறிவும் நிறைந்த பறவை இந்த பூ நாரை.
அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணர்,
புகைப்படக் கலைஞர்,
பறவைகள் ஆர்வலர்
Great job Brother. Nice to see the third dimension in you as a writer.