ஆசிரியர் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி பிரெஞ்சிலிருந்து தமிழில் – வெ.ஸ்ரீராம் &  ச.மதனகல்யாணி

வெளியீடு:- க்ரியா பதிப்பகம்,சென்னை-41.

விலை ₹ 125/-

உலகம் முழுக்க, குழந்தைகள் வாசிக்க வேண்டிய நாவல் பட்டியலில் இடம் பெறும், ‘குட்டி இளவரசன்’ நாவலை எழுதியவர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery).   

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த இவர், இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter to a Hostage’, ‘The Little Prince.’

1944ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி, கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து இவர் ஓட்டிச் சென்ற விமானம், திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனால் இவருக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாமல் மறைந்தார்.

‘குட்டி இளவரசன்’ நாவலில், ஆசிரியரே கதை சொல்லியாக இருக்கின்றார். ஒரு முறை ஆசிரியர் ஓட்டிய விமானம் பழுதடைந்து, சகாரா பாலைவனத்தில் இறங்கி விடுகின்றது.  அந்த இடத்தில் மனித நடமாட்டமே இல்லை.  அங்கு அவர் வேறு ஒரு குட்டிக் கிரகத்திலிருந்து வந்த குட்டி இளவரசனைச் சந்திக்கிறார். 

“எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வரைந்து கொடு”, என்று அவன் கேட்கிறான். இவர் வரைந்து கொடுப்பதில் சில திருத்தங்களை அவன் சொல்கிறான்,.   முடிவில் அவன் விரும்பியது போல் இவர் வரைந்து கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும், அவனுடைய குட்டிக் கிரகத்தைப் பற்றியும், பல கிரகங்களுக்கு அவன் சென்று வந்த பயணம் பற்றியும் அவனிடம் கேட்டு அறிந்து கொள்கிறார்.  

தன் கிரகத்தில் ரோஜாக் கன்று போலவே முளைக்கும் பவோபாப் மரக்கன்றுகளை, இடைவிடாமல் பிடுங்கி எரிய வேண்டும் என்கிறான் அவன்.  அதற்கான காரணத்தை இவர் கேட்ட போது,   

“ஒரு பவோபாப் மரத்தை அழிப்பதில் காலம் தாழ்த்தினால் பிறகு என்றென்றும் அழிக்க முடியாமல் கிரகம் முழுவதும் பரவிவிடும்.  வேர்கள் கிரகத்தை ஊடுருவித் துளைத்துவிடும்”, என்று பதில் சொல்கிறான். பவோபாப் மரம் என்பது, ஹிட்லரின் நாசிசத்தைக் குறிக்கிறது, என்பது விமர்சகர்களின் கருத்து. 

யாராவது ஒருவனுக்காவது, தான் அரசனாக இருக்கிறோமே என்ற பெருமையில் இருக்கும் அரசன்,  தற்பெருமைக்காரன், குடிகாரன் புவியியலாளன், பிஸினஸ்மேன் ஆகியோரைக் குட்டி இளவரசன் தன் பயணத்தில் சந்திக்கிறான். 

அந்தப் பயணங்களைப் பற்றியும், அவர்களுடைய வினோதமான நடவடிக்கைகள் பற்றியும் இளவரசன் மூலம் கதை சொல்லி அறிந்து கொள்கிறார். அவர்களைச் சந்தித்த பிறகு, குட்டி இளவசரனுக்குத் தோன்றும் உண்மை, “பெரியவர்கள் உண்மையிலேயே, விசித்திரமானவர்கள் தாம்”.  

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments