வணக்கம் குழந்தைகளே!

எல்லாரும் எப்படி இருக்கீங்க ?

 வழக்கமா நம்ம கதை கதையாம் காரணமாம் பகுதியில் ஊர் பெயர்களையும் காரணத்தை பத்தியும் பார்ப்போம் இல்லையா ?! இந்த முறை, சற்று வித்தியாசமாக ஒரு காலத்துல நம்ம தமிழகத்துல புகழ் பெற்று விளங்கிய ஒரு ஊரைப் பத்தியும் அதோட வரலாற்று பெருமைகளைப் பத்தியும் பார்க்கப்போகிறோம்!

அப்படி எந்த ஊருன்னு கேக்குறீங்களா ?

இதோ சொல்லிடறேன். நம்ம இன்னிக்கு கதைக்கேட்க போகிற ஊர், பூம்புகார் என்று அழைக்கப்பட்ட காவிரி பூம்பட்டினம்.

Poombuhar beach
புகார் கடற்கரை

காவிரி ஆறு புகும் பட்டினம் —> காவிரிபூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் சங்ககாலத்தில் இருந்தே சோழர் ஆண்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதா இருந்திருக்கு.  

வழக்கமா கடற்கரை ஒரப் பகுதிகள் துறைமுகம் அமைக்க வசதியாக இருக்கும். பலதரப்பட்ட ஊர்களில் ஓய்ந்து பொருட்கள் வாங்கவும் விற்கவும் வணிகர்கள் வந்து செல்லவும், பயணம் பண்ணவும் இந்த கடற்கரையோர பகுதியை துறைமுகம் உபயோகப்படுத்துவங்க. புகார் பட்டினமும் அந்த வகைல மிக மிக புகழ் பெற்றதா இருந்ததற்கான வரலாற்று சான்றுகளைப் படிக்க படிக்க,   நம் முன்னோர்கள்  அந்த காலத்துலயே  எவ்வளவு வளமாகவும் திறமையாகவும்  இருந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள முடிகிறது.

Puhar view of the beach

அதற்கு பெரிய உதாரணம் முதலாம் நூற்றாண்டு வாக்கில் ரோம மாலுமிகளால் எழுதப்பட்ட பெரிபாலஸ் ஆப் தி ரெட் ஸீ என்று சொல்லப்படுகிற ஒரு கையேடு – அதாவது கடல் எல்லைகள் வழியாக உலகத்தோட பல்வேறு நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க விரும்பிய  கடலோடிகள் கடல்வழி மார்க்கமாக பல  ஊர்களையும் வந்தடைந்ததோடல்லாமல் அங்கே அவர்கள் தெரிந்துகொண்ட விவரங்களையும் ஒரு கையளவு புத்தகத்தில் எழுதிகிட்டே வராங்க. அப்படி எழுதிய தகவல் களஞ்சியம் தான் இந்த  பெரிபாலஸ் ஆப் தி ரெட் ஸீ. இதில் புகார் நகரத்தை பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் பல தகவல்களையும் குறிப்பிடறாங்க.

உதாரணத்திற்கு, புகார் நகரத்தை பற்றி எழுதும்போது

கூட்டம் கூட்டமாக வணிகர்கள் வந்து போவதையும், முத்துக்கள் பட்டுத்துணிகள் விலை உயர்ந்த வைரம் மாணிக்கம் போன்ற கற்கள் , மிளகு மல்லி போன்ற விளைப்பொருட்கள்ன்னு நிறைய பொருட்கள் கொள்முதல் பண்ணப்படறதா பதிவு செஞ்சிருக்காங்க. அது மட்டுமில்லாம இங்க இருக்கிற மக்கள் எப்படி இருக்கிறார்கள் அப்படிங்கிற குறிப்பும் எழுதி வைக்கிறாங்க..

இப்படி வரலாற்று பதிவுகள் புகார் பட்டினத்தை பற்றி நமக்கு தெரிஞ்சுக்க உதவுற மாதிரி அதே காலத்துல எழுதப்பட்ட நூல்களும் புகார் நகரத்து மக்களோட வாழ்க்கை வணிகம் நகரத்தோட வளமை இவற்றையெல்லாம் நாம் தெரிஞ்சுக்க உதவியா இருக்கு. குறிப்பாக, பட்டினப்பாலை மணிமேகலை நூல்களில் இருந்து நமக்கி இந்த நகரத்தைப்பத்தி ஆச்சரியமான தகவல்கள் கிடைக்குது.

அதில் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும் தகவல் புகார் நகரத்தோட அமைப்பை பற்றியது தான்.

காவிரி ஆறு கடலில் சேரும் நிலப்பரப்பில் அமைந்தது தான் இந்த புகார் பட்டினம் என்று அழைக்கப்படும் பூம்புகார் என்று பார்த்தோம் இல்லையா…

அப்படி இயற்கையாக அமைந்த நிலப்பரப்பிற்கு ஏதுவாக அந்த காலத்தில் மருவர்பாக்கம்   பட்டினம்ப்பாக்கம் என்று இரண்டு நில அமைப்புகளாக புகார் ஊரை பிரித்து வளமாக  ஆட்சி செய்திருக்கிறார்கள்  நம் முன்னோர்கள். 

Picture1
புகார் கடற்கரை துவாரம்

பாக்கம் என்றாலே கடல்/ ஆறு  ஓரம் அமைந்த பகுதி என்று நாம் முன்னரே பார்த்திருக்கிறோம் இல்லையா! அது போலவே மருவர்பாக்கம் என்ற பகுதில மீனவர்கள் நெசவாளர்கள் கடல்வழி பயனர்கள், பாணர்கள், நீர் வளத்  தொழில் செய்பவர்கள் குடி அமர்த்தப்படுகிறார்கள். கடலோரம் அமைந்த வீடுகள், மாளிகைகள், பந்தல்கள், என   வாணிகம் செய்ய தோதான பகுதியாக கிட்டத்தட்ட ஒரு கடல்வழி தொழில்புரியாக(மேப்ஸ்)  இதனை வடிவமைச்சு இருக்காங்க.

வணிகத்திற்கு ஏற்ற மாதிரி மருவர்பாக்கத்தை வடிவமைச்சாச்சு.. இப்போ ஊருக்கு தேவையானவற்றை செய்ய இடம் வேண்டுமே அப்படி ஒரு இடமாக பட்டினம்பாக்கம் என்ற பகுதியை உருவாக்கியிருக்காங்க..  இதில் அரசர்கள் அமைச்சர்கள், கவிஞர்கள் , கல்விக்கூடங்கள் குடிகளுக்கு தேவையான மன்றங்கள், கூடங்கள் என அமைச்சு இருக்காங்க ..

kaveripoompattinam

ஆக, புகார் நகரத்தின் ஒரு பக்கம் கடல் சார்ந்த வாணிகம், அதற்கான வழித்தடம் . இன்னொரு பக்கம் குடிமக்கள் வாழும் பகுதி என அழகாக திட்டமிட்டு அமைத்து உள்ளார்கள். இன்னொரு கூடுதல் தகவல் இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் அங்காடிகள் அமைச்சு இருக்காங்க. அதிலும் இரண்டு வகை அங்காடிகள். சூரியன் தோன்றி மறையும்  நேரத்தில் இயங்கும்  நாளங்காடிகள். இரவு நேரத்தில் இயங்கும் அல்லங்காடிகள்!

இத்தனை திறம்பட பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்கிய புகார் பட்டினம் பல காலக்கட்டங்களில் இயற்கை பேரழிவுக்கு உள்ளாகி அழிந்து போனது என்பது தான் இருப்பதிலேயே வேதனையான விஷயம். சுனாமி கடல் ஏற்றம் போன்ற இயற்கை சீரழிவால் பலமுறை சீரமைக்கப்பட்டிருந்தாலும் இயற்கையாகவே பல சேதங்களுக்கு ஆளாகிப்போனது புகார் நகரம். சமீபத்தில் புகார் நகர எல்லைக்குள் செய்யப்பட்ட அகழ் ஆராய்ச்சியில் கடலில் புதைந்து போன புகார் நகரத்தின் பழமை பத்தி மேலும் தெரிஞ்சுக்க நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம் ஆராய்ச்சியாளர்கள் நம்புறாங்க.

இப்போ நமக்கு கிடைத்திருக்கும் தகவல் வழியாகவே தமிழின் தொன்மை, வளமை நம் பழந்தமிழரின் தொழில் திறன் இவற்றையெல்லாம் பறைசாற்றும் புகார் நகரத்தை நினைத்தாலே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்குல்ல குட்டிஸ்..

மீண்டும் இதே மாதிரி ஒரு ஊர் கதையோடவும் வரலாற்றோடவும் உங்களை சந்திக்கறேன். அதுவரை பத்திரமா ஆரோக்கியமா உற்சாகமா இருங்க பூஞ்சிட்டுகளே!  

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *