புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – சிறப்புக் குறிப்புகள்

bharathidasan

(29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964)

 132வது நினைவு நாள்.

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்ற முண்டாசுக் கவிஞனின் சிநேகம், இவர்!

பாரதி கரம் பற்றி அவர் நாவினில் கனன்ற தமிழ்த்தீ பற்றி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முணுமுணுக்கும் புரட்சித்தீயை மிச்சமின்றி விதைத்தவர், இவர்!

வேண்டா சாதி இருட்டை வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி’ எனத் தாலாட்டு பாடி அடிமனத்துத் துயில் மீட்டவர், இவர்!

‘சோகச்சுழலிலே ஏழைச் சருகுகள் சுற்றுதடா’, என்று இப்போதைக்கும் சேர்த்து அப்போதைக்கே பாடி வைத்த தீர்க்கதரிசி, இவர்!

முதலாளிகளின் பேராசைப் புயலிலே மாட்டிக்கொண்டு இன்னும் சுழலுதே, எம் சிறு விவசாய கடவுட்களின் வேட்கையெல்லாம் என்று நெஞ்சம் பதறுகையில், ‘தினம் கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சம் தெளியாது; தஞ்சம் துணிஞ்சடி வேணுமடி’ என்று அன்றே நெஞ்சுரப் பதிலளித்தவர், இவர்!

இருண்ட வீடு கட்டி அதில் ஞான விளக்கினை ஏற்றியவர்!

காதல் சிறப்பித்தவர்;

சாதி களைந்திட்டவர்; 

ஆணும் பெண்ணும் சமமென்றவர்!;

விவசாயம் புகழ் என்றவர்!;

கசடறக்கல்வி கல் என்றவர்;

தீண்டாமைக் கொல் என்றவர்;

தடுக்கி விழுந்த திசையெல்லாம் தமிழ் பந்தத்தீ மூட்டு என்றவர்;

குழந்தைத் திருமணம் ‘சீ’ என்றவர்!;

சிந்தனை கெடுக்கும் சினிமா விட்டொழி என்றவர்!;

நெஞ்சம் நிமிர் என்றவர்!;

நேர்மையே நண்பன் என்றவர்!;

வடக்கென்றால் வளையாதே என்றவர்!;

தெற்கென்றால் செருக்கு என்றவர்!;

இருமனம் இணைய திருமணம் புரி என்றவர்!.

அதுவே நல்லில்லற அழகு என்றவர்!;

தமிழா! தமிழா! என்றான்; ‘வாளை எடுடா’ என்றவர்!;

 நீயும் அல்ல, நானும் அல்ல, எப்போதுமே ‘நாம்’ என்றவர்!.

நமக்கெல்லாம் ஓர் அடையாளம், ஒரே அடையாளம்- தமிழ் என்றவர்!.

அத்தமிழே நம் உயிருக்கு நேர் என்றவர்!!  

‘மண்ணிடை வாளையேந்திப் பகைப்புலம் மாய்ப்பதற்கும் எண்ணிலாத் தமிழர் உள்ளார் எனும் நிலை காண்பதென்றோ?!’, என்று அவரது ஆகப் பெரும் கனவொன்றை நம் முன் வைத்தவர்!

புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்!

அவர் தம் பிறந்த நாளில் அவர் கண்ட கனவை நனவாக்கும் நல்லெண்ணத்தை நாமெல்லோரும் விதைத்திடுவோம் என்றும் நம் உள்ளத்தில்!

What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *