இந்த முறை நாம் பார்க்கப் போகும் பறவை Brahminy Kite என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செம்பருந்து பற்றி. இதன் அறிவியல் பெயர் Haliastur indus என்பதாகும்.

இது ஒரு நடுத்தர அளவிலான வேட்டையாடும் பறவையாகும்.
இப்பறவை இந்தியத் துணைக் கண்டத்திலும், தெற்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.

நமது நாட்டில் இப்பறவையை கடல் புறங்கள், நகர்புறம் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் என்று அனைத்து இடங்களிலும் பார்க்க முடியும்.

படம்: Dr. பா. வேலாயுதம்

இதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். நன்கு வளர்ந்த பறவையின் உடல் செம்பழுப்பு (chestnut brown) நிறத்தில் இருக்கும்; தலையும் முன் மார்பும் வெள்ளை நிறத்தில் இருக்கும்; இறக்கைகளின் நுனியில் கருமை நிறம் காணப்படும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. இளம் பறவைகள் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இளம் பறவைகள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நம் நாட்டில் பரவலாக காணப்படும் மற்றொரு பருந்து வகையான கள்ளப் பருந்து (black kite) போன்றே இருக்கும். ஆனால் இவற்றின் வால்களின் வடிவத்தை வைத்து நாம் வித்தியாசம் கண்டு கொள்ளலாம். கள்ளப் பருந்தின் வால் சிறிது பிளவு பட்டதாக இருக்கும். செம்பருந்தின் வால் பிளவு இல்லாமல் அரைவட்டமாக இருக்கும்.

இது பெரும்பாலும் இறந்த மீனை உணவாகக் கொள்ளும். அதனால் சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகளின் அருகிலேயே பெரும்பாலும் இவை இருக்கும். கடற்கரைகளிலும் காணலாம். மற்ற பருந்துகளைப் போலவே சிறகுகளை அவ்வப்போது அடித்துக்கொண்டு கிளைடிங் முறையிலேயே பறக்கும். மீன்களை நீர் நிலைக்குள் சரேலென்று பாய்ந்து வேட்டையாடிப் பிடிக்கும். பிடித்த உணவை உயரமான மரக்கிளையிலோ சிறிய மணல் மேட்டிலோ அமர்ந்து உண்ணும். மீன் பிடிப்பவர்கள் விட்டுச்சென்ற இறந்த மீன்களையும் உண்ணும். நீர்நிலை அல்லாத இடங்களில் சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணக்கூடும்.

படம்: Dr. பா. வேலாயுதம்

இதன் இனப்பெருக்க காலம் பொதுவாக டிசம்பர் முதல் ஏப்ரல் ஆகும். கூடுகள் மரங்களின் உச்சியில் சிறு கிளைகளாலும் குச்சிகளாலும் கட்டப்படும். பொதுவாக இரண்டு முட்டைகள் இடும். ஆண் பெண் பறவை இரண்டுமே கூடுகட்டும். பெண் பறவை அடைகாக்கும்.

இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளிலும் சமய சார்புடைய பறவையாக இது பார்க்கப்படுகிறது. இந்து மதப் புராணங்களில் கடவுள் விஷ்ணுவின் வாகனமாக அறியப்படும் கருடனின் அடையாளமாக இப்பறவை கருதப்படுகிறது. அதனால் இதற்கு கருடன் , கிருஷ்ண பருந்து என்ற மற்ற பெயர்களும் உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments