மாமல்லபுரத்தின் புடைப்புச் சிற்பங்களைக் கண்ட களிப்பில் இருக்கிறீர்களா குழந்தைகளே? சற்று ஓய்வெடுத்தீர்களா? அதில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. சிறிது இடைவெளி கொண்டு மீண்டும் ஒரு முறை சென்று இன்னும் நிறைய சிற்பங்களை உற்று நோக்கிப் பாருங்க! அக்காலங்களில் வாழ்ந்தவர்களே மீண்டும் வருவார்கள் சிலையாக..

இனி..

புடைப்புச் சிற்பங்களை இயன்றவரை பார்த்தாயிற்று.

இதனோடு கூட ஆநிரை காக்க குன்றமெடுத்த கண்ணனின் கோவர்த்தனகிரி பாறைச் சிற்பம் போன்ற தொகுதிகளும் இங்கே உள்ளன.

இந்த சிற்பங்களெல்லாம் அக்காலங்களில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளையும் அவர்களது பண்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல், கலையில் சிறந்தும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செதுக்கப்பட்டுள்ளது.

oor 1

இந்த சிற்பங்களிலுள்ள புராணக் கதையையும் சொல்லட்டுமா குழந்தைகளே?!

சொல்கிறேன். கவனமாகக் கேளுங்க!

மக்கள் மத்தியில் கண்ணன் மீது நல்ல பெயர் இருந்தது கண்டு, கடவுள் இந்திரனுக்கு பொறாமையாக இருந்ததாம். கண்ணன் அனைவரையும் காத்து கொண்டிருப்பதால் தானே இந்த நல்ல பெயர்?! என்ன செய்கிறேன் பார்? என்று சொல்லிக்கொண்டு, வருண தேவனே ஏவிவிட்டு மழையை, இடி மின்னலுடன் கூடிய பெருமழையோடு சேர்ந்த புயலாக வரவழைத்து, மக்களையும் ஆநிரைகளையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஆநிரை என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றும் அல்ல!

ஆ- என்றால் பசு என்று அர்த்தம்.

நிரை-என்றால் கூட்டம் என்று அர்த்தம்.

எனவே ஆநிரை என்பது பசுக் கூட்டங்கள் தான் அது.

oor 2

மக்கள் தங்களையும் தங்களது கூட்டங்களையும் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று எண்ணி தவித்துக் கொண்டிருந்த பொழுது, கண்ணனால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணிய இந்திரனுக்கு மாறாக, கண்ணனானவன் மிகச்சாதாரணமாக கோவர்த்தனகிரி மலையைத் தூக்கி, அதனை ஒரு குடை போல நிறுத்தி அத்தனை உயிர்களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றியிருக்கிறார். இந்திரன் தலைகுனிந்து போனான். என்பது புராணக் கதை. இந்த கதையினை சிற்பமாக வடித்து, சிற்பத் தொகுப்புகளாக கொடுத்திருக்கிறார்கள் அக்காலச் சிற்பிகள்.

கண்ணன் கோவர்த்தனகிரியை தூக்கி நிற்பதும் அந்த குன்றின் கீழிடத்தை புகலிடமாகக் கொண்டு கவலையில்லாமல் காணப்படுகின்ற ஆயரும் ஆய்ச்சியரும்,ஆநிரைகளும் காண்பவர்கள் அது கண்களை கவரும் சிற்பங்களாகக் காட்சியளிக்கிறது. கண்ணன் இருக்கிறான் என்கிற மனோதிடத்தில் மக்கள் கவலையற்று தங்களது தினசரி வேலைகளைச் செய்து கொண்டிருப்பதாக காட்டப்படுகின்ற காட்சிகளெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

கண்ணனின் இடதுபக்கத்தில் அவரது சகோதரன் பலராமன் இடம்பெற்று, அவர் தனது இடது கையால் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை ஆறுதலாக அணைத்துக் கொண்டு இருப்பதைப் போல ஒரு சிற்பம் அமைந்திருக்கிறது. இவ்விரு சகோதரர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த உருவச் சிலைகள் மற்ற உருவங்களை விட சற்றுப் பெரியதாக செதுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற உருவங்கள் அக்காலத்து ஆயர்குல வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. கிராமங்களில் இன்றும் நாம் காணக்கூடிய காட்சியான, இடையர் மண்டியிட்டுக் கொண்டு தனது கால்களின் இடையில் குவளையை வைத்து, பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கும் காட்சியானது இங்கே சிற்பமாகியிருக்கிறது.

oor 3

கண்ணன் அருகில் நின்று கொண்டிருக்கும் அழகிய பெண்ணிற்கு அருகில் ஒரு தோழியும் நின்று கொண்டிருப்பது போன்ற சிற்பங்கள் அந்தப்பெண்ணின் உயரிய அந்தஸ்தைக் காட்டும்படி அமைந்திருக்கிறது. குழலூதி தன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனை, இங்கே சிற்பமாக பல்லவர்கள் வடித்திருக்கிறார்கள். ஒரு தாயின் கால்களில் படுத்து கொண்டிருக்கும் குழந்தை கூட இந்த இசையால் ஈர்க்கப்பட்டு உள்ளதை போன்ற காட்சியையும் இங்கே காண முடிகிறது.

oor 4

 ஒரு பெண் தனது தலையில் சும்மாடு வைத்து அதன் மீது பாயைச் சுமந்தும், கையில் உறியில் கட்டிய தயிர் பானைகளுடன் செல்லும் காட்சிகளும் அவளுக்குப் பின்னால் கையில் கோடாரியுடன் வருகின்ற ஒரு ஆண்மகனும் சிற்பமாக இருப்பதை இங்கே காணலாம்.

சும்மாடு என்பது வேறொன்றும் அல்ல குழந்தைகளே!

தலையில் பாரம் சுமக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பார்கள். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணியையே சும்மாடு என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவார்கள். கிராமங்களில் இன்றும் சில இடங்களில் இவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

oor 5

உறி என்ற சொல்லும் உங்களுக்கு புதியதாக இருக்கலாம். ஆமாம் தானே?

அதையும் சொல்லி விடுகிறேன்.

அக்காலங்களில் வீடுகள் முற்றங்களைக் கொண்டு திறந்தபடி அமைந்திருக்கும். எனவே தயிர், மோர் போன்ற உணவுகளைக் கொண்ட பாத்திரங்களைப் பூனை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்தும், குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்குவதற்கு இலகுவாக இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ஒழுங்கமைப்பை உறி ஏன்பார்கள். இது கயிற்றினால் ஆக்கப்பட்டிருக்கும். புரிகிறது தானே பிள்ளைகளே?! சரி நாம் அடுத்த காட்சிக்குச் செல்லலாம்.

இந்த சிற்பத் தொகுதியின் வடகோடியில் கண்ணனைத் தாண்டி கோகுலத்தின் மற்றொரு அமைதி நிறைந்த காட்சியையும் காணலாம். சற்று தள்ளி ஒரு காளை கவலையின்றி படுத்துக்கொண்டு, நடப்பவற்றையெல்லாம் காண்பது போல அமைந்து, புயல் அடங்கி விட்டதைக் காட்டுவதைப் போன்ற ஒரு காட்சி இங்கு நமக்குள்ளே மீளுகிறது. அன்று நடந்து கொண்டிருந்த இயல்பான நிகழ்வுகளை அப்படியே காட்சியாகக் கொண்டிருக்கிறது அத்தனைச் சிற்பங்களும்.

இவரை நாம் நிறைய சிற்பங்களைப் பார்த்து இன்னும் கூட பார்க்கலாம். யானை என்றால் உங்களுக்கெல்லாம் பிடிக்கும் தானே?! எனக்கும் பிடிக்கும் தான்!! சிற்பத் தொகுதிகளாக இருக்கும் யானைக் கூட்டங்களையும் கண்டு வரலாம்.

           கொஞ்சம் காத்திருங்க!!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments