டாலி-கோலி – அதிர்ச்சியில் காலி

அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு சிறிய குட்டையில் டாலி என்கிற ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.

டாலி தான் இருக்கும் குட்டை தான் கடல் என்று நம்பிக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய கடலில் நீந்த நிறைய சக்தி வீணாகிறது. நாம் இதை விட சிறிய குளத்திலோ குட்டையிலோ குடியிருந்தால் நமது சக்தி வீணாகாது என நினைத்தது டாலி.

அதனால் ஒரு நாள் டாலி சிறிய குட்டையைத் தேடி காட்டின் தென் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

அது போகும் வழியில் அதனெதிரே வந்த கோலி என்கிற முதலையைச் சந்தித்தது. கோலி காட்டின் தென் பகுதியில் இருந்த மிகப் பெரிய ஏரியில் வசித்துக் கொண்டிருந்தது.

ஆனால், கோலி தான் மிகச்சிறிய குட்டை ஒன்றில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பியது.

‘இந்த சிறிய குட்டையில் நீந்துவதற்கு வெறுப்பாக இருக்கிறது. நாம் ஒரு பெரிய ஏரியிலோ அல்லது கடலிலோ வசித்தால் மிகவும் நன்றாக நீந்த முடியும். நிறைய உணவு கிடைக்கும்’ என நம்பியது கோலி.

அதனால் கோலி காட்டின் வடபகுதியில் கடலைத் தேடி புறப்பட்டது. டாலியும் கோலியும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டன..

“என்ன நண்பா காட்டின் தென் பகுதியில் எதாவது சிறிய குட்டை இருக்கிறதா? நான் வசிக்கும் கடலில் நீந்தி என் சக்தியெல்லாம் வீணாகிறது” என கோலியிடம் கேட்டது டாலி.

“ஆகா நான் வசிப்பது ஒரு சிறிய குட்டை தான். அதில் என்னால் சுதந்திரமாக நீந்தக் கூட முடியவில்லை. அதனால் தான் நான் கடலைத் தேடி புறப்பட்டேன்” எனக் கூறியது கோலி.

“சரி அப்படியானால் நாளை இதே இடத்தில் சந்திப்போம். நீ உனது குட்டைக்கான வழியை எனக்கு காட்டு. நான் என் கடலை உனக்கு காட்டுகிறேன். இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம்” யோசனை சொன்னது டாலி ஆமை.

“சரி” என ஒப்புக் கொண்டது கோலி.

இதை விட சிறிய குட்டைக்குத் தானே செல்கிறொம். அங்கே நமக்கு எதுவும் பொருட்கள் தேவைப்படாது என நினைத்து வெறும் கையை வீசியபடி கிளம்பியது டாலி.

கடலில் வசிக்கப் போகிறோம் என நினைத்து ஐந்தாறு பெரிய பெரிய பொட்டலங்களாக தனது உடமைகளை அடுக்கிக் கொண்டு தன் வாலில் கட்டி இழுத்துச் சென்றது கோலி.

இரண்டும் முதல் நாள் சொன்ன இடத்தில் சந்தித்து வழிகளை பரிமாறிக் கொண்டன.

பெரிய கடலை எதிர்பார்த்துப் போய் தனது மூட்டைகளில் ஒரு மூட்டை கூட மூழ்காத குட்டையைக் கண்டு அதிர்ச்சியில் மூர்ச்சையானது கோலி.

சிறிய குட்டையைக் காணும் ஆர்வத்தோடு கிளம்பி, கடலளவு பரந்து விரிந்திருந்த ஏரியைக் கண்டதும் கண்கள் இரண்டும் அகல விரித்து அப்படியே கண்கள் நிற்க மயங்கிச் சரிந்தது டாலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *