அடர்ந்த காடு. பல்வேறு மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

குளிர்ந்த காற்று அந்தக் காட்டில் வசிக்கும் உயிரினங்களின் உடல்களை வருடித் தாலாட்டிக் கொண்டிருந்தது.

கருத்த மேகங்கள் உருண்டு திரண்டு மழை வரப்போவதை அறிவித்துக் கொண்டிருந்தன. காட்டின் நடுப்பகுதியில் ஒரு சிறிய நீரோடை, அதன் கரையில் ஒரு மயில் தனது அழகான வண்ண வண்ணத் தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. மற்ற பறவைகளும், விலங்குகளும் அந்தக் காட்சியை இரசித்து மகிழ்ந்து நின்றன.

நடனத்தை நிறுத்திய மயில் பெருமிதத்துடன் நிமிர்ந்து. தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற உயிரினங்களை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.

peacock

” கீச், கீச்” என்று கத்தியபடி குதித்துக் குதித்து அங்கே நடமாடிக் கொண்டிருந்த மற்ற பறவைகள் தன்னைப் பாராட்டியதை ஒரு பொருட்டாகவே கருதாமல், ” நீங்களும் நானும் சமமல்ல; நீங்கள் பாராட்டினால் எனக்கென்ன? பாராட்டாவிட்டால் எனக்கென்ன? ” என்று பார்வையாலேயே சொல்லாமல் சொல்லி விட்டுத் தான் அந்த மயில் அங்கிருந்து அடிகளை எடுத்து வைத்தது.

” மயிலண்ணா, மயிலண்ணா ” என்று குயில் தன் இனிமையான குரலில் மயிலை அழைக்க, மயில் கர்வத்துடன் திரும்பிப் பார்த்தது.

” என்ன?  எதுக்கு என்னைக் கூப்பிட்ட?  உன் கூட வெட்டியாப் பேசிட்டு நிக்க எனக்கு நேரமே இல்லை. ஆயிரத்தெட்டு வேலை கெடக்கு எனக்கு” என்று சொன்னது மயில்.

” அண்ணா, இன்னைக்கு உங்க நடனம் ரொம்ப நல்லா இருந்துச்சு. எங்க எல்லாருக்கும் பிடிச்சது அண்ணா”

” சரி, அதுக்கென்ன இப்போ? “

” இல்லை, எங்களுக்கெல்லாம் ஒரு சின்ன ஆசை. உங்க கூட நாங்க எல்லாரும் சேந்து ஒரு நடன நிகழ்ச்சி நடத்தலாம்னு யோசிச்சோம். நீங்க அதுக்காக எங்களுக்குப் பயிற்சி தரீங்களாண்ணா? எல்லாப் பறவைகளும் நடனம் கத்துக்கணும்னு ஆசைப்படறாங்க! “

” என்ன என் கூடச் சேந்து நீங்க எல்லாரும் நடனம் ஆடணுமா? அந்தக் காக்கா, கிளி, குருவி, வான்கோழி இவங்கல்லாம் கூட நடனமாட வரப் போறாங்களா? நீயாவது பரவாயில்லை. கொஞ்சம் நல்லாப் பாடுவே? மத்தவங்க எல்லாரும் என்னோட சேந்து நடனமாட ஆசைப்படறது நியாயமா? ஒரு தகுதி வேணாமா? ஆளை விடுங்க” என்று ஏளனமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தது. மயிலின் பேச்சைக் கேட்டு அந்தக் காக்கை தலைகுனிந்தது.

வண்ண வண்ணத் தோகையுடன் அழகாகத் தோற்றமளிக்கும் மயிலின் நடனம் காக்கைக்கு மிகவும் பிடிக்கும். மயிலுடன் நட்புடன் பழக அதற்கு ஆசை தான். ஆனால் தன்னை ஒரு தோழனாக மயில் எப்போதுமே நினைப்பதில்லை என்கிற உண்மை அதற்குத் தெரியும். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அதனுடைய முயற்சி தோல்வி அடைகிறது.

தங்களுடைய ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்த மற்ற பறவைகளும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் அகன்று சென்றன.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வாரம் முடிந்து விட்டது. வனத்தை ஒட்டி ஒரு சிறிய ஊர் இருந்தது. அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய வீடும், அந்த வீட்டைச் சுற்றி ஒரு காய்கறித் தோட்டமும் இருந்தன.

அந்தத் தோட்டத்தில் காலி ஃப்ளவர், முட்டைக் கோஸ், கேரட், பாலக் கீரை போன்று வகை வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. செடிகளில் இளம் பிஞ்சுகளும், பச்சைப் பசேலென்று துளிர்த்திருந்த கீரையும் கண்ணைக் கவர்ந்து இழுத்தன. அந்தப் பிஞ்சுக் காய்கறிகளைப் பார்த்து மயிலுக்கு நாவில் எச்சில் ஊறியது. ஆசையைத் தடுக்க முடியாமல் தோட்டத்தில் எட்டிப் பார்த்தது மயில்.

ஆள் நடமாட்டம் தெரியாததால் கிடுகிடுவெனத் தோட்டத்தில் புகுந்து பிஞ்சுக் காய்கறிகளை ஆசை தீர வேட்டையாடியது அந்த மயில். காலி ஃப்ளவர் பிஞ்சுகளை வயிறார உண்ட பின்னர் பாலக் கீரையை ருசிக்க ஆரம்பித்தது. கொஞ்சமாக ஒரு செடியின் இலைகளைத் தான் சாப்பிட ஆரம்பித்திருந்தது. ஏனோ தெரியவில்லை. சுருண்டு விழுந்துவிட்டது.

அந்தக் கீரையில் அன்று காலையில் தான் ஏதோ பூச்சி மருந்தைத் தெளித்திருந்தார்கள். அந்த ரசாயன மருந்து படிந்திருந்த இலைகளை ருசித்ததால் தான் மயில் மயங்கி விட்டது. நல்ல வேளையாக நிறைய இலைகளை உண்ணவில்லை. நிறைய இலைகளைச் சாப்பிட்டிருந்தால் அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.

அந்த சமயத்தில் அருகிலிருந்த மரத்தில் உட்கார்ந்திருந்த காக்கை மயங்கி விழுந்த மயிலைப் பார்த்துவிட்டது.

பதறிப்போன காக்கை, ” கா கா” என்று சத்தமிட்டுக் கரைய ஆரம்பித்தது. உடனே  காட்டில் வசிக்கும் இன்னும் சில பறவைகள் வந்து அங்கே கூடி விட்டன.

எல்லாப் பறவைகளும் அருகிலிருந்த நீரோடைக்குப் பறந்து போய், தங்களுடைய அலகுகளால் முடிந்த அளவு நீரை உறிஞ்சி வாயில் சேமித்துக் கொண்டு வந்து மயிலின் மேல் தெளித்தன. அதைத் தவிரத் தங்களுடைய இறக்கைகளையும் நீரில் நனைத்துக் கொண்டு வந்து மயிலின் அருகில் நின்று கொண்டு இறக்கைகளை அசைத்துத் தண்ணீர்த் துளிகளைச் சிதற வைத்தன.

சில்லென்று உடலில் பட்ட நீர்த்துளிகளால் மயக்கம் தெளிந்த மயில் கண்களை லேசாகத் திறந்து பார்த்தது. மகிழ்ச்சி அடைந்த காக்கை,

” மயிலண்ணா, மயிலண்ணா, சீக்கிரம் பறந்து வாங்க. இந்த இடத்தை விட்டுப் பறந்து போயிடலாம். மனுஷங்க யாராவது வந்துட்டாங்கன்னா, மிகப்பெரிய ஆபத்து வந்துடும்” என்று பதட்டத்துடன் எச்சரிக்கை செய்தது.

மயிலால் சாதாரணமாகவே மற்ற பறவைகளைப் போல அதிக உயரம் பறக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது. எடையும்  கூட இருப்பதால் அதிக உயரத்தை மயிலால் எட்ட முடியாது.

மயிலுக்கு, அக்கறையுடன் பேசிய அந்தக் காக்கையின் நியாயமான கவலை புரிந்தது. இருந்தாலும் மயிலால் உடலை அசைக்கக் கூட முடியவில்லை. மிகவும் பலவீனமாக உணர்ந்தது.

சரியாக அதே சமயத்தில், அந்த இடத்திற்கு ஒரு முதியவரும், ஒரு சின்னப் பையனும் வந்தார்கள். அந்த முதியவர், சுருண்டு கிடந்த மயிலைப் பார்த்துப் பதறிப் போனார்.

” அச்சச்சோ, இந்த மயிலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இங்கே கிடக்கு? ” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தார்.

” அது வந்து தாத்தா இன்னைக்கு நம்ப தோட்டக்காரன், கீரைப் பாத்தியில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிச்சிருக்கான். ஒருவேளை இந்த மயில் அதைச் சாப்பிட்டு இருக்குமோ? ” என்றான் அந்தச் சிறுவன்.

” அடடா, பெரிய தப்பாச்சே? மயில் நம்ப தேசியப் பறவையாச்சே? அதைப் பிடிச்சு வைக்கறதோ, அதைக் கொல்லறதோ சட்டப்படி தப்பு. அரசாங்கத்துக்குத் தெரிஞ்சா தண்டனை கிடைக்கும் . தோட்டக்காரன் கிட்ட நாளைக்கே பேசறேன். இனிமே செடிகளில் எந்த ரசாயன மருந்தும் போடக்கூடாது. நம்மால எந்தப் பறவையும் உயிரிழக்கக் கூடாது ” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர்ந்த நீரை வைத்தார் அவர்.

மயிலைப் பிரியத்துடன் தடவிக் கொடுத்தார். சிறிது நேரத்தில் மயிலுக்குத் தெம்பு வந்தது. அங்கிருந்து பறந்து சென்றது.

அடுத்த நாள் மாலை நேரம். காட்டுக்குள் இருந்த நீரோடையின் கரையில் மயில், மற்ற பறவைகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. குயில் பாட்டுப் பாட, எல்லாப் பறவைகளும் விதவிதமான சப்தங்களை எழுப்பியபடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தன.

மயிலும் புன்னகையுடன் அந்த நிகழ்ச்சியை இரசித்துக் கொண்டிருந்தது.  இனிமையோ இனிமையான சூழ்நிலை. நட்பும், பிரியமும் காற்றில் கலந்து வீசின.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments