சகுந்தலா அன்று மாலை நேரத்தில் குழந்தைகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளின் பள்ளியில் அன்று ஆண்டு விழா இருந்ததால் குழந்தைகள் வரத் தாமதமாகி விட்டது.

” அம்மா, அம்மா ” என்று அலறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் முகிலன். அவன் பின்னாலேயே அமரன், சரண்யா, பல்லவி, அனு எல்லோரும் சிரித்த முகங்களுடன்.

” என்ன? எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுது? என்னமாவது மனசுக்கு சந்தோஷமான விஷயம் நடந்ததா? ” என்றாள் சகுந்தலா.

” ஆமாம் ஆன்ட்டி, உங்க கிட்ட கத்துக்கிட்ட விஷயங்களையும் தகவல்களையும் வைத்து நாங்க அஞ்சு பேரும் கணிதம் பற்றி நடத்திய சின்ன புரோகிராம் பயங்கர ஹிட். ஆடியன்ஸ் எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணினாங்க. அப்புறம் நிகழ்ச்சிக்கு வந்த சீஃப் கெஸ்ட்டும் எங்களைப் பாராட்டிப் பேசினார்” என்றாள் சரண்யா.

” ரொம்ப ரொம்ப சந்தோஷம். அது தான் நேரா அவங்கவங்க வீட்டுக்குப் போகாம இங்கே வந்துட்டீங்களா? சரி, முகம், கை, கால் கழுவிட்டு வாங்க. சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சகுந்தலா.

கொஞ்சம் சிற்றுண்டியும், பழச்சாறும் அருந்திவிட்டு அனைவரும் அரட்டைக் கச்சேரியில் இறங்கினார்கள். சகுந்தலாவும் வந்து அவர்களுடைய அரட்டையில் சேர்ந்து கொண்டாள்.

” மேத்ஸ் பத்தி உங்க எல்லாருக்கும் இவ்வளவு ஆர்வம் இருக்கிறது பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு. நிறைய மாணவர்களுக்கு கணிதம்னால ஒரு பயம் இருக்கு. அதைப் போக்க நாம் எல்லோரும் முயற்சி எடுக்கணும். ஒரு சுவாரஸ்யத்தோட விளையாட்டு மாதிரி மனசில நினைச்சுகிட்டுப் படிச்சா நிச்சயமாக எல்லாருக்கும் பிடிக்கும்.

கணிதம் வெறும் பேய், பூதம், பிசாசு மாதிரி பயமுறுத்தற படிப்போ, பிரிவோ இல்லை. உண்மையில் கணிதம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைஞ்சிருக்கற சப்ஜெக்ட். பால் கணக்கு, மளிகைக் கணக்கு, கடன் பற்றிய தகவல்கள், வருமான வரி மற்றும் பல வரிகள், இலாபம், நஷ்டம், வட்டி, சதவிகிதம் அப்படின்னு எல்லா இடங்களிலும் கணித அறிவு நிச்சயமாகக் கை கொடுக்கும்.

கணிதத்தை அறிவியலின் மொழி( language of sciences) என்றும், அறிவியலின் அன்னை ( mother of science) என்றும் சிலர் அழைப்பதில் தவறேதுவும் இல்லை.

வடிவியல் ( geometry)

இயற் கணிதம் ( algebra)

முக்கோணவியல் ( trigonometry)

எண் கணிதம், புள்ளியியல் ( statistics), அனாலிடிக் ஜியாமெட்ரி, ப்ராபெபிலிடி தியரி, வானவியல் ( astronomy), கேம் தியரி போன்ற பல்வேறு பிரிவுகள் சுவாரஸ்யமானவை. மேலே போகப்போக இன்னும் புதிய புதிய பிரிவுகள் உங்களுக்காகக் காத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பழைய காலத்தில் இருந்து பல்வேறு கணித மேதைகள் பிறந்த பூமி இது. ஆர்யபட்டா, பிரம்ம குப்தா, வராகமிகிரர், பாஸ்கராச்சார்யா, நாராயண பண்டிதர்,

ஸ்ரீதராச்சாரியர், மகாவீர் ஆசார்யா, ஸ்வாமி பாரதி கிருஷ்ண தீர்த்தாஜி, ஆனந்த் குமார், ஸ்ரீ நிவாஸ ராமானுஜன், சகுந்தலா தேவி, மஞ்சுள் பார்கவா, மாதவா ( கேரளா) அனைவரும் கணித வானில் ஜொலித்த தாரகைகள். நமது மண்ணிற்குப் பெருமை சேர்த்த மேதைகள்.

உலகிற்கு சூனியம் எனப்படும் ஜீரோவை அறிமுகப்படுத்தியது இந்தியா தான். சூனியம் இல்லாமல் எண் கணிதத்தில் பல விளக்கங்கள் கடினமாகவே இருந்திருக்கும். ஜீரோவின் அறிமுகம் கணிதத்தில் மிகப் பெரிய மைல்கல் என்று சொல்லலாம்.

நீங்க எல்லோருமே இப்ப இருக்கற இதே ஆர்வத்தோட தொடர்ந்து படிக்கணும். உங்க நண்பர்கள் கிட்டயும் இதைப் பத்திப் பேசணும். சரியா? ” என்று முடித்தாள் சகுந்தலா.

” சரி, இன்னைக்கு ஒரு புதிரோட முடிக்கலாம்.

என்னோட வீட்டு எண் பத்தி ஒரு க்ளூ தரேன். வீட்டு நம்பரை நீங்க கண்டுபிடிக்கணும்.

1.என் வீட்டு நம்பர் 3 ஓட மடங்கு அதாவது மல்டிபிள் ஆக இருந்தால் அது 50 இலிருந்து 59 க்குள்ள ஒண்ணு.

2.எங்க வீட்டு நம்பர் 4 ஓட மல்டிபிளா இல்லைன்னா அது 60 இலிருந்து 69 க்குள்ள ஒண்ணு.

3.என் வீட்டு நம்பர் 6 ஓட மல்டிபிள் இல்லைன்னா அது 70 இலிருந்து 79 க்குள்ள ஒண்ணு.

நல்லா யோசிச்சு விடை சொல்லுங்க” என்று நிறுத்தினாள்.

சரண்யாவும், அமரனும் விடையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

வீட்டின் எண் 76.

எப்படி என்று பார்க்கலாமா?

முதல் நிபந்தனையின் படி 3 உடைய மல்டிபிள் என்றால் 50 இலிருந்து 59 வரை பார்த்தால் 51, 54, 57 தான் இருக்க முடியும்.

ஆனால் இரண்டாம் நிபந்தனையின் படி இந்த மூன்று எண்களுமே நான்கின் மல்டிபிள் இல்லை .ஆனால் 60- 69 என்ற வரைமுறையில் வரவில்லை.

முதல் நிபந்தனை நிறைவேறாததால் மூன்றின் மல்டிபிள் இல்லை. அப்படி என்றால் ஆறின் மல்டிபிள் ஆக இருக்க முடியாது. ஏனென்றால் ஆறில், மூன்றும் வகுபடும்.

70- 79 இந்த வரைமுறையில் உள்ள எண்களில் 76 ஒன்று தான் நான்கின் மல்டிபிள். மீதி எண்கள் நான்கின் மல்டிபிள் இல்லை என்றால் 60- 69 இல் தான் வரமுடியும். 70-79 இல் வரமுடியாது. எனவே நான்கின் மல்டிபிள் தான் விடை.

76 தான் வீட்டின் எண்.

இந்தப் புதிரில் கணித அறிவோடு நமது லாஜிக்கையும் பயன் படுத்த வேண்டும். கணிதத்தில் லாஜிக் மிகவும் தேவையான ஒன்று. கணிதத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு தேர்விலும், பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் போது லாஜிக் மிகவும் அவசியமாகிறது.

ஓகே குழந்தைகளா, நீங்களும் களைத்துப் போயிருப்பீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. குட் நைட் ” என்று சொல்லி சகுந்தலா விடை பெற்றாள்.

சகுந்தலா இந்தப் பதிவுடன் நம்மிடம் இருந்தும் விடை பெறுகிறாள். சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதுமையான பல புதிர்கள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களுடன் இந்தத் தொடரைத் தொடருவதாகக் கூறுகிறாள்.

வாழ்த்தி விடை பெறுவோம்.

கணிதத்தில் ஆர்வத்தை வளர்ப்போம்.

அறிவை மேம்படுத்திக் கொள்ளுவோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments