சிறிய முக்குளிப்பான் (Little Grebe)

அங்கிங்கெனாதபடி எங்கும் காணக் கூடிய பறவைகளில் நீர் பறவைகளும் ஒன்று. நீர்நிலைகள் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் இவற்றைப் பார்க்க முடியும். வாத்து, தாரா, கொக்கு, நாரை போன்ற பல பறவைகள் இவற்றில் அடங்கும். அப்படிப்பட்ட நீர்ப் பறவைகளின் ஒன்றுதான் சிறிய முக்குளிப்பான் எனப்படும் லிட்டில் கிரீபி (Little Grebe). பொதுவாக அறியப்படும் கிட்டத்தட்ட ஆறு வகை முக்குளிப்பான்களில் லிட்டில் கிரீபி சற்றே சிறியது. இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காணக்கூடிய இப்பறவை ஒரு வசிப்பிட பறவையாகும்.
இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களிலும் இது பரவலாக காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Tachybaptus ruficollis. பண்டைய கிரேக்க மொழியில் bapto என்பதற்கு ” அடியில் மூழ்குவது” என்பதாகும்.

படம்: Dr. பா. வேலாயுதம்

நன்னீர் குட்டைகளிலும் குளங்களிலும் இவற்றை தாராளமாக பார்க்கலாம். தனியாகவும் சிறு குழுக்களாகவும் நீரில் நீந்திக் கொண்டு இருப்பதை காணமுடியும் . வளர்ந்த பறவை கிட்டத்தட்ட 23 முதல் 29 சென்டிமீட்டர் வரை இருக்கும். கழுத்து செம்பழுப்பு நிறத்திலும் , உடல் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும் . அலகுகள் சிறியதாக இருக்கும் அலகுகளின் அடிப்பகுதியில் மஞ்சள் வர்ணம் காணப்படும். இத்தகைய வர்ணமும் உருவமும் இப்பறவையை தூரத்திலிருந்தே எளிதில் அடையாளம் காண உதவும். இளம் பறவைகள் உடல் முழுவதும் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

நீச்சல் இதற்கு கை வந்த கலை. கால்களை மெதுவாக அசைத்தபடி நீந்தும். தேவைப்பட்டால் நீர்ப்பரப்பில் இருந்து அப்படியே எழுந்து நீர்ப்பரப்பின் மேல் ஓடி பின் பறக்கும். குறைவான உயரத்தில் சிறிது தூரம் வரை பறக்கக் கூடியது. மேலும் நீரின் அடியில் மூழ்கி நீதி சிறிய மீன்கள் மற்றும் பாசி போன்ற உயிரினங்களை உண்ணும். சிறிய உருவம் கொண்டதால் ஆபத்து வரும் சமயத்தில் நீர் நிலையில் காணப்படும் செடிகளுக்கு இடையே தன்னை எளிதில் மறைத்துக்கொள்ளும். இதன் கால்கள் உடம்பின் சற்றே பின் பகுதியில் இருப்பதால் இவற்றால் நன்றாக நீந்த முடியும் ஆனால் எளிதில் நடக்க முடியாது. இதன் காரணமாக தனது கூட்டை நீர்நிலைகளின் கரை ஓரமாகவே அமைத்துக்கொள்ளும். பொதுவாக மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். 4 முதல் 7 முட்டைகள் வரை இடும் இறை தேடி நீருக்குள் செல்லும் பொழுது கூட்டை இலைகளால் மறைத்து வைத்துவிட்டு செல்லும்.

அடுத்த முறை உங்கள் ஊரில் உள்ள சிறிய குளங்களுக்கு செல்லும் போது கவனித்து பாருங்கள்……நீர்ப்பரப்பில் நீந்துவதும் பின்னர் சிறிது நேரம் நீருக்கு அடியில் மூழ்குவதுமாக ஒரு சிறிய உருவம் கொண்ட பறவையை பார்த்தீர்களானால், அது முக்குளிப்பானாகத்தான் இருக்கும். அடையாளம் கண்டு கொள்வீர்கள் தானே?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *