The wizard of Oz
இந்த நாவல் 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்ட புகழ்பெற்ற சிறுவர் நாவலாகும். ஃப்ராங்க் பாம் எழுதிய இந்த நாவல் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கதை வெளிவந்த பின் பலர் தங்கள் மகளுக்கு டாரத்தி என்றும் தங்கள் செல்ல நாய்க்கு டோட்டோ என்றும் பெயரிட்டனர். இந்த நாவலின் வெற்றியைத் தொடர்ந்து இதன் முதன்மைப் பாத்திரங்கள் தோன்றும் மேலும் 4 கதைகளையும் எழுதியுள்ளார் ஆசிரியர். ‘ஆஸ் நகரத்தின் மந்திரவாதி’ கதையை பூஞ்சிட்டு வாசகர்களுக்காக மொழிபெயர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-டாக்டர். அகிலாண்ட பாரதி
1.வீடு பறந்தது
டாரத்தி அன்பான, அழகான பள்ளிச் சிறுமி. கான்சாஸ் நகரத்தில் தன் அத்தை எம் மற்றும் மாமா ஹென்றியுடன் ஒரு அழகிய மர வீட்டில் வசித்து வந்தாள். அவளுடைய செல்ல நாய்க்குட்டி டோட்டோ எப்போதும் அவள் பின்னாலேயே சுற்றும். ஒரு நாள் திடீரென்று பெரும் மழையும் புயல் காற்றும் வீசப்போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதை கவனித்த டாரத்தியின் மாமா ஹென்றி,
“வாங்க! சீக்கிரம் நம்ம வீட்டோட பாதாள அறைக்குப் போயிடலாம். இப்ப பெரிய புயல் காற்று வரும் போல இருக்கு!” என்று கூறினார். முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு அத்தையும் மாமாவும் வேண்டாத பொருட்களை போட்டு வைத்திருக்கும் பாதாள அறைக்குச் சென்றனர்.
டாரத்தி டோட்டோவை எங்கே என்று தேடினாள். அது அவளது அறையில் கட்டிலுக்கு கீழே படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. டோட்டோவை அவள் கண்டுபிடித்து, “வெளியே வா!” என்று அழைத்த சமயம், பலத்த சத்தத்துடன் புயல் வந்துவிட்டது.
என்ன ஒரு ஆச்சரியம்! அவர்களின் சிறிய மர வீடு அப்படியே சுழற்காற்றில் மேலே எழும்பி வானத்தில் பறக்க ஆரம்பித்தது. கண்களை மூடிக்கொண்டாள் டாரத்தி. அப்படியே தூங்கியும் போனாள். அவள் கண் விழித்த போது முற்றிலும் புதிய உலகத்தில் அவளும் டோட்டோவும் இருப்பதைத் தெரிந்து கொண்டாள். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தங்கள் மரவீட்டைத் திறந்து கொண்டு அவள் வெளியே வர, மிகவும் அழகான ஒரு மந்திர நகரம் அவளைச் சுற்றிலும் இருந்ததைப் பார்த்தாள்.
அவளின் முன்பு ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். அவர்களது முகமும், உடல் அமைப்பும் பெரியவர்களைப் போல் இருந்தாலும் உயரத்தில் டாரத்தியின் அளவுக்கே இருந்தனர்.
“மஞ்ச்கின்களின் நகரத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் ஒரு நீளமான ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடையில் ஆங்காங்கே சில நட்சத்திரங்கள் மின்னின. ஆண்கள் இருவரும் ஊதா நிற உடையை அணிந்து நீளமான வெள்ளை தாடி வைத்திருந்தனர். மூன்று பேரும் ஒன்று போல மேலே ஊசியாக இருந்த தொப்பியை அணிந்திருந்தனர்.
“கிழக்குத் திசையின் கொடிய சூனியக்காரியைக் கொன்று எங்களைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி!” என்றார் அந்தப் பெண்.
டாரத்திக்கு ஆச்சரியம். “நான் யாரையும் கொலை செய்யல! அது ரொம்ப தப்பான செயல். எனக்குப் பிடிக்காது!” என்று அவள் சத்தமாகக் கூறினாள்.
“நீங்க வேணும்னு செய்யலை. உங்களோட வீடு பறந்து வந்து விழுந்துச்சு இல்ல.. அதுல மாட்டி அந்த கெட்ட சூனியக்காரி இறந்து போயிட்டாங்க” என்றார் அந்தப் பெண்.
“அப்படியா? தவறுதலா நடந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்க” என்று டாரத்தி கூற,
“அந்த சூனியக்காரி ரொம்ப கெட்டவங்க. எங்க நகரத்து மக்களை எல்லாம் அடிமையாகிட்டாங்க. இப்ப நாங்க சுதந்திரமா ஆயிட்டோம். அதுக்கு நீங்க தான் காரணம். ரொம்ப நன்றி!” என்று மீண்டும் டாரத்திக்கு நன்றி தெரிவித்தார்.
“நீங்க யாரு?” என்று டாரத்தி கேட்க, “நான் வடக்கு திசையின் நல்ல சூனியக்காரி. இப்ப நீங்க ஆஸ் அப்படிங்கற உலகத்துல இருக்கீங்க. இங்க திசைக்கு ஒன்றா நாலு சூனியக்காரிகள் இருக்கிறோம். வடக்கு மற்றும் தெற்கு திசையோட சூனியக்காரிகள் ரொம்ப நல்லவங்க. மேற்கு மற்றும் கிழக்கு திசையோட சூனியக்காரிகள் ரொம்ப கெட்டவங்க. இப்ப நீங்க ஒருத்தங்களை கொன்னுட்டதால, கெட்டவங்கள்ல மேற்கு திசையோட கெட்ட சூனியக்காரி மட்டும்தான் பாக்கி இருக்காங்க” என்றார் அந்தப் பெண்.
டாரத்திக்கு இந்தப் புதிய உலகம் பயத்தைக் கொடுத்தது. வீட்டிற்குப் போக வேண்டும் என்று விரும்பினாள். அவளுக்கு அழுகையாக வந்தது. அதைப் பார்த்த நல்ல சூனியக்காரிக்கு வருத்தமாக இருக்கவே, அவர் டாரத்திக்கு ஒரு யோசனை சொன்னார். “இந்த உலகத்தோட தலைவரா பெரிய மந்திரவாதி ஒருத்தர் இருக்கார். அவரைத் தான் ‘ஆஸ் நகரத்தின் மந்திரவாதி’ன்னு சொல்லுவோம். அவர் இருக்கக்கூடிய மரகத நகரத்துக்குப் போனீங்கன்னா அவர் உங்களுக்கு உதவுவார்” என்றார் நல்ல சூனியக்காரி.
“ரொம்ப நன்றி! மரகத நகரத்துக்கு எப்படிப் போகணும்?” என்று கேட்டாள் டாரத்தி.
“இதோ இந்த மஞ்சள் நிற கற்கள் பதித்த பாதையில் அப்படியே நடந்து போய்க்கிட்டே இருங்க.. நடுவுல காடுகள், சில நகரங்கள் வரும். அப்புறம் மரகத நகரம் வந்துடும். பெரிய மந்திரவாதி ரொம்பத் திறமையானவர் தான். ஆனால் அவர் மனசு வச்சா தான் உங்களுக்கு உதவி பண்ணுவார்” என்றார் நல்ல சூனியக்காரி.
“முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி!” என்ற டாரத்தி டோட்டோவுடன் சேர்ந்து மரகத நகரத்தை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கினாள்.
தொடரும்
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.