சிறுவன் சித்தார்த்திற்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை. பிளாட்டில் தரைதளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல் மாடியில் இருக்கும் மாமாவின் சைக்கிளைக் காணோம். எங்கும் தேடியும் கிடைக்காமல் கண்காணிப்புக் கேமராவில் கண்டுபிடித்துவிடலாம் என எண்ணி கவனித்துப் பார்த்தால் சைக்கிளை ஒருவர் பூட்டை உடைத்து எடுத்துச்செல்லும் வீடியோ இருக்கிறது. ஆனால் முகத்தை மூடி இருந்ததால் முகம் பதிவாகவில்லை. இப்பொழுது எப்படி கண்டுபிடிப்பது? போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுத்தாயிற்று. அவர்களும் வந்து விசாரித்து சில குறிப்புகளை பெற்றுக் கொண்டு கண்காணிப்பு கேமராவில் பதிந்திருந்த வீடியோவையும் ஒரு நகல் எடுத்துக் கொண்டுச் சென்று விட்டார்கள். ஆனாலும் சைக்கிள் கிடைப்பதற்கான வாய்ப்பு தெரிவதாக இல்லை. கண்காணிப்பு கேமராவையும் போலீஸ் மாமாவையும் மலைபோல எண்ணிக்கொண்டிருந்த சித்தார்த்திற்கு தொலைந்து போன கிடைக்காத சைக்கிள் அந்த நம்பிக்கையை குறைப்பதாக இருந்தது. இப்பொழுது சொல்லுங்கள்? சித்தார்த்திற்கு எப்படி தூக்கம் வரும்? இரவு முழுவதும் இந்த யோசனையிலேயே கழிந்தது. அதிகாலையிலேயே துவங்கிய ஆன்லைன் வகுப்பிற்கு அப்படியே எழுந்து அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். வகுப்பு முடியட்டும், முதலில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். இது தான் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஆசிரியர் கேட்கும் கேள்விகளெல்லாம் அப்புறம் தான். அவர் ஏதோ சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்பொழுது முடியும் வகுப்பு? இது தான் அவனது அன்றைய வகுப்பின் எண்ண ஓட்டம். ஒரு வழியாக வகுப்பு முடிந்தது.

வகுப்பு முடிந்தவுடன் அம்மாவிடம் தன்னைக் குடைந்து கொண்டிருந்த பல கேள்விகளில் சிலவாக,

“அம்மா! மாமாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு போன திருடன் எப்படி இருந்திருப்பான்?”

“அவங்க எல்லாம் எங்கிருந்து வராங்க?”

“அவங்க பார்க்குறதுக்கு எப்படி இருப்பாங்க?”

“கண்ணுக்குத் தெரியா மாட்டாங்களா?”

” எங்க தங்கி இருப்பாங்க?”

“எப்படி சாப்பிடுவாங்க?”

” எப்படி அவங்கள போலீஸ் கண்டு பிடிப்பாங்க?”

 இப்படி, அவர்கள் மனிதர்களே அல்ல என்பது போலவும், வேறு உலகத்திலிருந்து வந்த வேற்று கிரகவாசிகளென எண்ணிக் கொண்டிருக்கும் வகையில், கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். அம்மாவுக்கு இருக்கும் வேலைப் பளுவில், சித்தார்த் வகுப்பை ஒழுங்காக கவனிக்காததையும் உணர்ந்துகொண்ட அவருக்கு, முதலில் வந்தது கோபமே.

 “ஆமாம்! இந்தக் கேள்வி எல்லாம் நல்லா கேளு!

ஆசிரியர் கேட்கிற ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாதே!

 கவனமெல்லாம் எங்க தான் இருக்குமா உனக்கு!

 வரும் பேரண்ட்ஸ் மீட்டிங்ல, ஏன் மார்க் குறைவு? என உங்க ஆசிரியர் கேட்டா, நான் என்ன பதில் சொல்வது?”

 என மாற்றிக் கேள்விகளைப் போட்டு, அவனது அடுத்த தொடர் கேள்விகளை கேட்க விடாமல் அனுப்பி விட்டு விட்டார். சரி இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமெனில் மெல்ல வீட்டை விட்டு நகர்ந்து கிரவுண்டுக்கு விளையாட போகவேண்டியதுதான். கீழ் வீட்டு ஆண்டி கிட்ட கேட்டுக் கொள்ளலாமென ஒரு முடிவாகக் கிளம்பி விட்டான்.

Thirudan
படம்: அப்புசிவா

வழக்கம் போல மாலை நேரத்தில் விளையாடுவது அன்றும் தொடர்ந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராகேஷ், அச்சு, ஜித்து, ஜெயந்தன், ஜோசப் அனைவரும் ஒன்றாக அன்றைய விளையாட்டுத் தேர்வாக கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டு முடியும் தருவாயில் தண்ணீர் தாகம் சொல்லிமாளாது. ஏனெனில் விளையாட்டில் ஓட்டம் அப்படி! வழக்கம்போல தரைதளத்தில் வசிக்கும் சித்ரா ஆண்ட்டியின் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் நினைவிற்கு வந்துவிட்டது. ஒருவருக்கு தாகம் எடுத்தால் போதும். அத்தனை பேருக்கும் தண்ணீர் குடிக்க நினைவு வந்துவிடும். ஒரே நேரத்தில் அத்தனைபேரும் கிரிக்கெட் மட்டையை கீழே போட்டுவிட்டு ஆன்ட்டி வீட்டு  காலிங் பெல்லை மாறி மாறி அழுத்துவது வழக்கமாக நடக்கும் செயல்களில் ஒன்று. அத்தனை பேருடைய வீடும் அருகருகே இருந்தாலும் சித்ரா ஆண்ட்டி வீட்டில் இருக்கும் பானைத் தண்ணீர் அப்பகுதி குழந்தைகளுக்கு பிடித்தமான அமிர்தம். தீர்த்தம் என்றும் சொல்லலாம். அக்குழந்தைகளுக்காகவே தாம்பாளம் நிறைய நிரப்பப்பட்ட மண் குவளைகளும் அங்கு இருக்கும். ஆளுக்கு ஒரு குவளையில் ஒரே நேரத்தில் அத்தனைபேரும் நீரை வாங்கி அருந்துவார்கள். அன்று அப்படி நீரைப் பருகிய உடன் சித்தார்த்தை எழுப்பிய கேள்வியில் ஏனோ அத்துடன் விளையாட்டு முடிந்து விட்டது. என்ன கேள்வி அது??

வேறென்ன??!!

” ஆன்ட்டி நம்ம பிளாட்டுல, மேல் வீட்டு அங்கிளோட சைக்கிள எடுத்துட்டு போன திருடன போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்களா??”

” தெரியல சித்தார்த்!  சொல்ல முடியாது. இப்படி நிறைய கேஸ் இருக்கு. சைக்கிளோட பதிவு எண்,  கடையில் வாங்கிய பில், என எதுவுமே மேல் வீட்டு மாமா பத்திரமாக வைக்கவில்லை. குறிப்பிட்ட சைக்கிளுக்கான அடையாளம் எதுவும் போலீசிடம் கொடுக்கவில்லை. பொருளைத் திருடுபவர்களைக் காண்பதற்கான கண்காணிப்புக் கேமரா பொருத்தியிருந்தாலும், திருடன் முகமூடியை அணிந்து கொண்டு வந்ததால் முக அடையாளமும் பார்க்க முடியவில்லை. கையில் உறை அணிந்து கொண்டு வந்ததால், கைரேகைப் பதிவும்  எதிலும் இல்லை. இப்பொழுதெல்லாம் பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமரா இருப்பதால், திருடர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களை தயாரித்துக் கொண்டு தப்பித்து விடுகிறார்கள். வேறு எந்த தடயங்களை வைத்து திருடனை போலீஸ் பிடிக்கப் போகிறார்களென்பது தெரியவில்லை.” என்ற ஆன்ட்டியின் இந்த நம்பிக்கையற்ற வார்த்தைகள் சித்தார்த்தை சிறிது மனம் குலையத்தான் செய்தது.

சித்தார்த்தின் மனதில் தன் அம்மாவிடம் கேட்ட கேள்விகளில் தொடர இருந்த அடுத்தடுத்த கேள்விகள் தற்போது மீண்டும் எழத் தொடங்கியது. அவனுக்கு மிகவும் பிடித்தமான கியர் சைக்கிளான தனது பிறந்தநாளுக்கு வெளிநாட்டில் வசிக்கும் தனது அப்பா வாங்கிக் கொடுத்ததின் மீது கவலை வந்துவிட்டது.

“அப்படியானால் அந்த திருடன் என்னுடைய சைக்கிளையும் திருடிக்கொண்டு சென்று விடுவானா?? என்பது அவனது அடுத்த கேள்வி.

இல்லை.. என்று சொல்ல முடியாது அல்லவா?? அந்த பதில் தான் அவனுக்கு கிடைத்தது.

” சரி!”  இதனை எப்படி தடுப்பது??

 அவனது அடுத்த யோசனை, “பிளாட்டில் கீழே நிற்கும் அத்தனை வண்டிகளுக்கும், தொட்டாலே ஒலிக்கிற மாதிரி சைரன் பொருத்தி விடலாமா??

 “செய்யலாம், அதுவும் திருடர்கள் ‌ டெக்னாலஜியை அறிந்தவர்களாக இருந்தால்,  இணைப்பை துண்டித்து விட்டு எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.” இதுவே பதிலாக கிடைத்தது.

“சரி, வேறென்ன செய்யலாம்??

 “வாட்ச்மேன் போட்டு விடலாமா?

 “போடலாம், அவருக்கு மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க சைக்கிளின் விலையே பதினைந்தாயிரம் ரூபாய் தான்.என்றோ ஒருநாள் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காக மாதமாதம் கொடுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் செலவினைக் கூட்டிப் பார்த்தால், வருடா வருடம் புதிய மோட்டார் வண்டியே வாங்கி விடலாம். நமது அத்தனை வண்டிகளுக்கும் பொருத்துவதெனில் கணக்குப்படி ஒத்து வரல. சரி, இதுவும் வேண்டாம் வேற என்ன பண்ணலாம்?? யோசனை பண்ணு!! என்ற ஆன்ட்டியின் பதிலில் அடுத்த கேள்விக்கு தயாரானான்.

“திருடன் வருவதைப் பார்த்தவுடன், எங்க எல்லாருக்கும் சொல்லி விடுகிறீர்களா?? நாங்க எல்லாரும் மிளகாய்த்தூள் கலந்த  தண்ணிய வசிக்கிறோம். ஓடிவந்து முகத்தில் அடித்து விடலாம்!!”

” இது சரிதான்! ஆனால் திருடன் வருவதே நமக்கு தெரிவதில்லையே!!

 எப்படி உனக்குச் சொல்வது??  இதுவும் சரி வராது. வேறு என்ன செய்யலாம்?? இப்படியே தொடர் யோசனைப் போக முடிவே கிடைக்கவில்லை.

எனவே தனது எண்ணத்தை மாற்றி, திருடன் மேலே சிந்தனையை செலுத்த ஆரம்பித்துவிட்டான் சித்தார்த்.

“சரி ஆன்ட்டி,  திருடனெல்லாம் யாரு அவங்க??

 எங்க இருந்து வராங்க??

 அவங்களை நாம எப்படி ரோட்டில் போகும்போது கண்டுபிடிக்கிறது??

அவங்க ஏன் அப்படி இருக்காங்க??

 அவங்க பிறக்கும்போதே திருடர்களாக இருப்பார்களா??

என, சிறு வயதில் சாப்பிடாம மிரண்டு பிடிச்சா பூச்சாடி கிட்ட பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று கேட்டு வளர்ந்த பிள்ளைக்கு, கற்பனையான பூச்சாண்டியாக திருடன் தெரிய, இப்படி பலவாறாக கேள்விகள் எழுந்தது.

“அப்படி அல்ல சித்தார்த், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களும் அப்பா அம்மாவிற்கு பிறந்த ஒரு பிள்ளைதான். அவர்களுக்கும் உடன்பிறந்தவர்கள் இருப்பார்கள். அவர்களது சூழ்நிலை அவர்களை அப்படி திருடர்களாக மாற்றுகிறது. உன் மீது அன்பு செலுத்த உங்க அம்மா அப்பா இருக்கிறார்கள். அறிவுரை சொல்ல அன்பு காட்ட உனக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுக்க உன் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்ய என எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நீ வேறு யாரிடமும் எதுவும் உனக்கு வேண்டியதை கேட்பதற்கான தேவை இருக்கவில்லை. ஆனால் திருடனாக மாறிப்போகும் அவர்கள் தன் மீது அன்பு காட்ட எவரும் இல்லாதவர்களாக இருக்கலாம். துன்பப்படும் பொழுது தன்மீது பிரியம் வைத்து உதவுவதற்கு யாரும் இல்லாதவர்களாக இருக்கலாம். அவரது கஷ்டமான காலங்களில் அவர்களுக்கு தோள் கொடுத்து உறுதுணையாக இருக்கும் நண்பர்களும் இல்லாதவர்களாக இருக்கலாம். அன்பும் ஆதரவும் எவரிடமிருந்தும் கிட்டாதவர்களாக இருக்கலாம். தொழில் வாய்ப்பு என்று பணம் ஈட்ட வழியின்றி, அவர்கள் அன்பு செலுத்தும் அவரது குழந்தைகளுக்கு ஏதும் செய்து கொடுக்க இயலாத நிலையில் இருக்கும் ஒரு தந்தையாகவும் அவர்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட மனிதர்கள் பிறரது பொருளை அபகரித்துக் கொண்டு தான் பிரியமாக அன்பு செலுத்துபவர்களுக்கு கொடுப்பதற்காக திருடலாம். நமது சிந்தனையெல்லாம் திருடனை எப்படி பிடிப்பது?? நமது பொருளை எப்படி பாதுகாப்பது?? என்பதாக இல்லாமல் திருடன் உருவாவதை எப்படி தடுப்பது?? என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். என்பது இறுதியான முடிவான  பதிலாக ஆன்ட்டியிடமிருந்து கிடைத்தது அவனுக்கு.

இப்பொழுது சித்தார்த்தின் சிந்தனையோட்டம் திருடன் உருவாவதை தடுப்பதை நோக்கி ஓட ஆரம்பித்தது. அப்படி தடுக்க முடியுமா?? எப்படி தடுப்பது?? என்பதில் ஆர்வம் அதிகமானது. அப்படி தடுக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்தானே??!! ஆர்வம் இல்லாமலா போகும்?? இந்த கேள்வியை ஆண்டியிடம் வைத்தான் சிறுவன் சித்தார்த்.

” அப்படியானால் தடுப்பதற்கு என்ன வழி?  சொல்லுங்க ஆண்ட்டி?? ” சித்தார்த்.

” வேறொன்றும் அல்ல!!, உங்களுடன் பயணிக்கும் சக மனிதர்களுடன் மிக அன்பாக நடந்து கொள்வது முதலாவது தேவை. சக மனிதர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது அவர்களது துன்பத்தை மனதால் பகிர்ந்து கொள்வது. முடிந்தால் எவ்வகையிலாவது அவர்களை துன்பத்திலிருந்து வெளியே கொண்டுவர உதவுவதற்கு வழிகாட்டுவது,  நாம் உதவ வாய்ப்பிருந்தால் உதவுவது, என ஒருவருக்கொருவர் சக மனிதர்களுடன் ஆதரவாக இருந்தால் இப்படி திருடர்கள் உருவாக மாட்டார்கள். எங்குமே திருடர்கள் பிறப்பதில்லை. அவர்களது சூழ்நிலையே அவர்களை அப்படியானவர்களாக ஆக்குகிறது. தேவைக்கு அதிகமாக பொருட்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் வாய்க்கும் வயிற்றுக்குமே போதாமல் வாழ வழியின்றி இருப்பவர்கள், தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அதீத அன்பு, இப்படி அவர்களை திருடர்களாக மாற்றி பொருளீட்டி வாழ வைக்கிறது. அனைவரும் சமமாக வாழும் ஒரு சமுதாயத்தில் திருடுபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். நேர்மையற்ற வழியில் பொருளீட்டுபவர்களும் திருடர்களே!! அவர்களை பகட்டான போர்வையில் உயர்ந்தவர்களாக பார்க்கிறோம். இப்படி சிறு சிறு பொருட்களை அபகரித்துச் செல்பவர்களை பெரிய திருடர்களாக கீழ்த்தரமாக எண்ணுகிறோம். அவர்களை பிடிப்பதற்கு திட்டமிடுகிறோம். சக மனிதர்களுடன் அன்பினை பகிர்ந்து கொண்டு சமமாக எண்ணி பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக கருதி தோள் கொடுக்கும் ஒரு சமூகத்தில் திருடர்கள் பிறப்பதில்லை. அப்படி ஒரு சமூகத்தை உருவாக்குவதில் சிறுவர்களான உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. வரும் காலங்களில் அன்பு செலுத்தும் உங்களைப் போன்ற பிள்ளைகளால் அப்படி ஒரு உலகம் இல்லாமலே கூட போகலாம். நீங்கள் முயலலாம் தானே?? என்ற ஒரு விதையை அன்று விதைத்து விட்டார். இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட சித்தார்த்தும் அவனது நண்பர்களும் ஏதோ ஒன்று புரிந்தது போன்றே அவரவர் இல்லத்திற்கு பிரிந்து சென்றார்கள். அந்த பிரிவு தற்காலிகமானதெனினும் அவர்கள் அத்தனை பேருடைய எண்ணமும் அன்று ஒன்றாகவே இருந்தது. இது விதை மட்டுமே, அது வளர்ந்து பெரிய விருட்சமாக ஆகும் என்ற நம்பிக்கை அன்று அத்தனை பேருக்குள்ளேயுமிருந்து அவரவரது வீட்டிற்கு உண்ணவும் உறங்கவும் சென்றார்கள். மறுநாள் விடியும் என்ற நம்பிக்கை அத்தனை பேருக்குள்ளேயும் இருந்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments