-வியட்நாம் நாட்டின் நாடோடிக் கதை

வியட்நாம் நாட்டில் ஒரு அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சில நாட்களாகக் கண் பார்வைக் கோளாறு ஏற்பட்டு பார்க்கும் திறன் குறைந்து போனது. நிறைய மருத்துவர்கள் வந்து பரிசோதித்து பார்த்தும் அவரது கண் பார்வை கோளாறு குணமாகவில்லை.

இதனால் மிகவும் வருத்தமடைந்த மன்னர், ” என் கண்நோயை யார் குணப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நிறைய செல்வம் கொடுத்து, என் நாட்டில் பாதியையும் கொடுப்பேன்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அந்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தண்டோரா அடித்துச் சொல்லப்பட்டது.

அறிவிப்பைக் கேட்ட மக்கள் பலரும், ” அட பாதி நாடு கிடைக்கிறதே. நாமும் முயன்று பார்ப்போம்” என்று பேராசைப் பட்டு கண்ட கண்ட மருந்துகள் கொடுத்து மன்னரை குணப்படுத்த முயன்றனர்.

ஆனால் மன்னரின் கண் நோய் குணமாகவில்லை. மன்னரின் வேதனை தான் அதிகரித்தது.
நாட்டிற்காக பேராசைப்பட்ட நபர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க, “ஒருவர் ஒரு முறை தான் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற்றால் நாடு கிடைக்கும். தோற்றால் சிறை தண்டனை கிடைக்கும்” என்று கோபத்தில் ஆணையிட்டார் மன்னர்.
இதன் பிறகு, எங்கே மருந்து வேலை செய்யவில்லை என்றால் சிறையில் அடைத்து விடுவார்ளோ என்று அஞ்சி மக்கள் யாருமே மன்னரின் கண்நோய் தீர்க வரவில்லை.

அதே நாட்டில், ஒரு கிராமத்தில் யூ என்ற இளைஞன் தன் வயதான பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்து விட்ட யூவை அவன் பாட்டி மிகவும் நல்லவனாகவும், பண்புடையவனாகவும் வளர்ந்தியிருந்தார். தன்னுடைய சிறிய வயலில் தினமும் உழைத்து, நிம்மதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்தான் யூ.

மன்னரின் கண் நோய் குறித்த அறிவிப்பு யூவிற்கும் அவன் பாட்டிக்கும் தெரிந்திருந்தது. யூவின் பாட்டிக்கு பச்சிலை சாறு, விதைகள், இலைகள், மரபட்டை பற்றி நிறைய கேள்வி ஞானம் உண்டு. அவர் மன்னரின் கண் நோய் பற்றி அறிந்ததும் தன் பேரன் யூவை அழைத்தார். “யூ, மன்னரின் கண் நோயைக் குணப்படுத்த என்னால் முடியும். நாம் முயன்று பார்க்கலாம்” என்று கூறினார்.

யூ மிகவும் தயங்கினான். ஒருவேளை நோய் தீரவில்லை என்றால் மன்னர் சிறையில் அடைத்து விடுவாரோ என்று கவலைப்பட்டான்.

ஆனால் அவன் பாட்டி, “நம் மன்னர் மிகவும் நல்லவர். மக்களுக்காக பல நல்ல திட்டங்களை வகுத்து நாட்டைச் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டால், அண்டை நாடுகளின் மன்னர்கள் நம் மீது படை எடுத்து வரக்கூடும். அதனால் நம் மன்னரைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை” என்று யூவைச் சமாதானப்படுத்தினார்.

“சரி பாட்டி, என்ன மூலிகை என்று என்னிடம் சொல்லுங்கள். நான் போய் அந்த நோயை குணப்படுத்த முயல்கிறேன்” என்று தன் பாட்டியிடம் கூறினான் யூ.

பாட்டியும் அந்த கண்நோய் குணப்படுத்தக்கூடிய விதைகள் எங்கே வளர்கின்றன என்ற விஷயத்தை யூவிற்கு கூறினார்.

யூ அந்த விதைகளை தேடி காட்டிற்குள் பயணப்பட்டான். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு வழியில் ஒரு சிறிய நீர் ஓடை தென்பட்டது. தான் கொண்டு வந்திருந்த உணவு பொட்டலத்தை பிரித்து உண்டு விட்டு நீரோடையின் அருகில் வளர்ந்திருந்த பெரிய மரத்தின் வேரில் தலை வைத்து சிறிது நேரம் இளைப்பாறினான். அவன் கண்விழித்த பொழுது, வரிசையாக எறும்புகள் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்ததை கண்டான். சிறிது நேரம் அந்த எறும்புகளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நீரோட்டியிலிருந்து சிறிது நீர் ஒழுகி உண்டான ஒரு தண்ணீர் பாதை எறும்புகள் சென்று கொண்டிருந்த வழியைக் குறுக்கிட்டது. இதனால் எறும்புகள் தங்கள் போக்கில் செல்லாமல் நீரில் தத்தளிப்பதை கண்ட யூவதற்கு மனம் இளகியது.

” இந்த எறும்புகளும் நம்மை போல தானே.. பாவம் அவையும் ஓர் உயிர் தானே” என்ற நினைத்த யூ, நீரோடையில் இருந்து வழிந்து கசிந்த நீரை அங்கே கிடந்த சிறிய கற்கள் கொண்டு சரி செய்து, எறும்புகள் மீண்டும் நடக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தான்.

அதன் பின்னர் தான் உண்டு முடித்த உணவு பொட்டலத்திலிருந்து சிறிது உணவை எறும்புகளுக்காக அங்கே சிதறி விட்டு, தன் பயணத்தை மேற்கொண்டான்.

அந்த தினம் இரவு அவன் எங்கே தேடிய பொழுதும் அவன் பாட்டி கூறிய அந்த இரட்டை அடுக்கு சிவப்பு பைன் மரம் அவன் கண்களுக்குத் தென்படவே இல்லை. அதனால் அன்றைய இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்து உறங்க துவங்கினான்.

அவனுக்கு அப்பொழுது ஒரு விசித்திரமான கனவு தோன்றியது. அந்த கனவில் அவன் எறும்புகளின் தேசத்தில் நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் நிறைய எறும்புகள் நின்று கொண்டிருக்க, ராஜாவைப் போல் தலையில் கிரீடம் வைத்திருந்த அந்த தலைமை எறும்பு அவனிடம் பேசியது.

ant king

” யூ, நீ மிகவும் அன்பானவன். என் மக்களை இன்று நீ காப்பாற்றி இருக்கிறாய். அத்தோடு மட்டுமல்லாமல் அவர்களின் பசியைப் போக்க தானியங்கள் கொடுத்தாய். என் மக்களை தக்க சமயத்தில் காப்பாற்றியதால் உனக்கு ஏதேணும் உதவி தேவைப்படும் சமயத்தில் எங்களை நினைத்தால் நாங்கள் வந்து உனக்கு உதவுவோம்” என்று தலைமை எறும்பு கூறியது.

அடுத்த தினம் காலையில் எழுத்த பின்பும் யூவிற்கு இந்த கனவு அப்படியே நினைவில் இருந்தது. இது கனவுதானா என்று யோசித்துக் கொண்டே தனது பயணத்தை மேற்கொண்டான்.

பல காடுகள், மலைகள், நீரோடைகள், வனங்கள் என அலைந்து திரிந்து இறுதியாக அந்த இரட்டை அடுக்கு கொண்ட பெரிய பயன் மரத்தினை கண்டுபிடித்தான் யூ. அந்த மரத்தின் வேர் பகுதியைச் சுற்றி வந்தான்.
அந்த மரத்தின் வேர் பகுதியில் சிறு சிறு விதைகள் இருக்கும் என்றும், அதை எடுத்து திராட்சைப் பழரசத்துடன் கலந்து அருந்தினால் கண் நோய் குணமாகும் என்றும் பாட்டி கூறியிருந்தார்.

எவ்வளவு தேடியும் அந்த மரத்தின் அடியில் அவனால் விதைகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கடுகை விடவும் சிறிய அளவில் இருக்கும் விதைகள் மரப்பட்டையுடன் நன்றாக ஒட்டி இருந்தன. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே முந்தின இரவு அவன் கண்ட கனவு நினைவுக்கு வந்தது.

சரி எதற்கும் எறும்பு ராஜாவிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்த யூ கண்களை மூடிக்கொண்டு மனதில் எறும்பு ராஜாவை நினைத்து தன் கோரிக்கையை வெளிப்படுத்தினான்.
என்ன ஆச்சரியம்!! சிறிது நேரத்தில் அவன் எதிர்பாராத அளவு அங்கே நூறு, ஆயிரம் எறும்புகள் ஒன்றின் பின் ஒன்றாக அம்மரத்தின் வேர்களிடம் வந்து சேர்ந்திருந்தன.

அவை மரத்தை சுற்றி சுற்றி நடந்து, கடுகை விடவும் சிறிய அளவிலான விதைகளைக் ஒவ்வொன்றாக கொணர்ந்து யூ வின் கைகளில் வைத்து விட்டுச் சென்றன. சிறிது நேரத்திலெல்லாம் யூவின் கை நிறைய அவன் தேடி வந்த மருத்துவ விதைகள் நிறைய இருந்தன.

மிகவும் மகிழ்ந்து போன யூ அந்த எறும்புகளுக்கும் எறும்பு ராஜாவிற்கும் நன்றி தெரிவித்து விட்டு தன் வீட்டை நோக்கி நடந்தான்.

பாட்டியிடம் சென்று நடந்த விஷயத்தை கூறி பாட்டியின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு மன்னரை காண அரண்மனைக்கு சென்றான்.

அவன் பாட்டி கூறியது போல திராட்சை பழ ரசத்தில் விதைகள் சிலவற்றை கரைத்து மன்னரையும் குடிக்க செய்ய சிறிது நேரத்தில் மன்னரின் பார்வை கோளாறு குணமாக்கியது.

இதனால் மிகவும் மகிழ்ந்து போன மன்னர் தான் வாக்குறுதி அளித்தது போல நாட்டின் ஒரு பகுதியை யூவிற்கு கொடுத்து விட எண்ணினார்.

ஆனால் நல்ல மனம் படைத்த யூ, ” இல்லை மன்னா ! தாங்கள் இந்நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறீர்கள். உங்களை விட இந்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய என்னால் இயலாது. மன்னருக்கு உதவ வேண்டும் என்று தான் நானும் என் பாட்டியும் ஆசைப்பட்டோம்” என்று கூறினான்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போன மன்னர், “அப்படி என்றால் எனக்கு உதவியாக நீயும் உன் பாட்டியும் நம் அரண்மனையிலேயே இனிமேல் தங்கிக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து உன்னை என் முக்கிய மந்திரியாக நியமிக்கிறேன்” என்று கூறி யூவிற்கு நிறைய தானியங்களும் பொன்னும் பொருளும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
யூவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments