முன்னொரு காலத்தில் ஒரு காட்டுக்குள் ஒரு பெண் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தாள்.
பனிமலர், கண்மலர் என்று அந்தப் பெண் குழந்தைகளுக்குப் பெயர். இரண்டு பேரும் அன்பு, பரிவு, அறிவு, பண்பு என்று அனைத்து நல்ல குணங்களையும் பெற்றிருந்தார்கள். இளகிய மனதுடைய மூவருமே சட்டென்று மனமிரங்கி, கஷ்டத்தில் இருக்கும் யாருக்கும் உதவ முன்வருவார்கள். பண விஷயத்தில் ஏழைகளாக இருந்தாலும் குணத்தில் தங்கக் கம்பிகள்.
மலை அடிவாரத்தில் இருந்த அந்தக் காட்டில் குளிர் காலத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். பனி கூட சில சமயங்களில் பெய்யும். அன்று ஒரு நாள் இரவு நேரம். காட்டில் வேலை செய்து விட்டு வந்து, இரவு உணவை அம்மா தயார் செய்து கொண்டிருந்தாள். பனி மலரும், கண்மலரும் குளிர் காய்வதற்காக, வீட்டின் ஒரு மூலையில் சிறிய விறகுக் கட்டைகளைப் போட்டுத் தீமூட்டிக் குளிர் காயும் இடத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்ட பனிமலர் சென்று கதவைத் திறந்தாள். குளிரில் நடுங்கியபடி ஒரு கரடி அங்கே நின்று கொண்டிருந்தது.
” பனி பெய்ததால் பாதை எல்லாம் மூடிக் கிடக்கிறது. இருட்டாவும் இருக்கிறதால, என்னால என் வீட்டுக்குப் போக முடியலை. வெளியே ரொம்பக் குளிருது. இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் உங்க வீட்டில் தங்க இடம் தரீங்களா? ” என்று கெஞ்சியது அந்தக் கரடி.
” உள்ளே வாங்க” என்று அன்புடன் அழைத்தாள் பனிமலர். இருக்கும் எளிமையான உணவைக் கரடிக்கும் பகிர்ந்து கொடுத்தாள் பனிமலரின் தாய்.
அன்று இரவு தீ மூட்டிய இடத்திற்கு அருகிலேயே தூங்கிப் போனது கரடி. அதன் மேல் ஒரு போர்வையை, கண்மலர் கொண்டு வந்து போர்த்தி விட்டாள். நன்றாகத் தூங்கிப் போயிற்று கரடி. காலையில் எழுந்து நன்றி சொல்லி விட்டுக் கிளம்பிப் போனது. அடுத்த நாளும் இரவு நேரத்தில் வந்து தங்கி விட்டுப் போனது. இப்படியே பலநாட்கள் கடந்தன.
குளிர் காலம் முழுவதுமே அவர்கள் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டுக் காலையில் கிளம்பிப் போனது கரடி. ஒரு நாள் அவசர அவசரமாக அந்தக் கரடி கிளம்பிப் போனபோது, அதனுடைய வால் கதவில் மாட்டிக் கொண்டது. அதை வேகமாக விடுவித்துக் கொண்டு கரடி போனபோது அந்த வாலின் ஒரு பகுதி தங்கம் போல மின்னியது .அதைப் பார்த்த பனிமலர், ஆச்சரியம் அடைந்தாள்.
ஒருநாள் பகல் நேரத்தில் பனிமலரும்,
கண்மலரும் காட்டில் இலந்தைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ கத்தும் குரல் கேட்க, அந்தப் பக்கம் விரைந்தார்கள். ஒரு மரம் விழுந்து கிடந்தது. மரத்தின் அடியில் ஒரு குள்ளன் மாட்டிக் கொண்டிருந்தான். இந்தப் பெண்களைக் கண்டதும் அதிகாரமாக அவர்களை அழைத்தான்.
” ஏய் பொண்ணுங்களா! சீக்கிரமா வந்து இந்த மரத்தை நகர்த்தி என்னை வெளியே எடுங்க. மசமசன்னு வேடிக்கை பாத்துட்டு நிக்காதீங்க” என்று அதட்டினான்.
பனிமலரும், கண்மலரும் எவ்வளவோ முயற்சி செய்தும் கனமான அந்த மரத்தை அவர்களால் தூக்க முடியாமல் போனது. குள்ளன் பொறுமையில்லாமல் கத்திக் கொண்டிருந்தான். ஒருவழியாக எப்படியோ குள்ளனை வெளியே இழுத்து விட்டார்கள். ஆனால், அவனுடைய தாடி மரத்தில் மாட்டிக் கொண்டது. கண்மலர் தன்னிடம் இருந்த கத்திரிக்கோலால் அவனுடைய தாடியை வெட்டி அவனை விடுவித்தாள்.
” சரியான முட்டாளா இருக்கயே? உன்னால என்னோட தாடி போச்சு ” என்று கத்தியபடி தனக்கு உதவிய அந்தப் பெண்களுக்கு நன்றி கூறச் சொல்லாமல் ஓடி மறைந்தான். அவன் கையில் ஒரு பை நிறையத் தங்கக் காசுகள் இருந்தன. தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு போனான் அவன்.
இன்னும் சில நாட்கள் கழித்து, இரண்டு பெண்களும் காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்கப் போனபோது மீண்டும் அந்தக் குள்ளனை சந்தித்தார்கள்.
இந்த முறை அவனுடைய தாடி, மீன் பிடிக்கும் கம்பின் நுனியில் இருந்த கொக்கியில் மாட்டிக் கொண்டிருந்தது.
” வேடிக்கை பாக்காம வந்து எனக்கு உதவி செய்யுங்க” என்று கத்தினான் அவன். இரண்டு பேரும் சிரித்த முகத்துடன் உதவி செய்யப் போனார்கள். இந்த முறையும் அவர்களுடைய முயற்சியில் அவனுடைய தாடி சிறிது பிய்ந்து போனது. அவர்களை நன்றாகத் திட்டிவிட்டு, அந்தக் குளக்கரையில் கிடந்த விலை உயர்ந்த நகைகளை அள்ளிக் கொண்டு அவர்களுக்கு நன்றி கூடச் சொல்லாமல் வேகமாக ஓடிவிட்டான் அந்தக் குள்ளன்.
இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் ஒருநாள் அந்தக் குள்ளனை சந்தித்தார்கள். வீட்டில் கைவேலை செய்ய உபயோகிக்கும் ஊசிகள் வாங்குவதற்காகப் பக்கத்து ஊர்ச் சந்தைக்குக் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கழுகின் பிடியில் மாட்டிக் கொண்டிருந்த குள்ளனைக் காப்பாற்ற ஓடினார்கள்.
” வாங்க, வாங்க, சீக்கிரமா வாங்க. என்ன சோம்பேறித்தனம் இது! ” என்று திட்டியபடி அவர்களைக் கூப்பிட்டான். இவர்கள் எப்படியோ போராடி அவனைக் காப்பாற்றி விட்டார்கள். இந்த முறை அவனுடைய சட்டை கொஞ்சம் கிழிந்து போய்விட்டது.
” எப்பவும் இந்த மாதிரித் தப்புத் தப்பா ஏதாவது செய்யறீங்க! எனக்குத் தொந்தரவா இருக்கு ” என்று வசை பொழிந்து விட்டு,
தரையில் கிடந்த முத்துகள் நிறைந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனான். நன்றி சொல்லத் தெரியவில்லை அவனுக்கு.
பனிமலரும், கண்மலரும் பக்கத்து ஊர்ச் சந்தையில் நிறைய நேரம் செலவழித்தபின்பு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் இந்த முறையும் குள்ளனைச் சந்தித்தார்கள்.
தன்னெதிரே தங்கக் கட்டிகளையும், நகைகளையும், முத்துகளையும் பரத்தி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
பனிமலரையும், கண்மலரையும் பார்த்ததும் எரிச்சலுடன் கத்தத் தொடங்கினான்.
” எப்பப் பாரு, என் கண் முன்னால வந்து தொந்தரவு செய்யறீங்களே! ஓடிப் போங்க இங்கிருந்து” என்று அவன் கத்தியபோது, அந்தக் கரடி அங்கே திடீரென வந்தது. அந்தக் குள்ளனைத் தூக்கி ஆகாயத்தில் விட்டெறிந்தது. நீண்ட தொலைவில் போய்க் கீழே விழுந்தான் அவன்.
பனிமலரும், கண்மலரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்தக் கரடி, ஒரு கம்பீரமான இளைஞனாக மாறியது.
” நான் பெரிய பணக்காரன். இந்தக் குள்ளன் ஏதோ மந்திரம் போட்டு, என்னைக் கரடியாக மாத்தி வச்சிருந்தான். எல்லாம் என்னிடம் இருக்கும் பணத்தையும், தங்கம், வைரம், நவரத்தினம் பதித்த நகைகளையும் திருடுவதற்காகத் தான். உங்கள் இரண்டு பேருடைய கனிவான குணத்தாலும், என்னிடம் நீங்கள் அன்போடு பழகியதாலும் அந்தக் குள்ளனின் மந்திரம் வலுவிழந்து விட்டது. நானும் என்னுடைய பழைய தோற்றத்தைப் பெற்றேன் ” என்று சொல்லி விட்டு அவர்களுக்குத் தனது செல்வத்தின் பெரும் பங்கைப் பரிசாக அளித்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த இளைஞன் பனிமலரைத் திருமணம் செய்து கொண்டான். அவனுடைய தம்பி, கண்மலரைத் திருமணம் செய்து கொண்டான். எல்லோருமாகச் சேர்ந்து ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
பனிமலரும், கண்மலரும் எப்போதும் போல எல்லோருக்கும் உதவி செய்து கொண்டே அன்பின் பெருமையைப் பரப்பினார்கள்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.