ஓவியத்தொடர்
படம் வரைய போலாமா நண்பர்களே.
அதுக்கு முன், இதென்ன தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு யோசனையா இருக்கில்ல. அது ஒண்ணும் இல்லை. சிறு வயதில் நான் எதாவது வரைஞ்சுட்டு இருந்தா எங்க பாட்டி “என்னடா எப்ப பாத்தாலும் கிறுக்கிட்டே இருக்க” ன்னு சொல்லும். ‘கிறுக்கல்’ னு வைக்கலாம்னா அது நெறையபேர் வச்சிருக்காங்க. ‘கிறுக்கன்’ அப்படீன்னா ஏதோ திட்ற மாதிரி இருக்கு. அதான் மரியாதையா ‘கிறுக்கர்ர்ர்’. நல்லாருக்கில்ல…? ஈஈஈஈ….
படம் வரையறதுன்னா என்ன? அது ஏன் பண்ணனும்?
உலகில் மனிதன் மட்டும்தான் கலைகளின் அரசன். கலைன்னா என்னன்னு முதலில் யோசிப்போம். ஆதி மனிதன் காட்டில் வசித்தான். வேட்டையாடி பச்சையா கறி சாப்பிட்டான்(அய்ய). ஆமா, ஆனா பல ஆயிரம் வருஷம் முன்னால. இன்னும் பல ஆயிரம் வருஷம் கழிச்சு வரும் மனிதன் “என்ன….? 2023 ல எல்லாரும் சமைச்சு சாப்பிட்டாங்களா …அய்ய” என்றும் சொல்லலாம். அது வேறு கதை.
ஓடி ஆடி உழைச்சு சாப்பிட்டு அப்பாடான்னு தூங்கப்போகும்போது அவனுக்கு ஒரு வெறுமை இருந்தது. இப்பன்னா கொஞ்சம் டிவி பார்ப்போம், நெறைய செல்ஃபோன் பார்ப்போம். வரைவோம், படிப்போம். ஆனா அப்ப எதுவும் இல்லை. சொல்லப்போனா பேச மொழிகூட இல்லை. அவன் என்னதான் பண்ணுவான்?
மொழி கண்டுபிடிச்சபின்னாடி, மெதுவா பாட ஆரம்பிச்சான். எழுத்து கண்டுபிடிச்சதும் கதைகள் எழுதினான். கட்டுரைகள் வந்துச்சு. இதெல்லாம் கலைகள்னு பேர் வச்சாங்க. கலைகள் இல்லைன்னாலும் மனிதன் வாழமுடியும், ஆனால் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை பிரித்துக் காட்டுவது, நிம்மதியா இருக்க வைப்பது, யோசிக்க வைப்பதுதான் கலை. அதாவது தான் நினைப்பதை சிந்திப்பதை அடுத்த மனிதருக்கு சொல்வது. பாடலாகவோ, ஓவியமாகவோ, சினிமாவாகவோ அல்லது வாய்மொழி கதையாகவோ. ஆனால் ஆர்வம் தரும் வகையில் வடிவமைத்து சொல்வது நீடிச்சு இருக்கும். அவ்ளோதான் கலை.
இதில் ஆதி மனிதனின் முதல் கலை வடிவம்தான் ஓவியம். கிட்டத்தட்ட நாம் குழந்தை பருவத்தில் சுவரில் கிறுக்குவோமே, அதே போல மனதில் பட்டதை கிடைக்கும் இயற்கையான வண்ணங்களை வைத்து குகை சுவர்களில் வரைந்தான். பல ஆயிரம் வருடங்கள் கழித்தும், இப்போது பார்க்கும்போதும் அந்த மொழியே இல்லாத மனிதன் வரைந்து வைத்ததை வைத்து நாம் அந்தகால வாழ்வை அறியமுடியும். அற்புதமான கலைதான் இல்லையா.
வெறும் அடையாளங்கள். மாடு எனில் கொம்பு, வால் வைத்து தெரிந்துகொள்ளலாம். அழகை எல்லாம் அவர்கள் பார்க்கவில்லை. இன்னமும் சொல்லப்போனால் அழகு, அழகற்றவை என்று அப்போது எதுவும் கிடையாது. இயற்கையின் எல்லாவற்றையும் ரசித்து ரசித்து வரைந்தான் ஆதிமனிதன்.
காலம் செல்லச்செல்ல கலைகள் வளர ஆரம்பித்தது. ஓவியங்களில் பலவகையான வகைகள், தற்போது பிரஷ், வண்ணங்கள் இல்லாமலேயே டிஜிட்டலில் வரையும் நுட்பம் வரை. தேவை நமக்கு கற்பனைத்திறன் தான். சித்திரமும் கைப்பழக்கம்.
தொடரும்…
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.