இன்னிக்கு ஒரு காமெடியான கதை கேக்கலாமா?

அது ஒரு தனியார் பள்ளிக்கூடம்.

ஒன்றாம் வகுப்பு சி பிரிவு இருக்கற கிளாஸ் ரூம்ல ரத்னா மிஸ் குழந்தைங்க எல்லாருக்கும் தமிழ் வகுப்பு நடத்திட்டு இருந்தாங்க.

இரண்டு எழுத்துகள் கொண்ட சொற்கள், அதாவது, கண், மண், பசு, பால், காய், நாடு.. இது மாதிரி இரண்டு எழுத்துகள் கொண்ட எளிமையான சொற்களை கத்து குடுத்துட்டு இருந்தாங்க.

பாடவேளை முடிஞ்சி  வீட்டுக்கு போய் வீட்டுப் பாட நோட்டுல அன்னிக்கு கத்துகிட்ட சொற்களை எல்லாம் ஐந்து ஐந்து முறை எழுதிட்டு வாங்கன்னு சொல்லி வீட்டுப்பாடம் குடுத்து அனுப்பினாங்க.

வீட்டுக்கு கிளம்பறதுக்கு மணியடிச்சதும், குழந்தைங்க எல்லாம் “ஹோ!” ன்னு கத்திகிட்டு வீட்டுக்கு ஓடினாங்க.

இரண்டு நாட்கள் இதே மாதிரி நிறைய இரண்டு எழுத்துகள் கொண்ட புதுப் புது சொற்களை கத்து குடுத்தாங்க.

குழந்தைகளும் ரொம்ப ஆர்வமா கவனிச்சிட்டு இருந்தாங்க.

அவங்க அத சரியா கத்துகிட்டாங்களான்னு பாக்க ரத்னா மிஸ்,

“அடுத்த வாரம் டெஸ்ட் வைக்கப் போறேன். எல்லாரும் சனி ஞாயிறு வீட்ல நல்லா படிச்சிட்டு வாங்க..” அப்டீன்னு சொல்லி அனுப்பினாங்க.

சனி ஞாயிறு வார விடுமுறை முடிஞ்சி திங்கட்கிழமை பள்ளிக்கூடம் ஆரம்பிச்சது.

முதல் ரெண்டு வகுப்புகளா,  கணித வகுப்பும் அறிவியல் வகுப்பும் சிறப்பா நடந்து முடிஞ்சது.

அடுத்து வந்த தமிழ் வகுப்புல ரத்னா மிஸ் குழந்தைங்களுக்கு டெஸ்ட் வைக்கறதுக்காக வந்தாங்க.

“பிள்ளைகளா! எல்லாரும் டெஸ்ட் எழுத தயாரா இருக்கீங்களா?” அப்டீன்னு கேட்டாங்க.

“எஸ் மிஸ்!” அப்டீன்னு குழந்தைங்க எல்லாம் ஒரே குரல்ல கோரசா சொன்னாங்க.

“ஓகே! எல்லாரும் உங்க தமிழ் கிளாஸ் வொர்க் நோட் எடுத்துக்கோங்க..” ரத்னா மிஸ் சொன்னாங்க.

குழந்தைங்களும் அவங்கவங்களோட தமிழ் கிளாஸ் வொர்க் நோட்டை எடுத்துகிட்டாங்க.

“ஒரு புது பக்கத்துல இன்றைய தேதி எழுதுங்க..” ன்னு மிஸ் சொன்னதும் குழந்தைங்களும் அவங்க சொன்ன மாதிரியே ஒரு புது பக்கத்தில அன்றைய தேதி எழுதிட்டு தேர்வு எழுத தயாரா இருந்தாங்க.

“இப்ப நான் ஒவ்வொரு வார்த்தையா சொல்வேன்.. நீங்க அத கவனமா கேட்டு அந்த வார்த்தைய உங்க நோட்ல எழுதணும்.. இதுக்கு பேரு டிக்டேஷன்.. எங்க சொல்லுங்க.. டிக்டேஷன்..” அப்டீன்னு மிஸ் சொன்னதும் சில குழந்தைங்க சரியா சொல்ல.. பல குழந்தைங்களுக்கு அந்த ஆங்கில வார்த்தைய சரியா உச்சரிக்கத் தெரியல.

டிஸ்க்டேசன்

டிக்கேஷன்

டிரிக்ட்ரேஷன்

இப்டி விதவிதமான உச்சரிப்போட அந்த வார்த்தைய தப்பு தப்பா சொன்னாங்க.

ரத்னா மிஸ்ஸுக்கு சிரிப்பா வந்தது. ஆனா குழந்தைங்கள அவங்க ஒண்ணும் சொல்லல.

“சரி! சரி! அத விடுங்க.. நாம டெஸ்டை பாக்கலாம்.. எல்லாரும் நா சொல்றத நல்லா கவனிச்சி எழுதுங்க..” அப்டீன்னு சொல்லிட்டு,  திருத்தறதுக்காக எடுத்துட்டு வந்த ஆறாம் வகுப்பு தமிழ் கிளாஸ் வொர்க் நோட்டுகளை டேபிள் மேல வெச்சாங்க.

முதல் நோட்டை பிரிச்சி வெச்சிகிட்டு,

“பிள்ளைகளா! எல்லாம் பாக்காம எழுதுங்க.. சரியா?! இல்லன்னா பனீஷ்மென்ட்தான்..” அப்டீன்னு சொல்லி மிரட்டிட்டு முதல் வார்த்தைய சத்தமா சொன்னாங்க.

“மண்! எழுதுங்க! மறுபடியும் சொல்றேன்! மண்!” சத்தமா சொல்லிகிட்டே ஆறாம் வகுப்பு நோட்டை திருத்த ஆரம்பிச்சாங்க.

Paakama
படம்: அப்புசிவா

சில நிமிடங்கள் இடைவெளி விட்டு அடுத்த வார்த்தைய சொன்னாங்க.

“எழுதியாச்சா? அடுத்த வார்த்தை சொல்லட்டுமா? அடுத்த வார்த்தை, பசு!”

“எல்லாரும் பாக்காம எழுதணும்.. இல்லன்னா மிஸ் கடுமையா பனீஷ்மென்ட் தருவேன்..” அப்டீன்னு திரும்பவும் சொல்லி மிரட்டிட்டு,

“பால்!”

மூணாவது வார்த்தை சொல்லிட்டே நிமிர்ந்து பார்த்தாங்க.

எல்லா குழந்தைகளும் தன்னோட கிளாஸ் வொர்க் நோட்டை பாக்காம வேற எங்கியோ பாத்துகிட்டே எழுதிட்டு இருந்தாங்க.

“ஹே! எல்லாரும் என்ன பண்றீங்க? ஏன் உங்க நோட்ட பாக்காம வேற எங்கியோ பாத்துட்டு எழுதறீங்க?” அப்டீன்னு குழப்பத்தோட மிஸ் அவங்கள பாத்து கேட்டாங்க.

பிள்ளைங்க எல்லாம் திருதிருன்னு முழுச்சாங்க. ஒரு சுட்டிப் பொண்ணு கொஞ்சம் தைரியத்த வர வெச்சிகிட்டு,

“மிஸ்! நீங்கதானே மிஸ் பாக்காம எழுதுங்கன்னு சொன்னீங்க?!” அப்டீன்னு கேட்டா.

ரத்னா மிஸ்ஸுக்கு பயங்கரமா சிரிப்பு வந்துடுச்சு. வாய திறந்து ஹா ஹா ஹான்னு   சிரிச்சாங்க. கொஞ்ச நேரம் சிரிச்சிட்டு, ஒரு வழியா தன் சிரிப்பை கட்டுப்படுத்திகிட்டு,

“அட மக்கு பசங்களா.. பாக்காம எழுதுங்கன்னா உங்க பக்கத்தில உக்கார்ந்திருக்கறவங்க நோட்டை பாக்காம எழுதுங்க.. நீங்க என்ன படிச்சிட்டு வந்திருக்கீங்களோ அத வெச்சி ஞாபகம் இருக்கறத எழுதுங்கன்னு அர்த்தம்.. அதாவது பக்கத்தில பாத்து காப்பி அடிக்காதீங்கன்னு அர்த்தம்.. புரியுதா?!” அப்டீன்னு கேட்டு, எல்லாரையும் அவங்கவங்க நோட்டை மட்டும் பார்த்து எழுதுங்கன்னு சொல்லிட்டு திரும்பவும் டிக்டேஷன் குடுக்க ஆரம்பிச்சாங்க.

என்ன குழந்தைகளே! பாக்காம எழுதுங்கன்னு சொன்னா என்னன்னு உங்களுக்கு தெரியும்தானே?

அடுத்த இதழ்ல இதே மாதிரி வேற ஒரு சுவாரசியமான சிரிப்பான கதையோட வரேன்.

அது வரைக்கும் சமத்தா இருக்கணும்! சரியா?

டாட்டா! பை! பை!

👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments