நன்னன்குடி நடத்திய சிறுவர் கதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர் கதை.

.

தமிழரசன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தார். இருப்பு கொள்ளவில்லை.

” கொஞ்ச நேரம் நடக்கறதை நிறுத்திட்டு நிம்மதியா உக்காருங்களேன். இதோ வந்துருவா குழந்தை” என்று அவருடைய மனைவி குமுதா சொன்னாலும் அவருடைய மனம் ஏற்கவில்லை. அவர்களுடைய செல்லப் பேத்தியான வருணிகா, தனது தோழனுடன் விடுமுறை நாட்களைக் கழிக்க, பாண்டிச்சேரிக்கு வந்து கொண்டிருக்கிறாள்.

வருணிகா, அவர்களுடைய மகள் வயிற்றுப் பேத்தி. தமிழரசன், குமுதாவின் ஒரே மகள் மருத்துவராகப் பணிபுரிகிறாள்.. அவளுடைய கணவரும் மருத்துவர். ஒரே குழந்தையான வருணிகாவுக்குக் கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. எல்லோருமாகத் தான் வருவதாகத் திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் இறுதி நேரத்தில் மகளுக்கும், மருமகனுக்கும் முக்கியமான வேலைகள் வந்துவிட, தங்களுடைய மகிழுந்திலேயே நன்றாகத் தெரிந்த ஓட்டுநருடன் அனுப்புகிறார்கள்.

” தாத்தா, தாத்தா, என் கூட எனக்குத் தெரிஞ்ச அருணையும் கூட்டிட்டு வரவா? பாவம் அவனுக்குத் தாத்தா, பாட்டி இல்லையாம் “

” கூட்டிட்டு வாடா செல்லம். எத்தனை பேரை வேணாலும் கூட்டிட்டு வா. எனக்கும் பாட்டிக்கும் ஜாலியாத் தான் இருக்கும். சீக்கிரமாக் கிளம்பி வா” என்று சொல்லி இருந்தார். காலையிலேயே சென்னையில் இருந்து குழந்தைகள் கிளம்பி விட்டார்கள். வரும் நேரமும் நெருங்கிவிட்டது. வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும், தாத்தா, பாட்டி இரண்டு பேருமே வாசலுக்கு விரைந்தார்கள்.

” தாத்தா, பாட்டி” என்று கத்திக் கொண்டே இறங்கி ஓடி வந்தாள் ஒன்பது வயது நிரம்பிய அவர்கள் வீட்டு தேவதை. கூடவே வருணிகாவின் நண்பன் அருணும் தயங்கியபடி பின்னால் வந்தான். ஓட்டுநர் முருகன் சிரித்த முகத்துடன் அவர்களுடைய பயணப்பைகளை உள்ளே கொண்டு வந்து வைத்தான்.

” ஐயா, மறக்காமல் மேடத்துக்குத் தகவல் கொடுத்துடுங்க. பசங்க நேரத்துக்கு வந்துட்டாங்கன்னு சொல்லிடுங்க. கவலையோடு இருப்பாங்க அவங்க. நான் கெளம்பறேன்யா” என்றான் முருகன்.

” இருப்பா, என்ன அவசரம்? ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ முருகா. சமையல் தயாரா இருக்கு”

” இல்லைய்யா, பசியே இல்லை. இப்பவே கெளம்பிட்டா சாயந்திரம் இருட்டறதுக்குள்ள போய்ச் சேந்துடுவேன். அடுத்த தடவை வரும்போது சாப்பிட்டுக்கறேனே? “

” அப்படியா, உடனே கெளம்பணுமா? குமுதா நம்ப முருகனுக்கு வழியில் சாப்பிட ஏதாவது கட்டிக் கொண்டு வரயா? வழியில் பசிக்கும் போது சாப்பிட்டுக்கட்டும்” என்று மனைவியிடம் சொல்ல, அவரும் உடனே எடுத்து வந்தார்.

முருகனால் தமிழரசனின் அன்புக் கட்டளையை மீள முடியவில்லை. நன்றி சொல்லி விட்டு சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

குழந்தைகள் இரண்டு பேரும் தரையில் உட்கார்ந்து வாழை இலையில் பாட்டி சமைத்து வைத்திருந்த உணவை இரசித்து உண்டார்கள்.

” தாத்தா, இன்னைக்கு சாயந்திரம் எங்கே போகப் போறோம்? கடற்கரைக்குப் போகலாமா? “

” சென்னையில் இல்லாத கடற்கரையா வருணி? “

” இல்லை தாத்தா, எத்தனை தடவை பாத்தாலும் எனக்கு அலுக்காது. போலாம், போலாம்” என்று குதித்தாள் வருணிகா.

தமிழரசன், குமுதா வசிப்பது பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமத்தில். கிராமத்தின் அழகு குறையாமல், ஆனால் அதே சமயம் நகரத்து வசதிகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வரும் ஊர் என்று சொல்லலாம். அவர்கள் வசிப்பது தனி வீடு.

சாப்பிட்டு முடித்ததும் வருணிகா, அருணையும் இழுத்துக் கொண்டு பின்பக்கத் தோட்டத்துக்கு விரைந்தாள்.

” அருண், இதோ பாரு, இது தான் பவழமல்லி மரம். ராத்திரி பூ மலரும் போது கமகமன்னு வாசனை வரும். காலையில் அத்தனை பூக்களும் தரையில் உதிர்ந்து பூக்கம்பளம் மாதிரி இருக்கும். இது பாத்தயா? இது அருநெல்லிக் காய். இது மாங்காய். தென்னை மரம் நீ ஏற்கனவே பாத்துருப்ப. இது வெத்தலைக் கொடி. தாத்தா, பாட்டிக்கு இந்தச் செடி, கொடி, மரங்கள் ரொம்பப் பிடிக்கும். இந்தக் கிணத்தடியில் உக்காந்து நாமும் செடிகளோட பேசலாம். பாட்டுப் பாடலாம்”

” என்ன கதை விடறயா? நாம பேசறதைக் கேக்கச் செடிக்குக் காதா இருக்கு? “

” காது இருக்கோ இல்லையோ? நல்ல நேர்மறையான விஷயங்களைப் பேசும் போது, பாட்டுக் கேட்கும் போதெல்லாம் செடிகளோட வளர்ச்சி நல்லா இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லறாங்களாம். ஆனால் தாத்தா என்ன சொல்வார்னா, ‘அதெல்லாம் உண்மையோ இல்லையோ தெரியாது. நம்ம மனசு இப்படிப் பேசும் போது உற்சாகமடையும். மனசுல இருக்கற சோர்வு போயி இலேசாயிடும்’னு சொல்லுவாரு. அதுக்காகவாவது நாம செய்யலாமே? “

” நீ சொல்லறதும் சரி தான். நானும் இப்போது இருந்தே பேசறேன். நாமும் இயற்கையோட நேரடியாத் தொடர்பு கொள்ளலாமே ? “

” ஒவ்வொரு வருடமும் தாத்தா எங்களோட பிறந்தநாளை எப்படிக் கொண்டாடறாரு தெரியுமா? “

” எப்படி? உனக்குப் புதுசா என்ன பரிசு  வாங்கித் தருவாரு? “

” மரக்கன்னுகளை வாங்கி அங்கங்கே நட்டு வைக்கறாரு. ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு தடவை போயித் தண்ணி ஊத்திட்டு வராரு. மரங்கள் நிறைய இருந்தால் தான் சுற்றுப்புறம் நல்லா இருக்குமாம். பிராணவாயு சுத்தமாக் கிடைக்குமாம். மழை நல்லாப் பெய்யுமாம்.”

vaanavil devathai
படம்: அப்புசிவா

” ஆமாம், நாம கூட மழை எப்படி வருதுன்னு அறிவியல் பாடத்துல படிச்சோமே? “

குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்து நிறைய நேரம் அரட்டை அடித்துவிட்டு உள்ளே வந்தார்கள். மாலையில் பாட்டி, தானே வீட்டில் தயாரித்த பலகாரங்களையும், பசும்பாலையும் கொடுத்தார். பாலைக் குடித்து விட்டு எல்லோருமாகக் கடற்கரைக்குக் கிளம்பினார்கள். பாட்டி வரவில்லை என்று சொல்லி விட, வருணிகாவும் அருணும் மட்டும் தாத்தாவுடன் கிளம்பினார்கள்.

” மழை வர மாதிரி இருக்கு. ரொம்ப நேரம் விளையாடாமல் சீக்கிரம் வந்திருங்க” என்று கிளம்பும் போது பாட்டி சொன்னார்.

அவர்கள் வீட்டில் இருந்து கடற்கரை நடந்து போகும் தூரம் தான். அலைகளின் ஆர்ப்பரிப்பு வீட்டின் பின்புறம் நன்றாகவே கேட்கும். போகும் வழியில் தாத்தா அவர்களுக்கு நூலகத்தைக் காண்பித்தார்.

” நாளைக்குக் காலையில் இங்கே வரலாம். சிறுவர் நூல்கள் என்ன இருக்குன்னு பாத்து தினம் ஒவ்வொண்ணாப் படிக்கணும் நீங்க ரெண்டு பேரும். “

” ஐய்யே, பள்ளி விடுமுறையில் யாராவது படிப்பாங்களா? நான்லாம் படிக்க மாட்டேன். நாள் பூரா விளையாடணும். ஜாலியா இருக்கணும் ” என்றாள் வருணிகா.

” அப்படிச் சொல்லக் கூடாது. பாடப் புத்தகங்கள் படிக்கற மாதிரியே மத்த புத்தகங்களையும் அப்பப்பப் படிச்சா நிறையப் புதிய தகவல்கள் கத்துக்கலாம். பிறமொழிக் கதைகள் படிக்கும் போது, மத்த நாடுகளைப் பத்தி, அவங்க வாழ்க்கை முறை, அவங்க பழக்கவழக்கங்கள், பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் தெரிஞ்சுக்கலாம். கதைகளோடச் சேந்து எவ்வளவு தகவல்கள் தெரிஞ்சுக்கலாம்? இந்த வாய்ப்பை நழுவ விடலாமா? அதுவும் தேர்வுன்னு எதுவும் இல்லாமல் சும்மாப் படிக்கறதும் ஜாலி தானே? புத்தக வாசிப்பு இந்த வயசில வந்தால் தான் உங்க வளர்ச்சி நல்லா இருக்கும். புத்தகங்கள் தான் நமக்கு நல்ல நண்பர்கள். புதுப்புது உலகங்களை நமக்கு அறிமுகம் செஞ்சு வக்கறது புத்தகங்கள் தானே? “

” சரி தாத்தா, நாளை காலையில் இருந்து கண்டிப்பா முயற்சி பண்ணறோம்” என்ற வருணிகா, உற்சாகத்துடன் கத்தத் தொடங்கினாள்.

” ஹைய்யா, ஆகாசத்துல வானவில் தெரியுதே! எவ்வளவு அழகா இருக்கு பாரு அருண்” என்று அருணுக்கும் காண்பிக்க, அருணும் மகிழ்ச்சி அடைந்தான்.

” வானவில் பத்தி என்ன தெரியும் சொல்லுங்க பாக்கலாம். “

” நான் ஒரு கதை கேட்டிருக்கேன். ஒரு சின்னப் பொண்ணு கடவுளைப் பாக்கக் கிளம்பினாளாம். ஆகாயத்தில் எப்படி ஏறிப் போறதுன்னு அவளுக்குத் தெரியலையாம். ஆகாசத்துல தானே ஆண்டவன் இருக்கார்? அவளோட அம்மாவுக்கு உடம்பு

சரியில்லையாம். அவங்க ரொம்ப ஏழையாம். மருந்து வாங்கக் கூடப் பணம் இல்லையாம். அதுக்குத் தான் கடவுளைப் பாத்து எங்கம்மா உடம்பை சரி பண்ணுங்கன்னு  வரம் கேக்கப் போனாளாம். நடந்து நடந்து கால் வலிச்சுருச்சாம்.

அழுதுட்டே நின்னபோது ஒரு தேவதை வந்து ஒரு வழியைக் காமிச்சுச்சாம். பல நிறங்களில் அழகான பாதை. அது வழியா அவ சந்தோஷமா ஓடிப்போனபோது அந்தப் பாதை முடியற இடத்துல கடவுளோட  வீடு இருந்துச்சாம். அவளும் கடவுளிடம் பேசித் தான் ஆசைப்பட்டபடி வரம் வாங்கிட்டாளாம். சிரிச்ச முகத்தோட திரும்பி வந்துட்டாளாம். அவங்க அம்மா உடம்பும் சரியாகி அதுக்கப்புறம் அவங்க வீட்டுல எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்களாம். அதுக்கப்புறம் அந்த தேவதையும் அந்தப் பாதையை அப்பப்ப உலகத்தில இருக்கற மனுஷங்களுக்குக் காட்டுமாம். அந்தப் பாதைக்குத் தான் வானவில்னு பேர் வச்சாங்களாம். எப்படி இருக்கு இந்தக் கதை? தாத்தா ” என்றாள் வருணிகா.

” கதை கேக்க நல்லாத் தான் இருக்கு. ஆனால் முழுவதும் கற்பனை. சின்னச் சின்னக் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த இந்த மாதிரிக் கதைகளைச் சொல்லறாங்க. ஆனால், வானவில் எப்படி உருவாகுதுன்னு அறிவியல் பூர்வமாப் பாக்கணும் இல்லையா? காரணத்தைத் தெரிஞ்சுக்கணுமே? ” என்றார் தாத்தா.

” நீங்களே எங்களுக்குப் புரியற மாதிரி சொல்லுங்க தாத்தா” என்றான் அருண்.

” சொல்லறேன். மழை நீர்த் துளிகள் வழியா சூரியனின் கதிர்கள் ஊடுருவி வரும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு அதில் பல வர்ணங்கள் உருவாகுது. ஒளிக் கதிர்கள் ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்தில் புகும்போது மாற்றங்கள் உருவாகும். இப்போ தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஒரு குச்சியை வச்சா, அது வளைஞ்ச மாதிரித் தெரியும். அதுக்கு ஒளி முறிவுன்னு பேரு. அதே மாதிரி இந்த வானவில் உருவாறதுக்கு முழு அக ஒளி எதிரொளிப்புன்னு பேரு. இதில் வெண்மையான ஒளிக்கதிர் தான் ஒளி விலகல்னால ஏழு நிறங்களாப் பிரியுது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும், ஊதா நிறம் மிக அதிகமான விலகலையும் காட்டறதால அந்த வரிசையில் வானவில் நிறங்கள் உருவாகின்றன.

விப்ஜியார்னு( VIBGYOR) ஆங்கிலத்தில் சொல்லறோம். அதாவது வயலட், இன்டிகோ, ப்ளூ, க்ரீன், யெல்லோ, ஆரஞ்சு, ரெட் என்ற ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்துகளை வச்சு இந்தச் சொல்லை உருவாக்கினாங்க தமிழில் பாத்தா ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் நிறங்கள் வானவில்லில் தெரியுது இல்லையா? “

” ஆமாம் தாத்தா, இது தான் காரணமா? இப்போ நல்லாப் புரியுது” என்றாள் வருணிகா.

” அப்புறம் வானவில்லில் வகைகள் உண்டு. முதல் வகையில் ஊதா வெளிப் பக்கமாகவும், சிவப்பு உட்பக்கமாகவும் தெரியும். அதுவே மழைநீரில் ஒளிக்கதிர் இரண்டு முறை சிதறினால் சிவப்பு வெளிப் பக்கமாகவும், ஊதா உட்பக்கமாகவும் மாறித் தெரியும். அடுத்த தடவை வானவில்லைப் பாக்கும் போது இதை கவனிக்கறீங்களா? “

” சரி தாத்தா “

” அப்புறம் காலை, மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர்திசையில் வானவில் தோன்றும். சில அபூர்வமான சமயங்களில் சில நிறங்கள் இல்லாமல் குறைந்த நிறங்களிலும் வானவில் உருவாகலாம். அதிசயமா ரெட்டை வானவில் கூட உலகத்தில் சில இடங்களில் பாத்துருக்காங்க. வானவில் என்னவோ முழு வட்டமாத் தான் உருவாகும். ஆனா நம்ம கண்ணுக்குப் பாதி வட்டம் தான் தெரியும். நம்ம வீட்டிலேயே வானவில்லை உருவாக்கலாம் தெரியுமா? ” என்று தாத்தா கேட்டதும், ” செய்யலாம் தாத்தா. நாளைக்கே செய்யலாம்” என்று குழந்தைகள் குதித்தார்கள்.

” ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் நிரப்பி, ஜன்னலில் சூரிய ஒளி படற இடமாப் பாத்துக் காலையில் வைக்கணும். டம்ளருக்கு எதிரே ஒரு வெள்ளத்தாள் வச்சா, சூரிய ஒளி ஊடுருவி அழகா வானவில் மாதிரியான பிம்பம் வெள்ளைத் தாளில் தெரியும் “

” நாளைக்கே செஞ்சு பாக்கலாம்” என்று அவர்கள் சொல்லும் போது கடற்கரையை அடைந்திருந்தார்கள். குழந்தைகளை அலைகளுடன் விளையாட அனுப்பி விட்டு, தமிழரசன், கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினார். தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் கொண்டு வந்த காகிதம், நெகிழிப் பைகள் எல்லாவற்றையும் பொறுக்கினார்.

” என்ன தாத்தா செய்யறீங்க? “

” கடற்கரையை நாம சுத்தமா வைக்கணுமே? அப்புறம் இந்தக் குப்பைகளை நீர்வாழ் உயிரினங்கள் சாப்பிடும் போது அவைகளுக்கு நல்லதில்லைன்னு நமக்குத் தான் தெரியுமே? ” என்று தாத்தா சொன்னதும்,  அங்கேயிருந்த பல குழந்தைகளும் குப்பைகளைப் பொறுக்கி அகற்றியதுடன், இனிமேல் குப்பைகளைக் கடற்கரையில் எறிய மாட்டோம் என்று உறுதி பூண்டார்கள்.

இரவு வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் இரண்டு பேருக்கும் நல்ல பசி. பாட்டி பாசத்துடன் சமைத்து வைத்திருந்த உணவை உண்டபின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து காற்று வாங்கினார்கள்.

இரண்டு பேருடைய பெற்றோர்களிடம் இருந்தும் அழைப்பு வந்தது.

” வருணிகா, என்ன பண்ணறே ? நல்லாப் பொழுது போகுதா? ” என்றாள் வருணிகாவின் அம்மா.

” நேரம் போறதே தெரியலைம்மா. ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கு”

” அப்புறம் நீ உன்னோட மொபைலை மறந்து வச்சுட்டுப் போயிட்டே. அதை வச்சு விளையாடுவயே அடிக்கடி? யார் கிட்டயாவது கொடுத்து விடவா? “என்று கேட்டார் அருணின் அப்பா.

” வேண்டவே வேண்டாம்பா. அது இல்லாமயே இங்கே நல்லா இருக்கு. எனக்கு அதை மறந்துட்டு வந்ததென்னவோ நீங்க சொல்லற வரைக்கும் ஞாபகம் வரவேயில்லை” என்று அவன் சொல்லி விட்டான். பெற்றோருக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம்.

” அப்பா, குழந்தைங்க ரெண்டு பேரும் உங்களைத் தொந்தரவு பண்ணறாங்களா? நாங்க விடுமுறை கிடைக்கும் போது வந்தாப் போதுமா? கஷ்டமா இருந்தா நீங்க ரெண்டு பேரும் குழந்தைங்களோட இங்கே வந்திருங்க. வண்டி அனுப்பறோம்” என்றாள் வருணிகாவின் அம்மா.

” வேண்டாம்மா. எங்களுக்கும் குழந்தைகளோட நல்லாப் பொழுது போகுது. எங்களோட தினசரி வாழ்க்கை வெண்மை நிறத்தில் வெறுமையா இருந்தது. இப்போ வண்ணமயமா மாறிடுச்சு. எங்களோட ஆகாசத்துலயும் ரெட்டை வானவில் இப்பத் தெரியுது. நிறப்பிரிகை இல்லை இது மனதின் உணர்ச்சிப் பிரிகை” என்று தமிழரசன் மலர்ந்த முகத்துடன் சொன்னார்.

” என்னப்பா சொல்லறீங்க? எனக்கு ஒண்ணும் புரியலை. நாங்க நேரில் வரும் போது விளக்கமாச் சொல்லுங்க” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மகள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments