ஒரு சின்ன ஊரில், மீரா , மீரான்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். அம்மா, அப்பாவுக்குச் செல்லப் பொண்ணு. வீட்டில் மீரா, மீராவோட தம்பி நகுலன், அப்புறம் மீராவோட அம்மா, அப்பா தவிர அவளோட தாத்தா, பாட்டி அவ்வளவு பேரும் இருந்தார்கள். அதுனால வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் வந்து போவதால் , சமையலறையில் தினமும் விதவிதமான சாப்பாடு நிறைய சமைத்துப் பரிமாறுவாங்க. சாப்பாட்டு அறையிலும் தினமும் கூட்டம் இருக்கும். எப்போது பார்த்தாலும் யாராவது உட்கார்ந்து சாப்பிட்டுக் கிட்டே இருப்பாங்க. அதுனாலயோ என்னவோ மீராவுக்கு, சாப்பாடு சாப்பிடவே பிடிக்காது. ஒரு வேளை கூடத் தானாகவே வந்து, ” அம்மா, எனக்குப் பசிக்குது” என்று சொல்லிக் கேட்டு வாங்கி சாப்பிட மாட்டாள்.

சாப்பிடாமல் இருக்க முடியாதே? வேறு என்ன தான் சாப்பிடுவாள் மீரா? மிட்டாய் தான். எப்போது பார்த்தாலும் டாஃபி, சாக்கலேட், பிஸ்கட், குக்கீஸ், இனிப்பு வகைகள், ஜுஸ் மற்றும் பழங்கள் எப்போதாவது. அம்மா திட்டினால் அப்பா அவளுடைய உதவிக்கு வருவார். அப்பா திட்டினால் அம்மா, இரண்டு பேரும் சேர்ந்து திட்டினால் தாத்தாவோ, பாட்டியோ வந்து அவளை யாரும் திட்டக் கூடாது என்று சொல்வார்கள். எல்லோருமாகச் சேர்ந்து செல்லம் கொடுத்துக் கொடுத்து, மீராவை நன்றாகக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருநதார்கள்.

கஷ்டப்பட்டு மீராவின் அம்மா அவளை, இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட வைத்தால் அவற்றைக் கூட வெல்லமோ, ஜீனியோ தொட்டுத் தான் சாப்பிடுவாள்.

” மிட்டாய்ப் பொண்ணு, மிட்டாய்ப் பொண்ணு ” என்று அவளுடைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கேலி செய்தாலும் மீரா கண்டுகொள்ள மாட்டாள். பெருமையாக நினைத்துக் கொள்வாள்.

ஒரு நாள் காலையில் இருந்து வழக்கம் போல, சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் என்று நாள் முழுவதும் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போனாள் மீரா. தூக்கத்தின் நடுவில் திடீரென்று கண் விழித்தாள் மீரா. உடம்பில் ஏதோ சுருக், சுருக்கென்று கடிப்பது போல இருந்தது.

கண் விழித்துப் பார்த்த மீராவால் நகரவே முடியவில்லை. ஆனால் அவளால் பார்க்க முடிந்தது. அவளைச் சுற்றியிருந்தோர் பேசுவதைக் கேட்க முடிந்தது. எறும்புகள் அவள் உடம்பில் ஊறியபடி அவளை நன்றாகக் கடித்துக் கொண்டிருந்தன. எறும்புகள் தங்களுக்குள் பேசிக் கொண்டது கூட அவளுக்குக் கேட்டது.

” இந்தப் பொண்ணு நிறைய இனிப்பாச் சாப்பிட்டிருக்கா போல இருக்கு. உடம்பே இப்போ இனிப்பு மிட்டாயா மாறிடுச்சு. நமக்கென்ன ஜாலி தான்? தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்ச்சுட்டுப் போலாம்” என்று பேசியபடி, அந்த எறும்புகள் அவளை மாறி மாறிக் கடித்துக் கொண்டே இருந்தன.

மீராவுக்கு உடம்பெல்லாம் வலித்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், கத்தவும் முடியவில்லை. வாயைத் திறந்து பேசவும் முடியவில்லை. அழுதுகொண்டே இருந்தாள். மீரா அழுவது கூட யாருக்கும் தெரியவில்லை.

அடுத்த நாள் காலையில் மீராவின் அம்மா, ” மீரா, மீரா” என்று கூப்பிட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.

” என்ன ஆச்சு? மீராவைக் காணோமே? மீரா படுத்திருந்த இடத்தில் ஏதோ பொம்மை இல்லை இருக்கு” என்று பயந்து போய், எல்லோரையும் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்தாள்.

” என்ன பொம்மை இது? கல்கண்டு வச்சுப் பண்ணின மாதிரி இருக்கே? தொட்டால் பிசுக், பிசுக்குன்னு ஒட்டுது. எறும்பு வேற மொய்க்குது. இதை இங்கயே விட்டு வச்சா, ரூம் பூராப் பூச்சிகளும், எறும்பும் நிறைஞ்சிடும். வாசலில் கொண்டு போய் வைக்கலாம் ” என்று தாத்தா சொன்னார்.

” ஐயோ, வேண்டாம் தாத்தா. நான் தான் உங்க மீரா. யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்” என்று மீரா கத்தியது யார் காதிலும் விழவில்லை.

மீராவைத் தூக்கிக் கொண்டு போய் வாசல் திண்ணையில் விட்டார்கள். விரல்கள் லாலிபாப்களாக நீட்டிக் கொண்டிருந்தன. கை, கால்களில் விதவிதமான பிஸ்கட், குக்கி வகைகள். தலையில், காதுகளில், கண்களில் எல்லாம் சாக்கலேட்டுகள். தெருவில் இருந்த குழந்தைகள் எல்லோரும் அவற்றைப் பிய்த்துத் தின்பதற்காக, மீராவின் அருகில் சந்தோஷமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

” ஐயோ, வேண்டாம், வேண்டாம். நான் தான் உங்க ஃப்ரண்ட் மீரா. என் கை, காலையெல்லாம் பிய்க்காதீங்க. எனக்கு வலிக்கும் ” என்று கத்திக் கத்தி அழுதாள். அவள் கத்தினதோ, அழுததோ யாருக்கும் கேட்கவேயில்லை.

” இந்த பொம்மையைக் கொண்டு போய் ஊர்க் கோடியில் இருக்கற கெணத்தில போட்டுரலாம். கிணத்துத் தண்ணியே இனிப்பாயிடும் ” என்று ஒரு பெரியவர் சொன்னார்.

” வேண்டாம், வேண்டாம், பக்கத்தில் யாரும் வராதீங்க. எனக்கு ரொம்ப வலிக்குது” என்று மீரா அலறிக் கொண்டிருந்தபோது, அம்மா அறைக்குள் வந்து மீராவை எழுப்பினாள்.

” என்ன மீரா? என்ன ஆச்சு? எங்கே வலிக்குது? எதுக்கு அழறே? சீக்கிரம் எழுந்திரு. ஸ்கூலுக்கு டயமாச்சு” என்று எழுப்பினாள்.

சட்டென்று கண் விழித்த மீராவுக்கு, இவ்வளவு நேரம் அவள் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த விஷயம் புரிந்தது. மலங்க மலங்க விழித்தவளை அம்மா போட்டு உலுக்கினாள்.

” என்ன ஆச்சு மீரா? உடம்பு சரியில்லையா? ” என்று கேட்டாள்.

” இல்லைம்மா. ஏதோ கனவு வந்தது. அதுவும் பயங்கரமான கனவு” என்று சொல்லி விட்டு எழுந்து குளியலறைக்குள் சென்ற மீராவை அம்மா ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

அன்றிலிருந்து மீரா முழுவதும் மாறிப் போனாள். மிட்டாய்களை மட்டும் சாப்பிட்ட மீரா மாறி, எல்லா உணவையும் விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments