இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் மொய்லி. வீட்டில் யாரும் அவளை கவனிப்பதாகத் தெரியவில்லை. அப்பா ஒரு புறம் படுக்கைகளைக் கட்டிக் கொண்டிருந்தார். அம்மா சமையல் பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். வழக்கமா மொய்லியைக் கொஞ்சும் ஜோ அக்கா கூட இன்று அவளைக் கவனிக்கவில்லை.

எப்பொழுதும் மொய்லிக்காக அதிக நேரம் ஒதுக்குவாள் ஜோ. காலையில் எழுந்ததும் மொய்லி முகத்தில்தான் விழிக்கவேண்டும் ஜோவுக்கு. அதே மாதிரிதான் மொய்லிக்கும். எழுந்ததும் அப்படியே பதுங்கிக் கொண்டு ஜோவின் அருகில் சென்றுவிடுவாள். அவளது முகத்தை உரசுவாள். அப்பொழுது ஜோவின் கைகள் மொய்லியின் காதுகளைப் பிடித்து இழுக்க, ரெண்டு பேரும் கட்டியணைத்துக் கொள்வார்கள்.

ஆனால் இன்றைக்கு அப்படியெல்லாம் நடக்கவில்லை. இன்று மட்டுமல்ல ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறார்கள். எதுக்கு இவ்வளவு பிஸியா இருக்காங்க எல்லோரும். மொய்லிக்குப் புரியவில்லை. என்னை ஒரு ஆளா யாருமே நினைக்கலை. நானும் அவங்களை மாதிரியிருந்திருந்தா இப்படி கண்டுக்காம இருப்பாங்களா? கோபம் கோபமா வந்துச்சு மொய்லிக்கு. ச்சே எல்லாத்தையும் விட சின்னவளா பிறந்தது என் தப்பா.

Moili
படம்: அப்புசிவா

படக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டின் ஜன்னல் ஓரமா போய் நின்று கொண்டாள். அப்பொழுதுதான் வீட்டிற்குள் நடப்பதையும், வெளியில் செல்லும் வண்டிகளையும் பார்க்க முடியும். வழக்கமா கோபம் வந்தா இப்படித்தான் செய்வாள்.

லேசாக ஜன்னல் வழியாகப் பார்த்தாள். ஜோ அக்கா கூட படிக்கிற அக்காக்கள் எல்லாம் பள்ளிக்குக் கிளம்பிச் செல்வது தெரிந்தது. ஏன் ஜோ அக்கா இன்னைக்கு பள்ளிக்குப் போகலை. இப்படி அடிக்கடி மட்டம் போடுறதே இவளுக்கு வேலையா போச்சு.

தன்னைக் கொஞ்சாத ஜோ மீது குறை சொல்லணும்னு தோன்றியது மொய்லிக்கு.

“ம்ம் அப்படி மட்டம் அடிச்சுட்டு ஜோ வீட்ல இருக்கும்போது எப்பவும் உன்கூடத்தானே விளையாடுவா அதை மறந்துட்டியே என் குட்டி மொய்லி” அவளையே அவள் திட்டிக் கொண்டாள்.

அக்காவைப் பற்றி நினைத்ததும் மெதுவாக நடந்து ஜோவின் அருகில் சென்றாள்.

மொய்லி வருவதை ஜோ எப்படி அறிந்து கொண்டாளோ தெரியவில்லை “மொய்லி அக்காவுக்கு வேலையிருக்கு. கிட்டே வந்து தொல்லை செய்யாதே. ஜன்னல்கிட்டே போய் நின்னு வேடிக்கைப் பாரு”

‘ஆமா… ஒரு வருஷமா இதே ஜன்னல்ல வேடிக்கைப் பார்த்துப் பார்த்து போரடிச்சுடுச்சு. இது யாருக்குப் புரியுது’ மனதிற்குள் பொருமிக் கொண்டாள் மொய்லி.

இந்த வீட்டுக்கு வந்தப்போ மொய்லிக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நாலாவது மாடியில வீடு. அங்கிருந்து பார்த்தா வீட்டைச் சுற்றி மலைகளா தெரிஞ்சது. மலைகள் தூரமா இருந்தாலும் பார்க்கிறதுக்கு அவ்வளவு பிடிச்சது.

அங்கதான் ராத்திரியானா மழை பெய்யும். அப்படியொரு பேய் மழை. சட சடவென கொட்டுற மழையில திடீரென குளிரெடுக்கும்.

தனியா படுக்க வைச்சிருந்தாலும் மெதுவா ஜோ இருக்குமிடத்திற்கு நகர்ந்து போய் படுத்துக்குவாள் மொய்லி. குளிருக்கு அடக்கமா இருக்கும்.

நாலாவது மாடியில இருந்து தாவித் தாவி கீழே இறங்குவது மொய்லிக்கு ரொம்பப் பிடிக்கும். கூடவே ஜோ அக்காவும் வருகிறாளா என திரும்பித் திரும்பிப் பார்த்து நடப்பது இன்னும் கூட உற்சாகத்தைக் கொடுக்கும்.

வீட்டிற்குக் கீழேப் போனால் ஜோ அக்கா மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். ஒவ்வொருவரும் மொய்லியைக் கண்டதும் உற்சாகத்தில் குதிப்பார்கள். சின்ன ஜடையுடன் வெள்ளை வெளேரென பனிக் கட்டி மாதிரி இருக்கும் மொய்லியை அவர்கள் எல்லாம் தூக்கி விளையாடுவார்கள்.

மொய்லியும் அவர்களையே சுற்றிக் கொண்டும் எகிறிக் குதித்தும் விளையாடுவாள்.

என்னை யாருக்காவது பிடிக்காமப் போகுமா?  சிலநேரம் தன்னைப் பற்றி பெருமையாகக் கூட நினைத்துக் கொள்வாள் மொய்லி.

தன்னை ஆசையாகத் தூக்குகிறவர்களிடம் எல்லாம் செல்வாள் மொய்லி  ஆனால் தூக்கிக் கொஞ்சுற எல்லோரும் வேற வேற மொழியில பேசுவாங்க  அது மட்டும்தான் மொய்லிக்குப் புரியாது.

அன்புக்கு மொழி அவசியமில்லையே. அதனால மொய்லியும்  அவர்களின் முகத்தோடு உரசுவாள்.

ஆனா இந்த ரெண்டு நாளா வீட்ல இருக்கிறவங்க பிஸியா இருந்ததால வெளியில யாரோடும் விளையாடமுடியலை. வீட்ல இருக்கிறவங்களும் சரியா பேசலை.

வருத்தமாக மீண்டும் மலைகளைப் பார்த்தாள் மொய்லி.

முதன் முதலா மொய்லி மலைகளைப் பார்த்தது இந்த ஊருக்கு வந்தப்போதான். மொய்லி பிறந்தது மணிப்பூர் மாநிலத்துல இருக்கும் மோரேங்குற ஊர்ல. அந்த ஊரு மியான்மர் நாட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் எல்லையில இருக்கு. அந்த ஊரை  குட்டி தமிழ்நாடுன்னு சொல்றாங்க. அங்க பாதிக்குமேல் தமிழ் பேசுற மக்கள்தான் இருக்காங்க. பர்மாவை சுத்திப்பார்க்க வரவங்களுக்கு மொய்லி வீட்ல தமிழ்நாட்டு சாப்பாடு கிடைக்கும். அப்படி சாப்பிடறதுக்கு வந்தவங்கதான் ஜோ அக்காவும், அப்பாவும், அம்மாவும். மியான்மரை சுற்றிப் பார்க்க வந்தவங்க சாப்பிடறத்துக்காக அங்க வந்தாங்க.

அப்போ மொய்லி  பிறந்து  ஒரு மாதம்தான்  ஆகியிருந்தது. மொய்லி கூட பிறந்தவங்க நாலுபேர். நாலுபேர்ல மொய்லிதான் கொஞ்சம் சுறுசுறுப்பாக முதல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தாள். மொசுமொசுன்னு உடம்புப் பூரா வெள்ளைமுடி. துறுதுறுன்னு சாப்பிட வந்தவங்க காலை சுற்றி சுற்றி வந்தவளை முதல்ல கொஞ்சியது ஜோ அக்காதான்.

அவதான் குட்டியா தன்னைப் போல அழகா இருக்கான்னு மொய்லியும் ஜோவை சுத்தி சுத்தி வந்தாள்.

அதைப் பார்த்ததும் “அப்பா! இங்க பாருங்கப்பா மொய்லி  எப்படியிருக்கான்னு அப்படியே முயல் மாதிரி இருக்காப்பா” என்றாள் ஜோ அக்கா.

‘நான் மொய்லியா? ஆமா நான் மொய்லிதான். அப்பொழுதே தனக்கானப் பெயரையும் வைத்துக் கொண்டாள் மொய்லி. ஆனா முதல்ல மொய்லின்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு நான் முயல் மாதிரி இருக்கேன்னு சொல்றா இந்தக்கா?’

கோபத்துடன் லேசா காதை தூக்கினாள் மொய்லி.

அவளின் ரெண்டு காதுகளும் நேரா நிற்பதைப் பார்த்த ஜோ “அப்பா நான் பேசுறது மொய்லிக்குப் புரியுதுப்பா. அவ கேட்கிறா பாருங்க” என்றாள் ஜோ.

“ஆமா எனக்குப் புரியுது. அதனால்தான் எனக்குக் கோபம்” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மொய்லி.

“அவளுக்கு ஏதோ கோபம் போலிருக்குப்பா? அதான் தலையை திருப்பிக்கிட்டா” வருத்தமாக ஒலித்தது ஜோ அக்காவின் குரல்.

‘அட என்னை இப்படி புரிஞ்சிக்கிட்டாளே இந்தக்கா!’

கோபத்தை விட்டு மனதிற்குள் எழுந்த ஆச்சரியத்துடன்  மீண்டும் ஜோ அக்காகிட்டே வந்தவள் அவளையே சுற்றிச் சுற்றி வந்தாள்.

அவள் சாப்பிட்டு வெளியில் செல்லும் போது அவளுக்குப் பின்னாடியே சென்றாள் மொய்லி.

சிறிது தூரம் சென்றதும் ஜோ தான் மொய்லி தங்கள் பின்னால் வருவதை முதலில் கண்டு பிடித்தாள்.

“பா… மொய்லி நம்ம பின்னாடி வராப்பா” உற்சாகமாகச் சொன்னாள் ஜோ.

திருப்பிப் பார்த்த அப்பாவும் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

ஓ… அப்பாவுக்கும் என்னை பிடிச்சுடுச்சு. அப்படின்னு மொய்லியும் நடக்க ஆரம்பிச்சாள். மொய்லிக்கு முன்னால் நடந்தவங்க மோரே மார்க்கெட் முழுவதும் சுற்றினாங்க. கம்பளி, சட்டை, பையின்னு விதவிதமா வெளிநாட்டு பொருட்களா வாங்கினாங்க. அதுவரைக்கும் வீட்டைவிட்டு வெளியே வராத மொய்லியும் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் பார்த்தாள்.

ஆனா விக்கிறவங்க என்ன மொழியில பேசுறாங்கன்னு அவளுக்குப் புரியலை.

“அப்பா அவங்க என்னப்பா பேசுறாங்க?” மொய்லியின் சந்தேகத்தை புரிந்தவளாகக் கேட்டாள் ஜோ.

“அவங்க மைத்தி (meitei) மொழியில பேசுறாங்கம்மா”

அப்பா ஜோ அக்காகிட்டே சொல்லவும் மொய்லியின் சந்தேகமும் தீர்ந்தது.

‘இந்தக்கா ரொம்ப நல்ல அக்கா. எப்படி நானும் அந்தக்காவும் ஒன்னா யோசிக்கிறோம். நான் அவ கூடவே இருந்தா நல்லாயிருக்கும்’

என்னவோ மொய்லிக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனா எப்படி அவங்ககூடப் போறது. ஒரே யோசனையா அவங்க கூடவே நடந்தாள் மொய்லி.

திரும்பவும் ராத்திரி சாப்பிடறதுக்கு மொய்லி வீட்டுக்குத்தான் வந்தாங்க எல்லோரும்.

இதே பாரு. மொய்லி வந்துட்டா என்பதைப் போல மொய்லியின் அம்மாவும், கூடப் பிறந்தவங்களும் ஓடி வந்தாங்க. அம்மா மொய்லியின் முகத்தை மோர்ந்து மோர்ந்து பார்த்தாள். என்னவோ மொய்லிக்கு ஜோ கால்கிட்டேதான் சுத்தணும்னு தோணிச்சு.

மீண்டும் ஜோ பின்னால் நடந்தவளை யாரும் தடுக்கவில்லை. அதனால் உற்சாகமாக அவர்களுடன் நடந்தாள்.

வழக்கம்போல் ஜோதான் மொய்லி வருவதைக் கண்டுபிடித்து மொய்லியை நாம கூட்டிக்கிட்டுப் போவோம்னு அப்பாவிடம் கோரிக்கை வைத்தாள்.

அப்படித்தான் காடு, மலை, அருவி எல்லாம் தாண்டி ஒரு கார் பயணத்துல இம்பால் நகரத்திற்குள் வந்தாள் மொய்லி.

வந்த நாள்ல இருந்து பாசமா இருந்தவங்க இப்படி பேசாம இருந்தா கோபம் வருமா வராதா? அப்படியே வருத்தமா சுவரோரமா சாய்ந்து கொண்டாள் மொய்லி.

இனி அம்மா சாப்பாடு கொடுத்தாக் கூட சாப்பிடக் கூடாது. எப்பவும் என்னை புரிஞ்சுக்குற ஜோ அக்கா கூட துரத்துறா. அவ கூட கா. மனதிற்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டே படுத்துக் கொண்டாள் மொய்லி.

ஆனால் கண்கள் மட்டும் ஜோ எப்போ தன்பக்கம் திரும்புவாளென பார்த்துக் கொண்டே இருந்தது.

இப்படியே மேலும் ஒரு நாள் கழிந்தது.

மறுநாள் காலையில் வேகமாக மொய்லியை எழுப்பினாள் ஜோ.

“மொய்லி மொய்லி எழுந்திரு நாம ஊருக்குப் போறோம்” என்றாள்.

ஊருக்குப் போறோமோ எங்கப் போறோம்? ஒ… அதுக்குத்தான் மூணு நாளா இந்த ஏற்பாடா? நான்தான் இவங்களை தப்பா நினைச்சுட்டேன். அப்படி நினைச்சது தப்பு தப்புன்னு தலையில் அடித்துக் கொண்ட மொய்லி ஜோ அக்கா பின்னாலேயே சென்றாள்.

வழக்கமான உற்சாகத்துடன் நாலு மாடிகளையும் தாவித் தாவி நடந்தவளின் வால் சற்று வேகமாகச் சுழன்றது.

கீழே வந்ததும் ஜோவுடன் படிக்கும் எல்லா அக்காக்களும் நின்றிருந்தார்கள். அவ்வளவு பாசமாக ஜோவைக் கட்டிப் பிடித்தவர்கள் மொய்லியையும் தடவிக் கொடுத்தார்கள்.

“ஐ மிஸ் யூ. ஐ மிஸ் யூ” அப்படின்னு கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். அப்படினா என்ன அர்த்தம்.

மொய்லி நினைக்கும்போதே “உன்னை திரும்ப எப்போ பார்ப்பேன் மினி”   என்றாள் ஜோ அக்கா. இன்னொரு தமிழ் அக்காவிடம்.

‘அட மிஸ் யூன்னா இதான் அர்த்தமா?  நானும் மிஸ் யூ’ என்பதைப் போல எல்லோரையும் சுற்றி சுற்றி வந்த மொய்லியுடன் காரில் ஏறினார்கள் எல்லோரும்.

திரும்பவும் பயணம் துவங்கியது. மறுபடியும் மோரேவுல இருந்து வந்த மாதிரி காடு, மலை, அருவி எல்லாம் தாண்டி கார் போய்க்கிட்டே இருந்தது. ஒரு நாள் இருக்குமா? தெரியலை. ஆனா சொகுசா ஜோ அக்காவின் மடியில கொஞ்ச நேரம், அம்மாவோட மடியில கொஞ்ச நேரம்னு பயணம் நீடிச்சிட்டே இருந்தது.

‘அட அப்படி என்ன ஊருக்குத்தான் போறோம். இந்த ஜோ அக்கா ஏன் இவ்வளவு அமைதியா வரா. இப்படி எவ்வளவு நேரம்தான் அடைஞ்சே கிடக்கிறது’

லேசாக சுணக்கம் வந்தது மொய்லிக்கு.

“பா… மிசோரம் எங்கப்பா இருக்கு. இன்னும் எவ்வளவு தூரம்தான் போறது?”

‘இதோ வந்துட்டாளே! வந்துட்டாளே! என்  ஜோ அக்கா கேள்வியுடன்’

அம்மாவின் மடியிலிருந்த மொய்லி ஆர்வமுடன் காதைத் தூக்கிக்கொண்டாள்.

“அதோ தெரியுது பார். அந்த மலை உச்சியில்தான் மிசோரம் மாநிலத்தின் தலைநகரம் இருக்கு”

“அதுக்கு என்ன பேர் அப்பா?”

“அய்ஜால்” என்றார் அப்பா.

“அந்த ஊர் நல்லா இருக்குமா அப்பா?”

“ரொம்ப, ரொம்ப நல்லா இருக்குமாம் ஜோ. அந்த ஊர்ல வீடுங்க எல்லாம் மலைச் சரிவுலதான் இருக்குமாம். ஒரு வீட்ல இருந்து இன்னொரு வீட்டுக்குப் போக நிறைய படிகள் இருக்குமாம்.”

அதுவரை அமைதியாக இருந்த அம்மா மொய்லியின் உடலை வருடியபடியே பேசினார்.

அப்போ எனக்குச் ஜாலிதான். நிறைய படிகள் தாவித் தாவி போகலாம். நினைத்துக் கொண்ட மொய்லி அம்மாவின் மடியில் துள்ளினாள்.

“ஷ். அமைதியா இரு மொய்லி. இன்னும் வீடு வரலை”

அம்மா அதட்டினார். எப்பவும் அம்மாவிடம் கொஞ்சம் பயம்தான் மொய்லிக்கு. அப்படியே அடங்கி உட்கார்ந்தாள்.

மெல்ல மெல்ல கார் அப்பா கை காட்டிய உச்சிக்குச் சென்றது. நீண்ட பாதையெல்லாம் இல்லை. சுத்தி, சுத்தி, சுத்தி… மொய்லியால் நினைக்கக் கூட முடியவில்லை. அத்தனை சுற்றுகளைக் கடந்து ஒரு வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது வண்டி.

ஜோ முதலில் இறங்க அவளுக்குப் பின்னாலேயே தாவி இறங்கினாள் மொய்லி.

உடலை ஒரு குலுக்கு குலுக்கி நிமிர்ந்தாள்.

“வாவ்…”

உற்சாகத்தில் ஜோ அக்கா கத்தியக்குரல் மட்டுமே கேட்டது மொய்லிக்கு. திடீர்னு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் மாயமாய் மறைந்து போயினர். அனைவரையும் மூடிக் கொண்டு புகையாக எதுவோ அவர்களைத் தடவிச் சென்றது. சில நொடிகளுக்குள் மறைந்தும் போனது. கடந்து போன அது  லேசாக பனித்தூறுவதைப் போலவும் இருந்தது. உடல் சில்லென்று சிலிர்த்து அடங்கியது. பயத்தில் ஜோ அக்காவைத் தேடினாள் மொய்லி.

சில நொடிகளில் மீண்டும் அக்கா தெரிந்தாள்.

‘அட அக்கா இங்கேதான் இருக்கிறாள். அப்போ எங்களை எது மறைச்சது?’

“எப்பவும் மேகம் இவ்வளவு கீழே போகுமா அம்மா?” வழக்கமான தனது கேள்வியால் மொய்லியின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள் ஜோ அக்கா.

‘ஓ… இதுதான் மேகமா. இந்த ஊர்ல எப்பவும் இப்படித்தான் இருக்குமா? இன்னும் இந்த புது ஊர்ல என்னென்ன இருக்கும்?’

தனது சந்தேகத்திற்கு விடைகொடுக்கும் ஜோ அக்காவின் கேள்விகளுக்காக ஆர்வமாகக் காத்திருந்தாள் மொய்லி.

*****

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments